கோடாரிக் காம்புகள்?
உளவாளி
குலத்தை அழிக்க வந்த கோடாரிக் காம்புகள் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள்...
உடனிருந்தே கொல்லும் வியாதி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்...
ஒரு வனத்தையே வெட்டி அழிக்கும் ஆற்றல் கொண்ட கோடாரியைப் பயன்படுத்த கைப்பிடி வேண்டும். அது அந்த வனத்தில் உள்ள மரத்தில் இருந்தே செதுக்கப்படும்.
நமது உடலுக்குள் எந்தப் பகுதியில் ஆற்றல் குறைவாக இருக்கிறதோ அதை அறிந்து அங்கே புகும் கிருமிதான் நம்மை மெல்ல மெல்ல அழித்துவிடும்.
வனத்தை அழிக்கும் கோடாரிக்கு கைப்பிடியாகவும், உடலை அழிக்கும் கிருமியாகவும் மனிதர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களைக் கண்டறிந்து களையெடுக்காவிட்டால் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணரவேண்டும்.
காங்கிரஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய கோடாரிக் காம்புகளும், கிருமிகளும் காலந்தோறும் உருவாகின்றன. அவை பெரும்பாலும் பார்ப்பனீய கிருமிகளாகத்தான் இருக்கின்றன.
இரண்டு கட்சிகளுமே சமத்துவத்தைப் பேசுகின்றன. ஆனால், சாமானியர்களை மதிக்காத தலைமையை பெற்றிருக்கின்றன.
எனக்குத்தெரிந்து இரண்டு கட்சிகளிலும் கண்கூடாக இந்த உண்மை வெளிப்பட்ட சமயம் ஒன்று உண்டு.
உயர்சாதியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு பாஜக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. இந்த இரண்டு கட்சிகளுமே அதை ஆதரித்தன. அப்போதுதான் இரண்டு கட்சிகளுக்கும் சமூகநீதி மீது அக்கறையே இல்லை என்ற உண்மை புரிந்தது.
உயர்சாதியினரில் பின்தங்கியவர்களுக்கு பாஜக அரசு வகுத்த ஒரு அநீதியான வரையறையைக்கூட கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்ட கட்சிகளாக இருந்தன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவுக்கும், உயர்சாதியினருக்கான அளவுக்கும் மலையளவு வித்தியாசம் இருப்பது குறித்து ஒரு கேள்விகூட கேட்கவில்லை.
ஆயிரமாண்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்தவனுக்கு குடிசை வீடும், ஆண்டு வருமானம் 72 ஆயிரமும் இருந்தால் வசதியானவன் என்ற அளவுகோல்...
ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம், 5 ஏக்கர் புஞ்சை, ஆயிரம் சதுர அடி கான்கிரீட் வீடு இருந்தாலும் உயர்சாதிக் காரனுக்கு ஏழை என்ற அளவுகோல்...
இத்தனை தகுதியோடு, கல்வியிலும் நீட் தேர்வில் ஜீரோ மார்க் எடுத்திருந்தாலும் மெடிகல் காலேஜில் ஸீட் கிடைக்கும்...
காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறது என்றால்கூட ஏற்றுக்கொள்ளலாம்...
உழைக்கும் வர்க்கத்திற்காக உழைப்பதையே கொள்கையாக கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என்றால், அந்தக் கட்சி யார் பக்கம் என்பது கேள்வியாகுமா இல்லையா?
மொத்தத்தில் இரண்டு கட்சிகளிலும் ஆதிக்கம் செலுத்திய உயர்சாதியினரின் நலன் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு தனக்கான ஆட்களை சிறு வயதில் இருந்தே வளர்த்து, எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவச் செய்யும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சமூகத்தின் அத்தனை பிரிவுகளிலும் தனக்கான கைக்கூலிகளை அது உருவாக்கி வளர்த்து, எந்தச் சூழ்நிலையிலும் சனாதனத்துக்கு ஆதரவாகச் சண்டையிடச் செய்யும். கம்யூனிஸ்ட் கட்சியிலும் அப்படிப்பட்ட ஆட்களை அது திணித்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
இவ்வளவு பெரிய பீடிகை எதற்கு என்று கேட்பீர்கள்.
தந்தை பெரியார் வலியுறுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை, நூறாண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி காலத்தில்தான் காங்கிரஸ் கட்சி ஏற்க முன்வந்திருக்கிறது.
பெரியாரின் சமூகநீதி கொள்கையை ராகுல்காந்தி இந்திய அளவில் பேசத் தொடங்கியிருக்கிறார்.
ஆனால், அவருடைய தலைமையை ஏற்காமல், அவருடைய கருத்துக்கு எதிராகவும், அவர் அமைத்த கூட்டணிக்கு எதிராகவும் பேசக்கூடிய தலைவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியில்கூட, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இழந்தபிறகும், போதிய அறிவைப் பெற அந்தக் கட்சி தவறுகிறது.
பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸை எதிர்ப்பதே கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமாக படுகிறது. கேரளாவில் பாஜக அரசின் கேடுகெட்ட புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் நிலைக்கு மார்க்சிஸ்ட் கூட்டணி நெருங்கிச் சென்றது.
அதானி குழுமத்தின் அட்டூழியங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டது.
பாஜகவின் பாசிச போக்கை ஒப்புக்கொள்ள மறுத்து, நவபாசிசம் என்ற புதிய சொல்லாடலை முன்னாள் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தன் திருவாயில் இருந்து உதிர்த்து சர்ச்சையை கிளப்பினார். அவருடைய கருத்துக்கு பாஜக தலைவர்களே வரவேற்பு தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே, அந்தக் கூட்டணித் தலைமைக்கு எதிரான கருத்துகளை பேசும் ஆட்கள் இருக்கிறார்கள். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் ராகுலுக்கு எதிரான விமர்சனங்களைக்கூட கண்டுகொள்ளாமல் ஒதுங்குகிறார்கள்.
கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியதை வரலாற்றுச் சாதனை என்று சசிதரூர் சொல்கிறார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் டெல்லி வந்தபோது எதிர்க்கட்சித் தலைவரான ராகுலை அழைக்காத நிலையில் சசிதரூர் கலந்துகொண்டார்.
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. பெரும்பான்மை இடங்களை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
இதற்கான முக்கிய காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. மதசார்பின்மையை கடைப்பிடிக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி, இஸ்லாமியத் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்யும் எஸ்.என்.டி.பி. தலைவரான வெள்ளாபள்ளி நடேசன் என்பவரை கூட்டுச் சேர்த்து தேர்தலை சந்தித்தது.
தேர்தல் பிரச்சாரம் முழுவதும் முஸ்லிம் விரோத பரப்புரையை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களே முன்னெடுத்துச் சென்றுள்ளனர். அதுதான் தேர்தல் முடிவுகளைத் திருப்பி அடித்துள்ளது..
முஸ்லிம் லீக் கட்சியை, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மலப்புறம் மாவட்டத்தை, பாணக்காடு தங்கள் குடும்பத்தை, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பேரியகத்தை, காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரை விஷம் தோய்ந்த வார்த்தைகளால் மிகவும் ஈனமான பாஷையில் வெள்ளாபள்ளி நடேசன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதை, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் தோழர் கோவிந்தன் மாஸ்டர் உட்பட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் ஆதரித்துள்ளனர்.
எஸ்.என்.டி.பி இயக்க தலைவரின் மகன் துஷார் வெள்ளாபள்ளி பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருப்பது தெரிந்தும் கேரள முதல்வர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் ஒரே காரில் வெள்ளாபள்ளி நடேசனையும் அழைத்து வந்தார். இது நடேசனின் முஸ்லிம் விரோத பேச்சை கேரள முதல்வர் அங்கீகரிப்பது போல இருந்தது.
காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்வதைக் காட்டிலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உட்பட முஸ்லிம் வாக்களர்களை கடுமையான முறையில் விமர்சனம் செய்தனர். அதற்கு வாக்குச்சீட்டு மூலம் பதிலளித்துள்ளனர்.
எவ்வளவுதான் மதவெறியை தூண்டி பிரச்சாரம் செய்த போதிலும், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் தவிர்த்து மாநிலம் முழுவதும் கேரள வாக்காளர்கள் பாஜகவை தோற்கடித்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை வாக்காளர்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். இதை, ஆளும் எல்.டி.எஃப். கூட்டணி சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
கடந்த காலங்களில் எல்.டி.எஃப். கூட்டணி வெற்றிபெற வாக்களித்த முஸ்லிம் சமூகத்தை அருவருப்பான, அநாகரீக வார்த்தைகளால் விமர்சனம் செய்த ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் ஊதுகுழலான வெள்ளாப்பள்ளி நடேசன் உடனான கூடாநட்புதான் இந்தத் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த வெற்றியை காங்கிரஸும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். சசிதரூர் போன்ற கோடாரிக் காம்புகளை உடனே கட்சியிலிருந்து அகற்ற ராகுல் முன்வர வேண்டும்.
மொரார்ஜி, காமராஜர் போன்ற முதலாளித்துவ ஆதரவுத் தலைவர்கள் முற்போக்குத் திட்டங்களுக்கு எதிராக இருந்தபோது, இந்திரா அவர்களை துணிச்சலாக எதிர்த்து தனக்கான கட்சியை உருவாக்கினார். அதேபோல ராகுல் தனக்கான காங்கிரஸை உருவாக்க வேண்டும்.
காங்கிரஸிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் உள்ளிருந்தே கேடு செய்யும் கோடாரிக்காம்புகளையும், கிருமிகளை அழித்தால் தவிர இந்தியாவை மீட்க வேறு வழியே இல்லை. •
https://drive.google.com/file/d/1b5hx9MVnYX_fpIhRqorzjVXfL4yk6iDI/view?usp=sharing
