திராவிட சிசு உதயநிதி
ஆதனூர் சோழன்
திராவிட சிசு என்று திருஞான சம்பந்தனை ஆதி சங்கரன் எதுக்காக கூப்பிட்டானோ நமக்கு தெரியாது.
ஆதிசங்கரனும் யோக்கியனில்லை. திருஞானசம்பந்தனும் யோக்கியனில்லை.
சம்பந்தனுக்கும் சங்கரனுக்கும் உள்ள ஒரே தொடர்பு என்ன என்று நமக்கு தெரியும்.
சங்கரன் ஆரியன். சம்பந்தன் சூத்திரன். ஆரியனின் ஆதிக்கம் நீடிக்க சமணர்களை கழுவேற்றிய சம்பந்தன் என்று சொல்லலாம்.
ஆரியன் எப்போதும் தனக்கு சாதகமான சூத்திரனைக் கொண்டே தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும் தந்திரத்தை கையாள்வான்.
அந்தத் தந்திரம்தான் இன்று வரை தொடர்கிறது. தந்தை பெரியார்தான் ஆரியனின் தந்திரத்தை சரியாக புரிந்து திராவிடனின் எதிரி ஆரியன் என்று அடையாளப் படுத்தினார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்கில் நுழைந்த ஆரியன், இங்கே தழைத்துச் செழித்திருந்த தமிழை விழுங்க முனைந்தது. ஆனால், சமணப் பள்ளிகள் தமிழைக் காப்பாற்றி, தமிழ் மொழியையும் சமூக நீதியையும் இலக்கியமாக வடிக்க உதவியது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தனது சதியை முறியடித்து தமிழை தழைத்தோங்கச் செய்த, சமணர்களை ஒழிக்க தனக்கேத்த சூத்திர அடிமையை எதிர்நோக்கி இருந்தது ஆரியம்.
ஆம், ஆரியத்துக்கு துணையாக கூன் பாண்டியனும், திருஞானசம்பந்தனும் கிடைத்தார்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று மானுட நீதி போதித்த தமிழை, மீண்டும் உயிர்களை நான்கு வண்ணங்களாக பிரித்தது ஆரியம்.
அந்த நான்கு வண்ணங்களை ஆயிரம் சாதிப் பிரிவுகளாக்கி, எல்லோருக்கும் உயர்ந்ததாக தன்னை ஆக்கிக் கொண்டது ஆரியம்.
சுமார் 1300 ஆண்டுகள் திராவிடம் சந்தித்த இழிவைத் துடைத்து, சாதிகள் கடந்து மனுநீதியை ஒழித்து சமூக நீதியைக் காக்கும் முயற்சி தொடங்கியது.
உடல் வேர்க்காமல் நோகாமல் நுங்கு சாப்பிட்டு வந்த ஆரியத்தை வேரறுக்கும் முயற்சி தொடங்கியது. ஆனாலும், ஆரியக் கைக்கூலிச் சூத்திரர்களே அந்த முயற்சிக்கு எதிராக நின்றனர்.
எல்லாவற்றையும் கடந்து, இழந்த எல்லாவற்றையும் முழுமையாக மீட்க முடியாவிட்டாலும், கல்வி உரிமையை மீட்பதில் ஓரளவு வெற்றி கிட்டியது.
ஆம். கல்வியே தாங்கள் அதுவரை இழந்தவற்றை அறிய உதவும் என்பதை தலைவர்கள் உணர்ந்தார்கள். சுயமரியாதை உணர்வு பெற கல்வி அறிவே முக்கியம் என்று உணரவைத்தனர்.
கல்வியால் பெற்ற அறிவு தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்தது. எல்லாக் காலத்தையும் போலவே, பழமையை நேசிக்கும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டபடியே இருந்தது.
சாதி ஆணவம் காலந்தோறும் ஏதேனும் ஒருவகையில் தலைதூக்கியபடியே இருந்தது. அந்த சாதி ஆணவத்தை ஆரியம் ஊதிப் பெரிதாக்கியது.
கல்வி வளர்ச்சி சாதிகளை ஒழித்துவிடும் என்பதை அறிந்து கல்வியை சாதி மயமாக்கும், வர்க்கமயமாக்கும் முயற்சிகளை ஆரியம் தொடர்ந்து மேற்கொண்டது.
தகுதி, தரம் என்று தனது வசதிக்கு ஏற்றபடி கல்விக் கொள்கையை வகுத்தது. தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகளாய் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் அந்தக் கொள்கையை தடுத்து காவல் காத்தனர்.
தமிழ்ச் சமுதாயத்தை அறிவுச் சமுதாயமாக உருவாக்கிய அவர்களுடைய வழியில் மு.க.ஸ்டாலினும் ஆரியத்தை எதிர்த்து உறுதியான போரைத் தொடர்ந்தார்.
கலைஞருக்கு துணையாக உழைப்பு, உழைப்பு என்று இயக்கத்தை வலுப்படுத்த உதவிய ஸ்டாலினைப் போல, அவருக்கு துணையாக வந்து சேர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அரசியல் ஆசையே இல்லாமல் சினிமாத் துறையில் இயங்கிக் கொண்டிருந்தார் அவர்.
2016 சட்டமன்றத் தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் தனக்குப் பிறகு தனது குடும்பத்தில் யாரும் கட்சிப் பொறுப்புக்கு வரமாட்டார்கள் என்று உறுதி அளித்தார்.
அந்தத் தேர்தலில்தான் திமுக வெற்றிபெற்றால் மதுக்கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று கலைஞர் உறுதி அளித்தார்.
இந்த இரண்டு உறுதிமொழிகளுக்குமே மக்கள் செவி சாய்க்கவில்லை. ஆனால், தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக திமுக வெற்றிபெற்றது.
2016 தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன்பிறகு தமிழ்நாட்டில் ஒன்றிய பாஜக அரசு அதிமுகவை அடிமைப்படுத்தி நடத்திய கூத்து கொஞ்சநஞ்சமல்ல.
திமுகவில் மக்கள் செல்வாக்கு மிக்க பிரச்சாரகர்கள் இல்லாத நிலையில்தான் உதயநிதியை பயன்படுத்த திமுக தலைமை முன்வந்தது.
தலைவராக மு.க.ஸ்டாலின் தயங்கினாலும், கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள். அதையடுத்தே உதயநிதி 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்கப்பட்டார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய பிரச்சாரத்துக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்தனர். திமுக கூட்டணி அந்தத் தேர்தலில் தமிழ்நாடு புதுவை மாநிலங்களின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியையும், உதயநிதிக்கு கட்சியினரும், மக்களும் அளித்த ஆதரவும் அவருக்கு இளைஞர் அணிப் பொறுப்பை அளித்தது.
அவர் இளைஞர் அணி பொறுப்பை ஏற்றதும், அந்த அணி அதுவரை இல்லாத அளவுக்கு சுறுசுறுப்படைந்தது.
ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு, மாநிலங்களின் உரிமைப் பறிப்பு முயற்சி, சனாதன ஆதிக்கம் ஆகியவற்றுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த விதம், கலைஞரை எதிரொலித்தது.
சங்கிகளும், ஒன்றிய அமைச்சர்களும் விடுத்த மிரட்டல்களை அவர் இடதுகையால் ஒதுக்கித் தள்ளினார். மிரட்டல்களுக்கும் வழக்குகளுக்கும் அஞ்சி தனது கருத்தில் பின்வாங்கமாட்டேன் என்று உறுதியாக நின்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒற்றைச் செங்கல்லை காட்டி மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தார். அவரும் சேப்பாக்கம் எம்எல்ஏ ஆனார். அதுமட்டுமின்றி, தனது தந்தைக்குக் கிடைக்காத அமைச்சர் பதவியையும் துணை முதலமைச்சர் பதவியையும் வெகுவிரைவில் பெற்றார்.
மு.க.ஸ்டாலின் கட்சிக்காக உழைத்து கலைஞரிடம் மட்டுமின்றி, கட்சியிடமும் அங்கீகாரம் பெற்று பொறுப்புகளை படிப்படியாக பெற்றார்.
ஆனால், உதயநிதிக்கு எல்லாம் எளிதாக கிடைத்துவிட்டது. ஸ்டாலின் உழைத்து பொறுப்புகளுக்கு வந்தார் என்றால், உதயநிதி தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்.
திமுக வரலாற்றில் அவர் நடத்திய இளைஞர்களுக்கான பாசறைப் பயிற்சிகளும், புதிய பேச்சாளர் படையும், அறிவுத் திருவிழா கருத்தரங்க நிகழ்வுகளும், முற்போக்கு புத்தகக்காட்சி முயற்சியும் திராவிட இயக்கத்தை இந்த நூற்றாண்டிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கி இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.
அவருடைய செயல்பாடுகளுக்கு பாஜக சங்கிகளும், பாஜகவின் அடிமைச் சேவகர்களும் கதறுவதே இதற்கு சாட்சியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்கள் இலக்கியத்தையும் சமூக நீதியையும் பாதுகாத்த சமணர்களை ஒழிக்க ஞானசம்பந்தன் உதவியாக இருந்தான். அதற்காக, ஆதிசங்கரன் தனது அடிமைச் சூத்திர சங்கியான திருஞான சம்பந்தனை திராவிட சிசு என்று அழைத்தான்.
ஆனால், திராவிட இயக்கத்தையும், தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சியையும், விளையாட்டுத் துறை எழுச்சியையும் பாதுகாக்க வந்த உதயநிதியை நாம் திராவிட சிசு என்று அழைப்போம். •
https://drive.google.com/file/d/1CWG9lo0eXwBgBiU_-GG68zK1OI_ehqbT/view?usp=sharing
