காகித ஆயுதம் மூன்றாவது இதழ்

 


தடைகளை உடைத்த முதல் பெண்

ஆதனூர் சோழன்

1870களின் கடைசி ஆண்டுகளாக இருக்கும். சந்திரம்மாள் என்ற ஒரு 11 வயதுச் சிறுமியை தேவதாசியாக அர்ப்பணிக்கும் விழா நடந்தது. 

அர்ப்பணிக்கும் விழா என்பது, கோவிலுக்கு ஆடுகளையும் மாடுகளை நேர்ந்து விடுவதைப் போல, பெண்களை நேர்ந்துவிடுவதுதான். 

அதாவது, அந்தப் பெண்கள் பொதுச் சொத்தாக கருதப்படுவார்கள். திணவெடுத்த ஆண்களுக்கு உணவாக வேண்டும்.

அந்த விழாவில் அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய எஸ்.நாராயணசாமி அய்யர் கலந்துகொண்டார்.

அந்த விழா முடிந்ததும், அவரிடம் வந்தார் சிறுமி சந்திரம்மாள். 

“தயவுசெய்து என்னை இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சினார்.

சந்திரம்மாள் மீது 30 வயது நாராயணசாமி அய்யர் இரக்கம் கொண்டார். இரக்கம் என்றால், அவளையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். 

அந்தக் காலத்தில் பால்ய விவாகம் பெரிய விஷயமில்லை. ஆனால், நாராயணசாமி அய்யரின் குடும்பத்துக்கு இது அதிர்ச்சியான விஷயம் ஆகியது. ஆம், தேவதாசிகளிடம் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால், தேவதாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வது பாவம் என்று கருதினார்கள்.

எனவே, நாராயணசாமி அய்யரை குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தார்கள். அவருக்கும் சந்திரம்மாளுக்கும் 1886ஆம் ஆண்டு பிறந்தவர்தான் முத்துலெட்சுமி.

சிறுவயது முதலே, தந்தை வழி குடும்பத்துடன் ஒட்டாமல் வாழ்ந்தார் முத்துலெட்சுமி. தாய் சந்திரம்மாளின் தேவதாசி குலத்தைச் சேர்ந்த குடும்பங்களுடன் நெருங்கி வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிறுவயதிலேயே தேவதாசிக் குலப் பெண்களின் பிரச்சனைகளை முத்துலெட்சுமி உணர்ந்தார். அதுவரை தேவதாசிப் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் இல்லை. சொல்லப்போனால், பெண்களை பள்ளிக்கு அனுப்பும் பழக்கமே இல்லை.

நாராயணசாமி அய்யர் தனது மகள் முத்துலெட்சுமியை பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தார். கற்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்த ஆசிரியர்கள், பள்ளிக் கல்விக்கு தொடர்பில்லாத பல பாடங்களையும் அவருக்கு கற்பித்தனர்.

முத்துலெட்சுமி பருவம் அடைந்ததும் பள்ளியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருந்தாலும் வீட்டிலேயே அவருக்கு கல்வி கற்பித்தல் தொடர்ந்தது. 

இந்தச் சமயத்தில் அந்தக் கால வழக்கப்படி, அவருடைய தாயார் சந்திரம்மாள், முத்துலெட்சுமிக்கு மணமகன் தேடத் தொடங்கினார். ஆனால், முத்துலெட்சுமியின் விருப்பம் வேறாக இருந்தது. ஆணுக்கு பெண் அடிமையாக இருப்பதை அவர் விரும்பவில்லை. பெண்களுக்கு கல்வி தேவையில்லை. ஆண்களுக்கு மட்டுமே கல்வி என்று இருந்த நடைமுறையை அவர் எதிர்த்தார்.

வீட்டில் இருந்தபடியே படித்து மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றிபெற்றார். பின்னர் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் செய்தார். ஆனால், அவருடைய விண்ணப்பத்தை கல்லூரி முதல்வரும், மாணவர்களின் பெற்றோரும் எதிர்த்தனர்.

அவர் வகுப்பில் இருந்தால் மாணவர்களின் கவனம் சிதறும் என்று காரணம் சொன்னார்கள். இந்தக் காரணங்களை புதுக்கோட்டை மகாராஜா ஏற்கவில்லை. அவர் ஓரளவு கல்வி அறிவு பெற்றிருந்தார். எனவே, எதிர்ப்புகளை ஒதுக்கிவிட்டு, முத்துலெட்சுமியை கல்லூரியில் சேர்த்து, உதவித் தொகையும் வழங்கி உத்தரவிட்டார்.

இருந்தாலும், கல்லூரி வகுப்பில் மூன்று மாதங்கள் வரை முத்துலெட்சுமிக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே திரை போட்டார்கள். வகுப்பு முடிந்ததும் முதலில் முத்துலெட்சுமி வெளியேறிய பிறகே மாணவர்கள் வெளியேறினார்கள்.

பட்ட வகுப்பை வெற்றிகரமாக தேறினார். உடனே, அவர் ஆசிரியராக முடியும் என்று தந்தை நாராயணசாமி அய்யர் கூறினார். ஆனால், முத்துலெட்சுமி டாக்டராக விரும்பினார். சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண்ணாக அவர் மகாராஜாவின் உதவித் தொகையுடன் நுழைந்தார். அது 1907 ஆம் ஆண்டு.


1912ஆம் ஆண்டு ஏழு தங்கப் பதக்கங்களுடன் டாக்டர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.

அவர் மருத்துவ மாணவியாக இருந்தபோதே, குழந்தையை பெற்றெடுத்த அவருடைய உறவினர் இறந்தார். தேவதாசியான அந்த பெண்ணின் குழந்தையை பராமரிக்க யாரும் இல்லை. எனவே, திருமணம் ஆகாத நிலையிலேயே, அந்தக் குழந்தையை முத்துலெட்சுமி பராமரித்தார்.

பணிக்காலத்தில், அன்னிபெசன்ட், சரோஜினி நாயுடு உள்ளிட்ட பெண் ஆளுமைகளை சந்திப்பதை விரும்பினார். இந்தியா பத்திரிகையில் எழுதவும், ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்தார்.

பின்னர் சுந்தரரெட்டியை திருமணம் செய்தார். எப்போதும் தன்னைச் சமமாகவும், தனது விருப்பங்களை மறுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் 28 வயதில் 1914ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.


விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க அவரை மகாத்மா காந்தி அழைத்தார். ஆனால், பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைப்பதையே விரும்புவதாக கூறி மறுத்துவிட்டார். 

1926 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தபோது, 1930ஆம் ஆண்டு தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தார். அவருடைய தீர்மானத்தை காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் எதிர்த்தார். தெய்வத்துக்கு தொண்டு செய்வதற்கான ஏற்பாடு என்று தேவதாசி முறையை ஆதரித்து சத்தியமூர்த்தி பேசினார்.

அவருடைய பேச்சுக்கு எதிராக, தந்தை பெரியாரின் ஆலோசனையைப் பெற்று முத்துலெட்சுமி இப்படி பேசினார்ஞ்

“தெய்வத்துக்கு தொண்டு செய்யும் பணி என்றால், பல நூற்றாண்டுகள் எங்கள் பெண்கள் அந்த பணியை செய்துவிட்டார்கள். இனி உங்கள் பெண்கள் அந்தப் பணியை செய்யட்டும்” 

இப்படி முத்துலெட்சுமி பேசியதும் சத்தியமூர்த்தியும் மற்ற உறுப்பினர்களும் வாயை மூடி அமர்ந்தனர்.

ஆனாலும், 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதிதான் இந்த தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.

சட்டமன்றக் குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணாகவும் இருந்தார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்திய மகளிர் சங்கத்தின் தலைவியாக பொறுப்பு வகித்தார். ஆதரவற்ற பெண்களுக்கும், படிக்கும் பெண்களுக்கும் இலவச உணவு மற்றும் தங்கும் வசதியுடன் அவ்வை இல்லத்தைத் தொடங்கினார். அன்றைக்கு இருந்த விடுதிகள் அனைத்தும் சாதி அடிப்படையில் இயங்கின. ஆதரவற்ற பெண்களுக்கு அவை இடம் தரவில்லை. எனவே, முத்துலெட்சுமி அவ்வை இல்லத்தின் மூலம் அவர்களுக்கு தங்கும் இடத்தை அளித்து, கல்வியை வழங்க ஏற்பாடு செய்தார்.

அன்றைக்கு இருந்த விபச்சார விடுதிகளை ஒழிக்கவும், அந்த விடுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் அவ்வை இல்லம் இயங்கியது.

முத்துலெட்சுமியின் முயற்சியால் இஸ்லாமிய பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும் விடுதி திறக்கப்பட்டது. திருமணத்துக்கான வயதை ஆண்களுக்கு 21 ஆகவும், பெண்களுக்கு 16 ஆகவும் உயர்த்த அவர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை அவருடைய முயற்சியால் 1952ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அன்றைய பிரதமர் நேரு அதற்கான அடிக்கல்லை நாட்டினார். இன்றைக்கு இந்த மருத்துவமனையில் ஆண்டுக்கு 1 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.

பல சிறப்புகளைப் பெற்ற டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி 1968ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

https://drive.google.com/file/d/1nDTnO1EPhi-GRRtFE-Mt4fv7dwqbMb5q/view?usp=sharing


Previous Post Next Post

نموذج الاتصال