திமுக துணைப் பொதுச் செயலாளரான கவிஞர் கனிமொழி எம்.பி. கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். கருவறை வாசம், அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய அவருடைய கவிதை நூல்கள் புகழ்பெற்றவை.
கலைஞரின் இலக்கியத் திறனை உள்வாங்கி வளர்ந்த கனிமொழியின் கவிதைகளில் பல குறிப்பிடத்தக்கவை.
ராமர் கோவில் திறப்புவிழாவை முன்னிட்டு அவருடைய அகத்திணை கவிதைத் தொகுப்பில் உள்ள ராமர் பற்றிய கவிதை வரிகளில் சில வைரலாகி இருக்கின்றன.
திமுக இளைஞர் அணி மாநாட்டில் பேசும்போது, கட்டி முடிக்கப்படாத கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி, பாஜக அரசியல் செய்வதாக கனிமொழி குறிப்பிட்டார்.
இந்நிலையில்,
பாவ விமோசத்திற்கு
ராமனுக்காக காத்திருக்காதே...
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில்
ஆழ்ந்திருக்கிறான்
.......................
இராவணன் கற்புக்கும்
இவளே பொறுப்பு
என்ற வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராவணன் பாதுகாப்பில் இருந்த சீதையை வானரங்கள் உதவியுடன் மீட்டு, அயோத்திக்கு திரும்ப வருகிறான் ராமன். ஆனால், அயோத்தி வந்த பிறகு சீதை கருவுற்ற செய்தியறிந்து ராமன் சந்தேகம் கொள்கிறான்.
அவளுடைய கற்பனை சோதிக்க, சீதையை அக்கினிப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்கிறான் ராமன். அப்படிப்பட்ட பரபரப்பில் ராமனிடம் பாவ மன்னிப்புக்காக செல்லாதீர்கள் என்று யோசனை சொல்லும் வரிகளுடன்...
சீதை அக்கினியில் இறங்கி மீண்டு வந்தால்தான் இராவணனின் கற்பும் நிரூபிக்கப்படும் என்ற வரிகளைச் சேர்த்து எழுதியிருக்கிறார் கனிமொழி.
சீதையின் கற்புக்காக மட்டுமின்றி, சீதையை பாதுகாப்பாக வைத்திருந்தான் ராவணன் என்பதை நிரூபிக்கவும் சீதையின் அக்கினிப் பிரவேசம் உதவவேண்டும் என்ற கோணத்தில் கனிமொழி அந்தக் கவிதையை எழுதியிருக்கிறார்.