தீபமா, தீப்பந்தமா?
ராஜா ராஜேந்திரன்
சற்றே பிசகியிருந்தால், தீர்ப்பைக் கண்டு மிரண்டிருந்தால், தீபமேற்ற பணிந்திருந்தால் அது காட்டுத்தீயாய் பெருகி, எரிமலையாய்க் குமுறி, நாட்டையே பெருங்கொதிப்பில் ஆழ்த்தியிருக்கும் !
முதலமைச்சரின் திடமான உள்ளத்தால், மதுரை ஆட்சியரின் துணிவால், மதுரை நகரக் காவல்துறை ஆணையரின் நெஞ்சுறுதியால், இந்த அவலங்களேதும் நிகழாமல், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவே தன் பெயரைத் தக்கவைத்துக் கொண்டது. சார்ந்தோர்க்கு நம் நெகிழ்ச்சியான நன்றியும், மனம் திறந்த பாராட்டுகளும் உரித்தாகுக !
கார்த்திகை தீபமேற்றும் நிகழ்ச்சி திருப்பரக்குன்ற மலையில் நிகழ்ந்ததே இல்லையா ?
இப்போதுதான் முதன்முறையாக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்து அதை நிகழ்த்தவிருந்தனரா ?
இல்லை.
காலங்காலமாக ஒரு கார்த்திகை தவறாமல், அண்ணமலையாருக்கு அண்ணாமலை மீது கார்த்திகை தீபமேற்றும் அதே பொழுதுகளில், திருப்பரங்குன்றத்திலும் உச்சிப்பிள்ளையார் கோயிலருகே தீபமேற்றப்படும் !
திருப்பரங்குன்றின் அடிவாரத்திலிருந்து அத்தனை முருகபக்தர்களும் அதைக் கண்ணார ரசிப்பார்கள். அருள் பெறுவார்கள். தீபதரிசனம் முடிந்ததும் முருகனையும் தொழுது பரவசத்துடன் அவரவர் வீடு செல்வார்கள்!
இதுதான் வாடிக்கையாக நடப்பது. நம்புங்கள், இம்முறையும் அப்படியேத்தான் நிகழ்ந்தது, இதில் எந்தப் பிசகும் ஏற்படவில்லை !
பிறகேன் தீவிர இந்துத்துவர்கள் மட்டும் தங்களைத் திராவிட அரசு வஞ்சித்துவிட்டதாய் ஓயாமல் புலம்பி வருகின்றனர்?
ஆம். புலம்பவில்லை. கதறித் துடிக்கின்றனர். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு தமிழக அரசைச் சபிக்கின்றனர். ஆட்சியாளர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், நாடு கடத்த வேண்டும், ஆட்சியைக் கலைக்க வேண்டும், நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் நீதியை அவமதித்துவிட்டனர் என்று அரற்றி, அவர்கள் அலறுவதைப் பார்க்க சிரிப்பு சிரிப்பாகத்தான் வருகிறது !
சாத்தான் வேதம் ஓதினால் எப்படி இருக்கும் என்பதை இவர்கள் நீதி, சட்டம் பற்றி பேசும்போது எளிதாய் தரிசிக்க முடிகிறது !
பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய போது இவர்கள் மதிக்காத தீர்ப்புகள்;
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக் கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது இவர்கள் அதைச் செயல்படுத்த விடாது விளைவித்த கலவரங்கள், பெண்கள் மீதான தாக்குதல்கள்;
காவேரி நீரை வறட்சி காலங்களிலும் முறையாக தமிழ்நாட்டிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற உத்தரவுகளை ஒருபோதும் நிறைவேற்றக் கூடாதெனக் கொக்கரித்தவர்கள்;
இன்று ஒரு நீதிபதி தன்னிச்சையாக, முழுமையான உள்நோக்கத்துடன், திட்டமிட்டச் சதியை அரங்கேற்ற ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை மட்டும் அரசு நிறைவேற்றிவிட வேண்டுமாம்?
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதியரசர் திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் பகிரங்கமாக ஆர்.எஸ்.எஸ் விழாக்களில் பங்குகொண்டு சனாதனக் கொள்கைகளை தீவிரமாக ஆதரித்து பேசுபவர் ஆவார்.
இவர் அளித்த பல தீர்ப்புகள் சர்ச்சைகளை உண்டாக்கின. குறிப்பாக பார்ப்பனர்கள் உண்ட எச்சில் இலைகளின் மீது பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதில் தவறில்லை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதியாது ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். அதற்கு உடனடியாக நீதிமன்ற அமர்வு தடை விதித்தது!
பொதுவாக இத்தகைய படுமூட நம்பிக்கைச் சடங்குகள் கர்நாடகாவில்தான் அதிகமுண்டு. இங்கு குறைவு. இங்கும் அதை நிலைநாட்டத் துடித்த வகையில் சுவாமிநாதன் முற்போக்குவாதிகளால் பெரிதாக விமர்சிக்கப்பட்டார்!
ஆனால் நீதியரசர் அதைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக சங்கி பரிவார்களில் அவர் மாபெரும் நாயகனாக வர்ணிக்கப்பட்டார். அந்தப் புகழ்போதை அவரை மயக்கிவிட்டது!
எனவேதான், ஒரு நில அளவைக் கல்லைக் காட்டி, இதன்மீது தீபமேற்றுவதே ஆயிரம் கால அய்தீகம் என்றொருவர் வழக்கு போட்டவுடன் அதைக் கள ஆய்வு செய்கிறேன் பேர்வழியென மனுதாரருடன் மலை ஏறினார் சுவாமிநாதன் !
அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் நீதிபதிகள் இப்படி களத்தில் குதிப்பதுண்டு. அரசிடமே போதுமானத் தரவுகள் கிட்டிவிடும் போது, இவர் ஏன் அரசை நம்பாமல் மலை ஏற வேண்டும் ?
அதற்கான விடைகள்தான் பின்னாட்களில் நமக்கு கிட்டின!
சுவாமிநாதன் நவம்பர் 21 அன்று மலைமீதேறி இப்படி ஆராய்ந்துக் கொண்டிருந்தபோது, ஒரு யுட்யூபர் மலை மீது ட்ரோனை போலிஸ் அனுமதியின்றி பறக்கவிட, அவர் கைது செய்யப்பட்டார். ட்ரோனும், அவருடைய பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பின்னரே மக்களுக்கு சுவாமிநாதன் இதில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்றே புரியவந்தது !
வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடம்தான் மலை உச்சி என்றும், அங்குதான் கொப்பரையை நிறுவி முறையாக தீபமேற்ற முடியுமெனத் தெரிந்தும், இவர் போய் கள ஆய்வு செய்து வந்த சர்வே பில்லர் எனப்படும் நில அளவைக் கல் தீபத்தூண் அல்ல, மாறாக அது இஸ்லாமியர் வந்து வழிபடும் சிக்கந்தர் தர்காவுக்கருகே அமைந்துள்ள ஓர் இடமெனத் தெரிந்தும், இந்த ஆண்டு இந்த நில அளவைக் கல் மீது தீபமேற்ற வேண்டுமென கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார் சுவாமிநாதன்!
திட்டமிடப்பட்டிருந்த நாடகத்தின் ஒரு பகுதியாக இந்தக் காட்சிகள் அரங்கேறிய பின், 2025 டிசம்பர் 3 புதன்கிழமை மாலை ஆறுமணிக்கு சிக்கந்தர் தர்கா அருகே உள்ள நில அளவைத் தூணில் (அவர்கள் அதை தீபத்தூண் என்கின்றனர்) தீபமேற்ற வேண்டும், அதற்கு காவல்துறை மற்றும் ஆட்சி நிர்வாகம் முழு பாதுகாப்பளிக்க வேண்டும் என அதிரடி தீர்ப்பெழுதினார் சுவாமிநாதன் !
நீங்க மட்டும்தான் நாடகம் போடுவீங்களா? நாங்க உருவாகி ஆட்சியைப் பிடிக்க வளர்ந்த இடமே நாடகக் கொட்டகைதானே என்று திராவிட மாடல் அரசு, அந்தத் தீர்ப்பை முழுதாக மதிப்பதைப் போல சில காட்சிகளை அரங்கேற்றியது !
அதன்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கேற்ப தர்காவின் அருகே இருந்த நில அளவைத் தூணில் தீபமேற்ற நெய், காடாத் துணி ஏற்பாடுகளை, அங்கு கூடி கவசம் பாடிக் கொண்டிருந்த மனுதாரர் மற்றும் இந்துத்துவர்கள் முன்னே தீவிரமாக பண்ணிக் கொண்டிருந்தது அரசு !
சரியாய் மாலை ஆறு மணி ஆனதும் அவைகளைக் கொண்டு வழக்கமாக தீபமேற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே தீபமேற்றிவிட்டனர். இப்ப அடுத்து அதுதானே என்று இவர்கள் காத்திருந்த வேளையில், கிளம்புங்க தீபத்திருவிழா முடிஞ்சிருச்சு என்று அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து அகற்ற முயல;
தன் தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா என்று ஹாட்லைனில் காத்திருந்து கவனித்த நீதியரசர், இதைக் கேட்டதும் உக்கிரமானார். ருத்ர தாண்டவமாட தயாரானார். உடனே இன்னொரு தீர்ப்பை எழுதினார்.
சிமிஷிதி வீரர்களுடன் மனுதாரர் ராமரவிக்குமார் மலையேறி அந்தத் தீபத்தை ஏற்றுவார். இதை அரசு அனுமதிக்க வேண்டும். தீர்ப்பை நிறைவேற்றாமல் அவமதித்தால் சார்ந்தோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுப்பேன் என தன் ஆவேசத்தை உத்தரவாக இறக்கினார்!
உடனே 15 க்கும் மேற்பட்ட சிமிஷிதி எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் திருப்பரக்குன்றம் வந்து மலையேற முயற்சித்தனர்.
144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், யாரும் இங்கு கும்பலாக கூட அனுமதி இல்லை, உடனடியாக கலைந்து செல்லவும் மதுரை ஆணையர் திரு.லோகநாதன் நேரடியாக அங்கு வந்து அனைவருக்கும் உத்தரவிட்டார் !
இது நீதிமன்ற அவமதிப்பு, உங்கள் பதவி இதனால் போகுமென இந்துத்துவர்கள் அவரைக் கடுமையாக எச்சரித்த வேளையில் அவர் ஒரு வாக்கியத்தைச் சொன்னார்.
அது அழியாப்புகழ் பெற்றது :
We are not allowing, we will face the consequences
ஆமாம். தன் சொல்படியே இரும்புக் கோட்டையென மலையைக் காத்து நின்றார் அந்த லோகநாதன் மிறிஷி.
இதைவிட பயங்கரம்தான் மறுநாள் நிகழ்ந்தது.
சுவாமிநாதனின் தீர்ப்புக்கெதிராக அரசு முறையிட் டிருந்த மேல் முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. போக, நேற்று நிகழ்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, தீர்ப்பளித்த சுவாமிநாதனே விசாரிப்பாரென உத்தரவிட்டது!
பின்னாட்களில் வரலாற்றில் ஒரு பாடமாக வாசிப்பவர்கள் இதைக் கடக்கும்போது என்ன நினைப்பார்கள்?
போச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு. அவ்வளவுதான். மேட்டர் க்ளோஸ்டு.
ஆமாம். அதற்கேற்ப உடனடியாக 04/12/2025 வியாழன் மாலை விசாரிக்க வந்த சுவாமிநாதன் 144 உத்தரவை நீக்கினார். உடனடியாக இங்கு மதுரை ஆட்சியரும், ஆணையர் லோகநாதனும் இப்போதே ஆஜராக வேண்டுமென்றும் ஆணையிட்டார்!
நேரில் வரத் தாமதமாகலாம். காணொலியில் ஆஜராகிறோமென இருவரும் ஆன்லைனில் வந்தனர்.
ஏன் என் உத்தரவை மீறினீர்கள் என்று அவர்களிடம் விசாரித்தார்.
அரசு மேல் முறையீடு செய்ததாலும், கோவில் நிர்வாகம் வழக்கமான இடத்தில் தீபமேற்றிவிட்டதாலும் உங்கள் உத்தரவை நிறைவேற்ற இயலவில்லை என அவர்கள் கைவிரித்துவிட;
ஓக்கே. புது உத்தரவு நான் தர்றேன். இன்று மாலை ஏழுமணிக்குள் உங்கள் தலைமையில் (லோகநாதன் ஐ பி எஸ்) மனுதாரருக்கு பாதுகாப்பளித்து அவரை தீபமேற்றச் செய்ய வேண்டுமென ஆணையிட்டார்!
சங்கிகள் வியாழன் அந்திப்பொழுதில் இந்தத் தீர்ப்பை பட்டாசு வெடித்து கோலாகலமாகக் கொண்டாடினர். திமுக அரசு முகத்தில் கரியைப் பூசிவிட்டோம். வாங்க திருப்பரங்குன்றமேறி தர்காவருகே தீபமேத்துவோம், தீப்பந்தங்களால் தர்காவை தீ கொளுத்துவோமெனக் கொக்கரித்தனர்!
சங்கிகள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு திருப்பரக்குன்றம் நோக்கி காரை விட;
அன்றும் அவர்கள் தடுக்கப்பட்டனர். 144 தடை உத்தரவை விலக்கிய பின்னரும் அவர்களை அரசு, மலை மீது அனுமதிக்கவில்லை. அனைவரையும் கைது செய்து பல மைல்களுக்கப்பால் சென்று இறக்கிவிட்டார் லோகநாதன் மிறிஷி.
முதன்முதலாக அந்த வேளையில்தான், அன்றுதான், அப்போதுதான் உணர்ந்தனர் சங்கிகள்.
Stalin is more dangerous than Karunanidhi.
ஆமாம். அதை உதிர்த்த மகானுபவரும் கைதாகி அந்த வேனில் அவர்களுடன் களைப்பாக அமர்ந்திருந்தார்! •
https://drive.google.com/file/d/1UoZqky9rqEvPzzI5qMgTyqLO5sLS6La9/view?usp=sharing

