போக்குவரத்து பொற்காலம்
ஆதனூர் சோழன்
தமிழ்நாடு அமைச்சர்களில் தனக்குக் கொடுக்கப் பட்ட துறைகளை மேம்படுத்துவதில் முழுநேரக் கவனம் செலுத்தும் அமைச்சர்களில், மாண்புமிகு சிவசங்கர் சா.சி. முக்கியமானவர்,
அவரைப் பற்றி ஏற்கெனவே உதயமுகம் வார இதழில் எழுதி இருக்கிறேன். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சாரக இருந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட புதிது.
போக்குவரத்துத் துறையின் பொற்காலம் ஆக்குவாரா? என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை இருந்தது. அதில் இப்படி எழுதி இருந்தேன்ஞ்
“2004 ஆம் ஆண்டுக்கு முன் இந்திய ரயில்கள் நாற்றமெடுத்தவையாக இருந்தன. உலகின் மிகப்பெரிய ரயில்வே என்ற அந்தஸ்த்தை பெற்றிருந் தாலும், ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும் பயணிகள் ரயில், சரக்கு ரயில் ஆகியவற்றின் கட்டணம் உயர்வதே வாடிக்கையாக இருந்தது.
2004ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச் சராக நியமிக்கப்பட்டார் லாலுபிரசாத் யாதவ். காலந்தோறும் நஷ்டத்திலேயே இயங்கிய ரயில்வே துறையில் லாலு என்ன செய்யப்போகிறார் என்றே பலரும் நினைத்தார்கள்.
ரயிலில் வசதிகளை கூட்டாமல், தொழில்நுட் பங்களை நவீனப்படுத்தாமல் ஏனோதானோவென்று ஓடிக்கொண்டிருந்தது இந்திய ரயில்வே.
லாலு பொறுப்பேற்றதும், ரயில் கட்டணங்கள் இனி உயராது. அதேசமயம், ரயில்வேயின் சொத்துக்களை முறைப்படுத்தி, அதன்மூலம் வருவாயை அதிகரித்து லாபத்தில் இயக்குவேன் என்று அறிவித்தார் லாலு.
அவர் பொறுப்பு ஏற்பதற்கு முன் ரயில்நிலையங்கள் குப்பையாக இருக்கும். பழமைவாய்ந்த நடைமுறைகள் அமலில் இருந்தன. லாலு இந்திய ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்தினார். ரயில்வே சொத்துக்களை கண்டறிந்து கையகப்படுத்தினார். அவற்றை வருவாய் தரும் வகையில் பயன்படுத்தினார். அவர் அமைச்சராக இருக்கும்வரை ஒரு பைசா கூட ரயில் கட்டணம் உயரவில்லை. அதேசமயம், ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக லாபம் காட்டப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பலருக்கும் பிடித்தவராக போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் சா.சி. இருக்கிறார்.
திறம்பட இயங்கும் அமைச்சர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் சா.சி. முக்கியமானவராக இருப்பார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை நலிவடைந்து கிடந்தது. கடமுடா வண்டிகளின் பயணக் கட்டணத்தையும்கூட மூச்சுமுட்ட ஏற்றிச் சென்றது அதிமுக அரசு.
அப்படிப்பட்ட போக்குவரத்துத் துறையை மாண்புமிகு சிவசங்கர் சா.சி.யிடம் கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கொஞ்சகாலம் பொறுப்பு வகித்தார். ஆனால், அந்தத் துறையிலும் சமூகநீதி தொடர்பான பல நடவடிக்கைகளையும், துறையின் சார்பில் இயங்கும் விடுதிகளில் நூலகங்கள் அமைக்கும் திட்டத்தையும் அறிவித்திருந்தார் சிவசங்கர்.
இந்நிலையில்தான், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்றவுடன் அவருடைய முன்னெடுப்புகள் வியக்க வைத்தன.
லாப நோக்கம் மட்டுமே நோக்கமாக கொண்டு போக்குவரத்துத் துறையை இயக்கமுடியாது என்று வெளிப்படையாகவே அறிவித்தார். தலைவர் கலைஞர் எந்த நோக்கத்துக்காக பேருந்துகளை அரசுடைமை ஆக்கினாரோ, அதை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது அந்த அறிவிப்பு.”
என்று எழுதியிருந்தேன்.
போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான இடங்களை வணிகமயமாக்கும் திட்டத்தையும், கடமுடா பேருந்துகளின் சேஸ்களில் தகுதியானவற்றை தேர்வு செய்து அவற்றில் புதிய பாடி கட்டுவது போன்ற யோசனைகளையும் அவர் முன்மொழிந்தார்.
பொறியாளராகவும், எம்பிஏ., பட்டதாரியாகவும் இருப்பதால் ஆழமாக சிந்தித்து அதிகாரிகளை வழிநடத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறார்.
பேருந்துகளில் நவீன வசதிகளை அமல்படுத்துவது, பெண்களுக்கு உரிய வாயப்புகளை உருவாக்கி அறிவிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.
பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தனக்கு கொடுக்கப்பட்ட துறையில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற செயல்திறன் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
போக்குவரத்து துறையில் இதுவரை நிலவிய லஞ்சம் ஊழலை தவிர்க்க அவர் பல அதிரடி மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறார். இதன்மூலம், இடைத்தரகர்களும் அதிகாரிகளும் பங்கு பிரித்த அரசு வருவாய் முழுமையாக அரசுக்கே கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான எல்எல்ஆர் என்ற பழகுனர் உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலக வாசல்களில் ஒரு நாள் முழுவதும் தவம் கிடக்க வேண்டும்.
அதற்கான புரோக்கர்கள் கண்ணசைவு காட்டினால் தான் அந்த உரிமம் பெறமுடியும். இதற்காக கப்பம் கட்டினால்தான் வேலை விரைவாக முடியும்.
அதுபோல வாகனங்களுக்கான முகவரி மாற்றம் உள்ளிட்ட ஆர்டிஓ ஆபீஸ் நடைமுறைகளுக்கும் இதுவரை பணம் செலவழித்தால்தான் காரியமாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி எல்எல்ஆர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற ஆர்டிஓ ஆபீஸ் வேலைகளுக்கு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைனிலேயே இந்தப் பணிகளை முடித்துக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்.
வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக அவர்களை ஆர்டிஓ அலுவலக வாசல்களில் நிறுத்தி அவர்களுடன் பெற்றோரும் காத்துக் கிடந்த காலம் மலையேறிவிட்டது. ஆன்லைன் மூலம் அவர்கள் தொல்லை நீங்கியிருக்கிறது.
மொத்தத்தில் இந்திய ரயில்வேயை லாபகரமாக இயக்கிய லாலுவின் அதே நிர்வாக உத்திகளை தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வெற்றிகரமாக செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்” என்று எழுதியிருந்தேன்.
நான் எழுதியது அடுத்தடுத்து உண்மையானது.
பேருந்துகளுக்கு வெளிமார்க்கெட்டில் டீசல் போடுவதால் லிட்டருக்கு அமைச்சருக்கு கிடைக்கும் 75 பைசாவைக் கூட அரசுக்குக் கிடைக்கும் வகையில் நடைமுறையை மாற்றினார்.
அதாவது,“வெளிமார்க்கெட்டில் டீசல் விற்கும் விலையில் 75 பைசா குறைவாகத்தான் கொள்முதல் செய்ய வேண்டும்” என்று அதிரடியாக அறிவித்தார்.
அதுவரை இந்த 75 பைசா மூலம், சத்தமே இல்லாமல் பல கோடிகளை சம்பாதித்த அமைச்சர்களிடம் இருந்து இவர் வேறுபட்டார். காலத்துக்கு ஏற்ப டிஜிடலில் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.
அரசுப் பேருந்துகளில் சரக்குகள் கொண்டு செல்லும் வசதி மற்றும் அரசு பேருந்துகளில் விளம்பரங்கள் மூலம் வருவாயை உயர்த்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் துறையை லாபத்தில் இயக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
கட்டணமில்லா பேருந்துகளில் மகளிரின் பயணத்தை கவுரவப்படுத்தி இருக்கிறார். பண்டிகைக் காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பேருந்துக் கட்டணங்களை முறைப்படுத்தி, பயணிகளின் சிரமத்தை குறைத்திருக்கிறார்.
நெருக்கடியான நாட்களில் இரவு பகலாக அவருடைய உழைப்பு முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் மாடலாகக் கொண்டிருக்கிறது.
பேருந்துப் பயணிகள் அனைவருமே தங்களுடைய அமைச்சராக கொண்டாடும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை மாநகரப் போக்குவரத்தில் மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தனியார் தொலைதூரப் பேருந்துகளுக்கு இணையாக குளிர்சாதன பேருந்துகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
பொதுவாகவே, இவருடைய நிர்வாகம் போக்குவரத்துத் துறையின் பொற்காலமாக இருக்கிறது என்பதை பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களும், போக்குவரத்து ஊழியர்களும் உணர்ந்திருக்கிறார்கள். •
