அர்த்தம்
சாவின் விளிம்பில் சதுரங்கக் காய்களாய்
மானுடமியக்கும் மந்திரம் எது?
ஒருவழிப் பாதையில் உலகைச் செலுத்தி
உள்ளவர்சிந்தனை பலவழிசிதற பாழ்செய்தது எது?
விசையும் திசையும் வகைப்படுத்தி
வீழ்ந்தெழுந்து வீரம்பேசி
இசையும் கலையும் எண்ணிவிளைத்து
இரசிக்கும் நெஞ்சில் சாந்தியடைத்தும்,
வெண்புறாவின் சின்னந்தரித்துப் பின்
அசைப்பதென்ன சமாதானக்கொடி?
காலப்போக்கில்
புளியமரங்களில்
புடலங்காய்கள் தொங்கக்கூடும்.
வேறோர் அச்சில்
பூமியை நகர்த்தி
பிரபஞ்சத்தின் புதுவிதி எழுதப்படும்.
அதற்குள்ளே ஏனிந்த
நவீன ஆயுதங்கள்?
பொறுமையும் முயற்சியும்
புதுப்புதுக் கடவுளரை
படைத்துக்கொண்டே இருக்கட்டும்
பொழுது புலர எழுந்து
காரியங்கள் மேற்செல்வோம்.