அண்ணா உருவாக்கிய கூட்டணி தந்திரம்
ஆதனூர் சோழன்
1962 தேர்தலிலேயே காங்கிரஸை திமுக வீட்டுக்கு அனுப்பியிருக்கும். ஆனால் அண்ணாவின் கூட்டணி முயற்சி கைகூடாமல் போயிற்று. ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடனும், கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அண்ணா கூட்டணி குறித்து பேசினார். ஆனால், ராஜாஜியின் சுதந்திரா கட்சியை தங்களால் ஆதரிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறிவிட்டது.
இதையடுத்து திமுக தனித்தே களத்தைச் சந்திக்க முடிவு செய்தது. சட்டமன்றத்திற்கு திமுக 142 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்தது. நாடாளுமன்றத்திற்கு 18 இடங்களில் அது வேட்பாளர்களை நிறுத்தியது.
இவர்கள் தவிர, சட்டமன்றத்திற்கு 3 ஆதரவாளர்களையும், நாடாளுமன்றத்திற்கு 2 ஆதரவாளர்களையும் ஆதரிக்க முடிவு செய்தது.
திமுக போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸை எதிர்க்கும் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது.
1957 தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக உறுப்பினர்களையும் தோற்கடிக்க காங்கிரஸ் திட்டமிட்டது. பஸ் முதலாளிகள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள், பெருமுதலாளிகள் என்று வேட்பாளர்களை காமராஜ் அறிவித்தார்
திமுகவுக்கு பெரியாரின் எதிர்ப்பு வலுவாக இருந்தது. பத்திரிகைகள் அனைத்தும் காங்கிரஸையே ஆதரித்தன.
முதல்முறையாக காங்கிரஸ் அரசு தனது சாதனைகளை விளக்கும் வகையில் பிரச்சாரப் படம் ஒன்றையும் எடுத்து மாநிலம் முழுவதும் திரையிட்டுக் காட்டியது.
இதையெல்லாம் மீறித்தான் திமுக, தான் போட்டியிட்ட 142 தொகுதிகளில் 50 தொகுதிகளை தனித்தே கைப்பற்றியது. சுதந்திரா கட்சி 94 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களையும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 68 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களையும் பெற்றன.
இந்த மூன்று கட்சிகளில் திமுக 27.10 சதவீதமும், சுதந்திரா கட்சி 7.82 சதவீதமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7.72 சதவீதமும் வாக்குகளைப் பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சி 46.14 சதவீதம் வாக்குகளை பெற்றது. திமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் காங்கிரஸை 1962லேயே தோற்கடித்து இருக்கலாம் என்பதே எதார்த்தமான உண்மையாக இருந்தது.
மக்களைப் பாதிக்கும் அரசாங்கத்தை விரட்டி அடிப்பதைக் காட்டிலும் சொந்த பலன்களே முக்கியமாக கம்யூனிஸ்ட்டுகள் அப்போதே கருதியிருக்கிறார்கள்.
போட்டியிட்ட முதல் தேர்தலில் வெற்றிபெற்ற 15 திமுக வேட்பாளர்களில் கலைஞர் மட்டுமே இரண்டாவது முறை வெற்றிபெற்றார். அதேசமயம், முதல் தேர்தலில் தோல்வியடைந்த நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் வெற்றிபெற்றனர்.
இந்தத் தேர்தலில் அண்ணாவை தோற்கடிக்க காங்கிரஸும் பெரியாரும் பொன்முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாக பிரச்சாரம் செய்தார்கள். முத்துராமலிங்கத் தேவர் கடுமையான சொற்களால் அண்ணாவைத் திட்டிப் பிரச்சாரம் செய்தார். எல்லாவற்றுக்கும் மேலாக வாக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அண்ணாவின் தோல்வி அறிவிக்கப் பட்டவுடன் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தேர்தல் முடிவுகளை அறிவதில்கூட ஆர்வம் காட்டுவதை தவிர்த்துவிட்டனர்.
இந்நிலையில்தான் திமுக 50 தொகுதிகளில் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 18 திமுக வேட்பாளர்களில் 7 பேர் வெற்றிபெற்றனர்.
அண்ணா தனது தோல்வியால் கழகத்தினர் யாரும் வருத்தப்படத் தேவையில்லை என்று நீண்ட அறிக்கை வெளியிட்டார். முன்பைவிட சட்ட மன்றத்தில் திமுகவின் பணி செம்மையாக நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
திமுக சார்பில் சென்னையில் நடந்த வெற்றிவிழாவில் அண்ணா இப்படி பேசினார்.
“நான் வெளியே நிற்கிறேன். என் அணிவகுப்பு உள்ளே செல்கிறது. தலைவன் இல்லாமல் அணிவகுப்பு அமைக்க முடியும். அணிவகுப்பு இல்லாத தலைவன் இருக்க முடியாது!”
இதைத் தொடர்ந்து, திமுக சட்டமன்றக் கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தலைவரா கவும், கலைஞர் கருணாநிதி துணைத் தலைவரா கவும், கே.ஏ.மதியழகன் செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். மக்களவை குழுத் தலைவராக நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்தவுடன் சட்டமன்ற மேலவைக்கும் மாநிலங்களவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அண்ணாவும் திமுக தயவில் சுதந்திரா கட்சி வேட்பாளரும் வெற்றிபெற்றனர்.
சட்டமன்ற மேலவைக்கு திமுக சார்பில் எம்ஜியாரும், திமுக ஆதரவுடன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் வஹாபும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
திராவிடநாடு கோரிக்கையை மக்களவையில் பேசிய பிரதமர் நேரு கடுமையாக விமர்சித்தார். திமுகவை பிரிவினைவாத கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
அந்தப் பேச்சின் விவரத்தை பெற்ற அண்ணா மாநிலங்களவையில் நேருவுக்கு பதில் அளித்து பேசினார்.
“இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும். இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்துவிடும் என்று நேரு கருதுகிறாரா?
இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்துவிடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால், வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாக காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது” •
https://drive.google.com/file/d/1foGQjga7sPJWTB5vouElczeGIajhkhSG/view?usp=sharing
