கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் – 1 - ராதா மனோகர்துரோகமும் தியாகமும்!

பாலாவோரை

பாலாவோரை நகரத்தை சுற்றி உள்ள முப்பது கிராமத்திலும் இன்று மிகப்பெரும் கொண்டாட்டம். கூட்டான் குலதிலகன் பேராவூரன் கட்டிய பெருவரசு அய்யனார் கோவிலுக்கு இன்றுதான் கோபுரம் கழுவல் பெருந்திருவிழா. கட்டிய கோபுரத்தில் உள்ள மண் தூசி போன்றவற்றை குடம் குடமாக நீரூற்றி கழுவதலை குடமுழுக்கு என்று பொதுவாக கூறுவார்கள்.. முக்காலும் திரைகடலை அண்மித்த திராவிட தேசங்களின் கூட்டத்தில் பாலவோரை நகரம் அல்லது பாலாவோரை என்று அறியப்பட்ட தேசம் சுமார் முப்பது கிராமங்களையும் ஒரு சிறு நகரத்தையும் தன்னகத்தே கொண்டதாகும்.

பேராவூரானின் தந்தை பெரியவரசுக்கு இரண்டே இரண்டு வாரிசுகள்.

முதலில் பிறந்தது பாக்கியத்தம்மாள் என்று செல்லமாக அழைக்கப்படும் கூட்டான் குலதிலகவதி பேராவூர் பாக்கியத்தம்மாள்.

தந்தை பெரியவரசுக்கு சோதிடத்தில் அபார நம்பிக்கை. சோதிடர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தனது பாலாவோரை நகரத்தை முற்று முழுதாக தனது மகன் கூட்டான் குலதிலகனுக்கு வாரிசுரிமையை பட்டயம் செய்து கொடுத்துவிட்டான்.

நகரத்தை மகனுக்கு கொடுத்து விட்டு இருபத்தொரு கிராமங்களை பாக்கியத்தமாளுக்கு பட்டயம் செய்து கொடுத்து விட்டான்.

அந்த கிராமங்களின் மிகப்பெரும் பிரச்சனை வறட்சியும் வெள்ளமும்தான். எந்த வித ஒழுங்கு முறையும் இன்றி சிலகாலம் வறட்சியும் சிலகாலம் பெரும் வெள்ளப் பெருக்குமாக பெரும் சோதனைகளையே வரலாறாக கொண்டிருந்தது.

செல்வ செழிப்பும் மக்கள் கூட்டமும் நிறைந்த நகரத்தையும் அதனோடு சேர்ந்த சில கிராமங்களையும் இளையவன் குலதிலகனுக்கு கொடுத்த பெரியவரசு ஏன் மூத்தவளுக்கு சதா இயற்கையோடு போராட வேண்டிய கிராமங்களை பட்டயம் செய்தார் என்பது பலருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

உண்மையில் பெரியவரசுக்கு பாக்கியத்தமாள் மீதுதான் மிகபெரும் நம்பிக்கை. தனது காலத்தில் நிறைவேற்ற முடியாத சில திட்டங்கள் எல்லாம் பாக்கியத்தம்மாள் மூலம் எதிர்காலத்தில் நிறைவேறக் கூடும் என்று நம்பினார்.

வழுக்கியாறு என்ற காட்டாறு பாலாவோரையை அண்மித்து ஓடிகொண்டிருக்கிறது.

அந்த ஆறு பெருக்கெடுத்தால் கிராமங்களில் புகுந்து விடும். கிராமங்களில் மழை வந்தால் அதன் நீரெல்லாம் வழுக்கியாற்றில் கலந்து ஓடிவிடும்.

பெரியவரசின் காலத்திலேயே வழுக்கியாற்று குளம் கட்டும் முயற்சி மேற்கொள்ள போதியளவு நிதியோ ஆள்பலமோ பெரியவரசுக்கு கிடைக்க வில்லை. பெரியவரசு மட்டு மல்லாமல் அவரின் மனைவி பேராட்டி அம்மையாரும் தங்கள் கண் முன்னேயே கிராமங்கள் மெல்ல மெல்ல காலியாகி கொண்டிருப்பதை கண்டு மனம் புழுங்கினார்கள்.

அவர்களால் தொடங்கப்பட்ட முயற்சிகள் எப்பொழுதும் தடை பட்டு கொண்டே வந்தன.

பாக்கியத்தம்மாளின் பிறந்த நேர கிரக நிலையும் குலதிலகனின் கிரகநிலையும் ஆய்ந்த பெரிய பெரிய சோதிடர்கள் பலர் பாக்கியத்தமாளின் முயற்சியால் மிகப்பெரும் சாதனைகள் நிகழும் என்று கூறினார்கள்.

அழிந்து கொண்டிருக்கும் கிராமங்களை காப்பாற்ற பாக்கியத்தம்மாள் நிச்சயம் முயற்சி செய்வாள் என்று பெரியவரசும் பேராட்டி அம்மையாரும் தீர்க்கமாக நம்பினார்கள்.

கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே செல்வ செழிப்பில் வளர்ந்த இளவரசன் குலதிலகன் மீது பெரியவரசுவால் பெரும் நம்பிக்கை வைக்க முடியவில்லை. சிறுவயதில் இருந்தே அவன் ஒரு பொறுப்புணர்ச்சி அற்றவனாகவும் சதா வேடிக்கை விநோதங்களில் காலத்தை விரயம் செய்பவனாகவே இருந்தான்.

எவ்வித கலைகளும் அவனது புத்திக்கு எட்டவில்லை. சதா சத்தம் செய்து துள்ளி குதித்து விளையாடிக் கொண்டே இருக்கும் அவனது குணம் பெரியோர்களை அவநம்பிக்கை கொள்ள வைத்தது.

பெரியவரசுவும் பேராட்டியும் மிகுந்த மன உளைச்சலுக்கு பின்பே பாலவோரை நகரத்தை பட்டயம் செய்து குலத்திலகனுக்கு கொடுத்தனர்.

பாலவோரை நகர மேலாண்மையை மிகவும் திட்டமிட்டு நிர்வாகம் செய்தால் அதன் வருமானத்தை கொண்டு எதிர்காலத்தில் வழுக்கியாற்று குளத்தை கட்ட முடியும். அதன் மூலம் அழிந்து கொண்டிருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை மீண்டும் வாழவைக்க முடியும்.

பாலவோரை நகர பட்டயத்தில் இதுபற்றி மிகவும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பாலவோரை நகரத்தின் பாதி வருமானம் வழுக்கியாறு குளம் கட்டும் நிதிக்கு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் குலதிலகனுக்கு பாலவோரையின் பட்டயம் வழங்கபட்டுள்ளது.

இந்த நிபந்தனையை முதலில் குலதிலகன் ஏற்றுகொள்ளவில்லை. மாறாக அந்த கிராமங்களையும் வழுக்கி ஆறு குளம் போன்ற சகலதையும் தனக்கே பட்டயம் செய்து தருமாறு கேட்டான். அவன் கையில் கொடுக்கும் எதையும் உருப்படியாக பேணும் குணம் அவனிடம் இல்லாத காரணத்தால் அவனுக்கு அது மறுக்கப்பட்டது.

அதிலும் கிராமங்களும் வழுக்கியாறும் அக்கா பாக்கியத்த மாளுக்கு கொடுக்கப்பட்டதில் அவனுக்கு மிகப்பெரும் ஏமாற்றமே. ஆண் வாரிசான தன்னை பெற்றோர்கள் அவமதித்து விட்டதாக எண்ணினான்.

ஆனாலும் எதிர்த்து அவனால் ஒன்றுமே சொல்ல முடிய வில்லை.

அவனுக்கு அக்கா பாக்கியத்தம்மாளின் அறிவு ஆற்றல் மற்றும் துணிவின் முன், தான் ஒரு சிறுவனாக இருப்பதாக உணர்ந்தான்.

வாரிசு பட்டைய உரிமைகள் இருவருக்கும் கைமாறி மூன்று வருடங்களாகிவிட்டது.

பாலவோரை நகரத்தில் புதிதாக எதுவித திட்டங்களும் இடம் பெறவில்லை. குலதிலகன் போல பாக்கியத்தம்மாளால் அமைதியாக இருக்க முடியவில்லை. கிராமத்து மக்கள் மெதுவாக ஆனால் மிகவும் தீர்க்கமாக தத்தமது பாரம்பரிய வீடு வாசல்களை விட்டு வேறு வேறு கிராமங்களையும் தேசங்களையும் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இப்படியே தொடர்ந்து கிராமங்கள் காலியாகி கொண்டிருந்தால் வெகு விரைவிலேயே முழு கிராமங்கள் மட்டுமல்ல, பாலவோரை நகரம் கூட காலியாகிவிடும் என்று உணர்ந்தாள்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல அறிஞர்களையும் அனுபவசாலிகளையும் அழைத்தும் சிலவேளைகளில் அவர்களது இருப்பிடங்களை தேடி, தானே சென்றும் வழுக்கியாறு குளம் கட்டுதல் பற்றி பலரது கருத்துகளையும் கேட்டு அறிந்தாள்.

பாக்கியத்தம்மாளின் வழுக்கியாறு அணை, குளம் கட்டுதல் போன்ற செய்திகளை கேட்கும் போதெல்லாம் குலதிலகனுக்கு தானும் அது போல எதாவது பரப்பாக செய்யவேண்டுமே என்ற எண்ணம் தோன்றலாயிற்று.

ஒன்றும் செய்யாவிடில் தன்னை யாரும் மதிக்கக் மாட்டார்களே என்ற எண்ணம் மாத்திரம் அல்ல வேறு ஒரு வஞ்சக எண்ணமும் அவனுக்குள் உருவாகலாயிற்று.

தனது பாலாவோரை நகர நிர்வாக வருமானத்தில் பாதியளவு அக்கா பாக்கியத்தமாளின் வழுக்கியாறு திட்டத்துக்கு கொடுக்கவேண்டுமே? நான் எனது அரச பரிபாலன வருமானத்தை கொடுப்பதா? என்ற தீய எண்ணம் அவனுக்குள் விதைக்கப்பட்டது.

மனிதர்களின் வரலாறு முழுதும் ஏராளமான துரோக நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. பெரியவரசு கட்டிகாத்த தேசத்திலும் அதற்கு முதல் சுழி குலதிலகனின் மனதில் உருவாயிற்று.

பாலாவோரை நகரின் வருமானம் பாக்கியத்தம்மாளுக்கு போகவே கூடாது என்ற தீய எண்ணம் மேலும் மேலும் அவனுள் எரியத் தொடங்கியது.

இயல்பாகவே எப்பொழுதும் வேடிக்கை வினோதம் திருவிழா என்று காலத்தை கழிக்கும் குலதிலகனுக்கு பாலாவோரையில் தந்தை கட்டிய அய்யனார் கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்ததும் ஞாபகத்துக்கு வந்தது. வேடிக்கை விநோதங்களும் கோவில் சந்தையும் மிகவும் மகிழ்ச்சியை அவனுக்கு தந்திருந்தது. ஏன் அது போல தானும் ஒரு கோவில் கட்ட கூடாது. அதை விட மிகவும் பெரிய ஒரு கோவில் கட்டினால் என்ன என்று நினைக்கத் தொடங்கினான்.

ஒரு மிகபெரும் கோவிலை கட்டினால் வேறு வேறு தேசமக்களும் வழிபட வருவார்கள். வேடிக்கை விநோதமும் வருமானமும் ஒரே சேர கிடைக்குமே என்ற எண்ணமும் அவனது ஆசைக்கு வலு சேர்த்தன.
இவனது ஆசைக்கு பெரியவரசுவும் பேராட்டியும் ஆதரவு கொடுக்க மறுத்து விட்டார்கள்.

எது நடக்க கூடாது என்று பெரியவரசுவும் பேராட்டியும் வாழ்க்கை முழுவதும் பயந்தார்களோ அது நடக்க போவது போல் உணர்ந்தார்கள். பாக்கியத்தமாளின் வழுக்கியாற்று குளம் கட்டுவதற்கே வழியில்லாமல் திணறி கொண்டு இருக்கையில் குலதிலகனின் பெருங்கோவில் திட்டம் மிகப்பெரும் நிதி நெருக்கடியை நாட்டுக்கு உண்டாக்கி விடுமே?

நிச்சயம் ஒரே நேரத்தில் இரண்டு பெரும் திட்டங்களையும் நிறைவேற்றுவது என்பது சாத்தியமே இல்லை. அதுதானே குலத்திலகனின் விருப்பமும்.

துரோகமும் தியாகமும் சகோதர்களாக இருப்பது எவ்வளவு பெரிய வேதனை?

Previous Post Next Post

نموذج الاتصال