மதுரையில் தனது அலுவலகத்தில் இருந்தார் வழக்கறிஞர் சாஜிசெல்லன்.
அவரைப்பார்க்க ராமநாதபுரத்திலிருந்து முனியசாமி என்பவர் வந்திருந்தார். கமுதி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் அவர். தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு அனுமதி கேட்டு வழக்க தொடர்வதற்காக சாஜிசெல்லனை பார்க்க அவர் வந்திருந்தார்.
“ரேக்ளா ரேஸுக்கு அனுமதி வாங்குவது பெரிய விஷயமில்லை. ரிட்பெட்டிஷன் போட்டுறலாம்” என்று சாதாரணமாகச் சொன்னார் சாஜி.
அது 2006ம் ஆண்டு மார்ச் மாதம்.
முனியசாமியும் வக்கீல் மீது நம்பிக்கை வைத்து ஊருக்குப் புறப்பட்டார். ரேக்ளா ரேஸுக்கு அதுவரை யாரும் தடை விதித்ததில்லை. சட்டம் ஒழுங்கு விவகாரத்தை காட்டி சில இடங்களில் போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட இடங்களில் கூட நீதிமன்ற அனுமதி பெற்று ரேஸ் நடத்தப்பட்ட உதாரணங்கள் இருந்தன.
எனவே தனது பெட்டிசனுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாஜிசெல்லன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ரிட்பெட்டிசனை தாக்கல் செய்தார். நீதிபதி ஆர்.பானுமதி முன்னிலையில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற போட்டிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் மீது சாதகமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. எனவே சாஜிசெல்லன் இயல்பாகவே தனது வாதத்தை தொடங்கினார்.
ஆனால் நீதிபதி பானுமதி, “விலங்குகளை கொடுமைப்படுத்தும் இதுபோன்ற போட்டிகளுக்கு எப்படி அனுமதி கேட்கிறீர்கள்?” என்று கேட்டவுடன் சாஜிசெல்லன் திகைத்துவிட்டார்.
இதுபோன்ற கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை. எனவே முந்தைய நீதிமன்ற உதாரணங்களை கையில் வைத்திருக்கவில்லை. 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் பிள்ளையார் நத்தத்தில் ரேக்ளா ரேஸ் நடத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா வழங்கிய தீர்ப்பு மட்டுமே அவரிடம் இருந்த ஒரே உதாரணம்.
இதை நீதிபதி பானுமதியிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலை படித்துப் பார்த்த பானுமதி 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.
“நீதிபதி கலிஃபுல்லா வழங்கிய உத்தரவிலிருந்து நான் மாறுபடுகிறேன். கடந்த காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கட்டாயமில்லை. தற்போதைய தேவைக்கு ஏற்ப பொருத்தமான சட்டத்தை நீதிமன்றம் கண்டுபிடிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு எதிரான சட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் இருக்கிறது. 1996ம் ஆண்டு கோவா மாநிலத்தில் நடைமுறையிலிருந்த திரியோ என்ற மாட்டுச்சண்டை போட்டியை அந்த மாநில நீதிமன்றம் தடைசெய்ததை மேற்கோள் காட்டி ரேக்ளா ரேஸுக்கும், ஜல்லிக்கட்டு, எருமைச்சண்டை, ஆகியவற்றிற்கும் தடை விதிக்கிறேன்” என்று நீதிபதி பானுமதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பில் பாரம்பரியம், புராதன நடைமுறைகள், மத நம்பிக்கைகள் என எல்லா வகையான சாதகமான காரணங்களையும் நீதிபதி பானுமதி ஒதுக்கித் தள்ளினார். அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது வேடிக்கையான விளையாட்டோ, வீரமான விளையாட்டோ கிடையாது என்றும் கூறியிருந்தார்.
வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்தும் விளையாட்டு என்று அவர் கூறியிருந்தார். பாய்ந்துவரும் காளையை வெறுங்கையுடன் எதிர்கொள்ளும் விளையாட்டை வீரவிளையாட்டு என்று அவர் ஏற்க மறுத்தது வழக்கறிஞர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. உலகில் இதுபோன்ற விளையாட்டு எங்கும் இல்லாத நிலையில் நீதிபதியின் நிலைப்பாடு ரேக்ளா ரேஸ் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.
அன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு எதிர்ப்பு வெவ்வேறு வடிவங்களில் நீதிமன்றங்களில் விவாதப் பொருளாகியது.
நீதிபதி பானுமதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பானுமதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டு அதனடிப்படையில் அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
2007ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.
அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜவஹர், முதல்வர் கலைஞரின் உத்தரவின்படி தமிழக அரசின் வழக்கறிஞர்களோடு டெல்லி விரைந்து ஒரே நாளில் இடைக்காலத் தடை பெற்றார். அதன் பிறகு, அந்த ஆண்டு வழக்கம்போல ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
2009ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு நீதிமன்ற இடையூறுகள் தொடர்ந்த நிலையில், அன்றைய கலைஞர் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தையும் தமிழக அரசு அளித்த உறுதி மொழியையும் ஏற்று உச்சநீதிமன்றம் தற்காலிக அனுமதியை வழங்கியது. அந்த அனுமதியின் பேரில் அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
2010ம் ஆண்டும் 2012ம் ஆண்டும் அதே சட்டம் அதே உறுதிமொழியின் அடிப்படையில் திமுக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டை நீதிமன்ற பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தியது.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விளையாட்டிற்கு தமிழக அரசின் சட்டத்தில் வகுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் மேலும் கூடுதலாக நிபந்தனைகளை சேர்த்து புதிய வரைமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அன்றைய திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விலங்குகளை மையமாக வைத்து நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2011ம் ஆண்டு ஜூலை மாதம் வித்தை காட்ட தடைவிதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடும் சேர்க்கப்பட்டது. இது ஜல்லிக்கட்டுக்கான நேரடித் தடையாக இல்லாதபோதும் மறைமுகத் தடையாக அமைந்தது. அதாவது காளை மாடுகளை ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பயன்படுத்த தடை ஏற்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்றனர்.
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இந்தப் போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை எனவும் போட்டிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2014ம் ஆண்டு மேமாதம் 7ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அரசு 2011ம் ஆண்டு வித்தைகாட்ட தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடும் சேர்க்கப்பட்டதாக கொடுத்த அறிக்கையை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் மத்திய அரசின் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் 2014ம் ஆண்டு மேமாதம் 19ம் தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிலான தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
2014 மே மாதத்திலேயே பாஜக வெற்றிபெற்று மத்தியில் மோடி தலைமையில் அரசு அமைந்தது. இந்நிலையில்தான் பீட்டா அமைப்பு தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவில் தன்னை இணைத்துக் கொள்கிறது.
இந்த மனுவில் ஆஜரான பீட்டா அமைப்பு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நீதிமன்றம் வலியுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு சரிவரக் கடைப்பிடிக்கவில்லை என்று சில புகைப்பட ஆதாரங்களை சமர்ப்பித்தது.
மாடுகளை துன்புறுத்துவது போலவும், காயப்படுத்துவது போலவும், சாராயம் புகட்டுவது போலவும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் காட்டி ஜல்லிக்கட்டிற்கு முழுமையான தடையைப் பெற்றது.
இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்து அதிமுக தலைமையிலான தமிழக அரசு சந்தேகம் எழுப்பி மேல்முறையீடு செய்யவில்லை.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்றைய முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்த விளைவுகளால் தமிழக அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் கவனம் செலுத்த தவறிவிட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மட்டுமே ஜெயலலிதாவின் கவனம் முழுமையாக இருந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து அவர் தீவிரம் காட்டவில்லை. ஆனாலும் 2016ம் ஆண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டின.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. நமக்கு நாமே பயணம் தொடங்கிய திமுக பொருளாளர் ஸ்டாலின் அலங்காநல்லூருக்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு திமுகவின் ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார். தேவைப்பட்டால் கட்சியின் அனுமதி பெற்று தனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார்.
அந்த அடிப்படையில் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி அலங்காநல்லூரில் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக எழுந்த எழுச்சியைக் கண்ட பாஜக அரசு அவசர அவசரமாக காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்குவதாக ஒரு அறிவிக்கையை தயார் செய்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதுபோன்ற ஒரு அறிவிக்கையை காங்கிரஸ் அரசாங்கம் தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்தும் பாஜக ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது. இருந்தாலும் உச்சநீதிமன்றம் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
எனவே திமுக அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கலைஞரை நேரில் சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். அவருடைய உறுதிமொழியை நம்பி அப்போதையப் போராட்டத்தை திமுக வாபஸ் பெற்றது.
இருந்தாலும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை உச்சநீதிமன்றமும் பாஜக அரசும் பொய்யாக்கின. ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்ற நிலையில், கடைசிநாளில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை நீடிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. எனவே 2016ம் ஆண்டும் போட்டி நடைபெறவில்லை.
மத்திய மாநில அரசுகளின் இந்த பாராமுகப் போக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனால் அந்த போராட்டங்கள் அனைத்தும் வீணாகின.
அதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஜல்லிக்கட்டுப் பிரச்சனை அதிமுக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. ஆனால் அதிமுக வெற்றிபெற்று ஆட்சியை அமைத்தது. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மட்டுமே மக்கள் வாக்களித்தனர். திமுக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 88 இடங்களுடன் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவானது.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றாலும் ஜல்லிக்கட்டு விவகாரம் உடனடியாக கிளப்பப்படவில்லை. ஜல்லிக்கட்டு நெருங்கும்போது மட்டுமே இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் கையில் எடுத்தனர்.
கடந்தமுறை பாஜக அரசு நடத்திய கண்துடைப்பு நாடகம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரும்பவில்லை. இருந்தாலும் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று கூறிவந்தனர்.
(தொடரும்)