1526ல், ஆப்கானிய சுல்தானை பாபர் தோற்கடித்தார். அதையடுத்து இந்தியாவில் ஒரு புது சகாப்தமும் ஒரு புதிய பேரரசும் தொடங்கியது. அந்தப் பேரரசு இடையில் சிலகாலம் போக, 1526லிருந்து 1707 வரை, அதாவது 181 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில், அது ஆற்றலும் பெருமையும் பெற்றிருந்தது. இந்திய மொகலாயப் பேரரசரின் பேரும் புகழும் ஆசியா, ஐரோப்பா முழுவதும் பரவியது.
அந்த வம்சத்தில் ஆறு பெரிய பேரரசர்கள் வந்தார்கள். அதற்குப் பின் அது சிதைந்தது. மராட்டியரும் சீக்கியரும் பிறரும் ஆளுக்கொரு அரசு அமைத்துக் கொண்டார்கள். அவர்களுக்குப் பின் வந்த பிரிட்டிஷார், இந்தியாவில் மத்திய அரசாங்கம் என்று இல்லாததை பயன்படுத்தி இடம்பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு சாதகமாக இங்கு குழப்பமும் நிலவியது. அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினார்கள்.
நான் பாபரைப் பற்றி ஏற்கெனவே சிறிது கூறியுள்ளேன். செங்கிஸ்கானும் தைமூரும் பாபருடைய முன்னோர். பாபர் உயர்ந்த பண்பும் இனிய இயல்பும் கொண்டவன். குறுகிய மதப்பற்று, ஜாதிப்பற்று அவனிடம் இல்லை. முன்னோர்களைப் போல் அவன் முரடன் இல்லை. கலைகள், இலக்கியம் என்றால் அவனுக்கு உயிர். அவனே ஒரு பாரசீகக் கவிஞன்.
அவன் மத்திய ஆசியாவிலுள்ள தன் தாயகத்தை அடிக்கடி எண்ணி ஏங்குவதுண்டு. “பர்கானாவிலுள்ள நீலாம்பர மலர்களின் அழகை என்னென்பேன்! ரோஜாவும் ‘துலிப்’பும் எங்கும் மண்டி ஒரே மலர்க்காடாக வன்றோ அது இப்போது காட்சி அளிக்கும்!” என்று தன்னுடைய வாழ்க்கைக் குறிப்பில் கூறுகிறான்.
அவனுடைய தந்தை இறந்தபோது பாபருக்கு வயது பதினொன்றுதான். அந்த இளம் வயதில் அவன் சாமர்கண்டின் அரசனானான். அவனை நாலாபக்கமும் பகைவர் சூழ்ந்திருந்தனர். பள்ளிக்கூடத்தில் ஏடும் எழுத்தாணியும் பிடிக்க வேண்டிய வயது. ஆனால், அவன் போர்க்களத்தில் வாளைப் பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தான். ஒரு முறை சிம்மாசனத்தை இழந்து மீண்டும் அதைக் கைப்பற்றினான். போர்க் கலை கற்றதோடு அவன் நின்றுவிடவில்லை. கூடவே, இலக்கியம், கலை, கவிதையும் கற்றான்.
காபூலை வென்ற அவன் சிந்து நதியைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தான். அவனுடைய படை மிகவும் சிறியது. ஆனால், அப்போது ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவிலும் புதிதாக உபயோகிக்கப்பட்டு வந்த பீரங்கிப் படை அவனிடம் இருந்தது. அவனுடைய சிறிய, பயிற்சி மிக்க படைக்கும், பீரங்கிப் படைக்கும் முன் ஆப்கானியப் படை நிற்க முடியாமல் ஓடியது.
பாபருக்கு வெற்றி கிட்டியது. ஆனால், ஆபத்துகள் அவனைத் துரத்தின. வடக்கே திரும்பிப் போய்விடலாம் என்று அவனுடைய தளபதிகள் ஆலோசனை கூறினார்கள்.
ஆனால், ‘தோற்று ஓடுவதைவிட செத்து ஒழிவேன்’ என்றான்.
அந்தச் சமயத்தில் தனக்கு பிடித்த மதுவை விட்டொழிக்க முடிவெடுத்தான். தன்னுடைய மதுக்கிண்ணங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தான். அவனுக்கு வெற்றி கிடைத்தது. அதன்பிறகு கடைசி வரை அவன் மது அருந்துவதில்லை.
பாபர் இந்தியாவுக்கு வந்த நான்கே ஆண்டுகளில் இறந்தான். நான்கு ஆண்டுகளும் போர்களில் ஈடுபட்டான். ஓய்வே இல்லை.
இந்தியாவை முழுமையாக அறியும் முன்பே இறந்தான். இந்தியாவுக்கு அவன் அன்னியனாகவே இருந்து விட்டான்.
ஆக்ராவில் அழகிய தலைநகரை உருவாக்க திட்டமிட்டான். கான்ஸ்டாண்டிநோபிளில் இருந்து சிறந்த சிற்பி ஒருவனை அழைத்து வர தூது அனுப்பினான். அங்கு சினான் என்ற புகழ் பெற்ற உதுமானியச் சிற்பி, தன்னுடைய சீடனான யூசப்பை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தான்.
பாபரின் வாழ்க்கை அனுபவங்கள் நூலாக இருக்கின்றன. அவனே எழுதிய அது மிகவும் இனிமையான நூல். அதன் மூலமாக நாம் அவனுடைய அந்தரங்க இயல்புகளை நன்கு அறிய முடிகிறது.
அவன் ஹிந்துஸ்தானத்தைப் பற்றியும், அதன் விலங்குகள், மரங்கள், பழங்கள், மலர்கள் ஆகியவற்றைப் பற்றியும் கூறுகிறான். தவளைகளைக்கூட அவன் மறந்துவிடவில்லை. அவனுடைய தாய் நாட்டின் முலாம் பழங்களையும், திராட்சைப் பழங்களையும் பலவித மலர்களையும் நினைத்து அவனுடைய மனம் ஏங்குகிறது.
இந்திய மக்களைக் கண்டு ஏமாந்ததாக எழுதுகிறான். அவனுடைய பார்வையில் அவர்களிடம் நல்ல அம்சம் ஒன்று கூட இல்லை. அவன் இந்தியாவில் இருந்த நான்கு ஆண்டுகளும் போரில் கழிந்தது. அதனால், அவன் அவர்களை நன்கு அறியமுடியாது போயிருக் கலாம்.
காரணம் எதுவாயினும், இந்நாட்டு மக்களிடமோ அல்லது அவர்களைச் சிறிது காலமாக ஆண்டுவந்த ஆப்கானியரிடமோ பாபர் யாதொரு சிறப்பையும் காணவில்லை. அவன் ஒவ்வொன்றையும் கூர்மையாகக் கவனித்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டுக்குப் புதியவன் என்பதற்காக அவன் கூறுவதில் கொஞ்சத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், அக்காலத்தில் வட இந்தியா மிகவும் மோசமாகவே இருந்தது புரிகிறது. அவன் தென்னிந்தியாவுக்குப் போகவே இல்லை.
ஹிந்துஸ்தானத்தின் பேரரசு மிகப் பெரியது. மக்கள் நிறைந்தது. வளம் கொழிப்பது. கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் கூட அதனைக் கடல் சூழ்ந்திருக்கிறது.
வடக்கே காபூலும், கஜினியும், காந்தஹாரும் இருக்கின்றன. ஹிந்துஸ்தானம் முழுவதற்கும் தலைநகர் டில்லி என்று பாபர் கூறுகிறான். பாபர் இந்தியாவுக்கு வந்த காலத்தில் அது பல சிறிய அரசுகளாகப் பிளவுபட்டிருந்தது.
ஆனாலும், அவன் இந்தியா முழுவதையும் ஒன்றாகக் கருதுகிறான். அது மகிழ்ச்சி அளிக்கிறது. வரலாறு முழுவதும் இந்தியாவின் இந்த ஒருமைத்தன்மை நிலைபெற்று வந்திருக்கிறது.
இந்தியாவை பாபர் மேலும் இப்படி வர்ணிக்கிறான்...
“ஹிந்துஸ்தானம் ஒரு அற்புதமான நாடு. நமது நாடுகளை நோக்கும்போது அதை ஒரு தனி உலகம் என்றே கூறவேண்டும். அதன் மலைகளும் ஆறுகளும், காடுகளும் சமவெளிகளும், விலங்குகளும் தாவரங்களும், காற்றும் மழையும், அங்கு வாழ்வோரும் அவர் பேசும் மொழிகளும் எல்லாம் வேறுவிதமாக இருக்கின்றன. சிந்துவைக் கடந்தவுடன் தென்படும் தேசம், மரங்கள், கற்கள், நாடோடி பிரிவினர், மக்களின் பழக்க வழக்கங்கள் எல்லாம் ஹிந்துஸ்தானத்துக்கே உரியன. இங்குள்ள பாம்புகள் கூட வேறு மாதிரியாக இருக்கின்றன. ஹிந்துஸ்தானத்துத் தவளைகளை ஒருவன் அவசியம் பார்க்க வேண்டும். அவை, நமது நாட்டில் காணப்படும் வகையைச் சேர்ந்தவைதான் என்றாலும், நீரின் மீது ஆறேழு கஜ தூரம் வரையில் தத்திச் செல்கின்றன.”
பிறகு அவன் ஹிந்துஸ்தானத்தின் விலங்கு வகைகள், மர வகைகள், பழ வகைகள், பூ வகைகள் ஆகியவற்றை அடுக்கிக் கொண்டே போகிறான். அவன் நம் நாட்டு மக்களைப் பற்றிக் கூறுவதைக் கேள்...
“ஹிந்துஸ்தானத்தில் நம்மைக் கவர்ந்து மகிழ்ச்சி அளிக்கும் இன்பங்கள் மிகவும் குறைவு. மக்கள் பார்வைக்கு அழகாக இல்லை. நட்பின் நயங்களையோ, ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக கலந்து உறவாடுவதையோ, அது தரும் இன்பத்தையோ அவர்கள் அறியவில்லை. அவர்களிடம் அறிவு இல்லை. உணர்வு இல்லை, மரியாதை இல்லை, அன்பும் இல்லை. தங்களுடைய கைத்தொழில்களை வகுத்துக் கொள்ளும் அறிவுகூட அவர்களுக்கு இல்லை. அவற்றைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளை கண்டுபிடிக்கும் திறனும் அவர்களுக்கு இல்லை. சிற்ப அறிவோ திறமையோ இல்லை. அவர்களிடம் நல்ல குதிரைகள் இல்லை. நல்ல மாமிசம் இல்லை, திராட்சைப் பழங்கள் இல்லை, தர்பூசனிப் பழங்கள் இல்லை, வேறு சுவை மிக்க பழங்களும் இல்லை, பனிக்கட்டியோ, குளிர்ந்த நீரோ இல்லை, நாவிற்கு இனிய உணவு இல்லை, நல்ல ரொட்டி இல்லை, கல்லூரிகள் இல்லை, தீவட்டிகள் இல்லை. மெழுகுவர்த்திகள் இல்லை, மெழுகுவர்த்தித் தண்டுகள் இல்லை.’’ என்று சொல்லிக்கொண்டே போகிறான்.
பிறகு என்னதான் அவர்களிடம் இருந்தது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இதை எழுதியபோது பாபருக்கு இந்தியாமீது மிகவும் அலுப்புத் தட்டிப் போயிருக்க வேண்டும்.
அவன் மேலும் கூறுவதைப் பார்...
“ஹிந்துஸ்தானத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அதன் பரப்பும், பொன், வெள்ளி மிகுதியும்தான். ஒவ்வொரு தொழிலிலும் வியாபாரத்திலும் நிறையப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். எந்த வேலை என்றாலும், எந்த தொழில் என்றாலும் அதற்கென்று ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அந்தத் தொழிலும் வியாபாரமும் பரம்பரையாக அவர்களுடன் தொடர்ந்து வருகின்றன.’’
பாபரின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து நான் சற்று அதிகமாகவே எடுத்துக் காட்டிவிட்டேன்.
ஒரு மனிதனை உண்மையாக அறிவதற்கு அத்தகைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. 1530ல், தனது நாற்பத்தொன்பதாவது வயதில், பாபர் மரணமடைந்தான்.
அவனுடைய மரணத்தைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. அதாவது அவனுடைய மகன் ஹுமாயூனின் நோய் சரியானால் தனது உயிரைக் கொடுப்பதாகக் கூறினானாம். அதுபோல, ஹுமாயூன் குணமடைந்து வந்ததாகவும் சில நாட்களில் பாபர் இறந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
பாபருடைய உடல் காபூலில் அவனுக்குப் பிரியமான ஒரு பூங்காவில் புதைக்கப்பட்டது. எந்தப் பூக்களை எண்ணி வாடினானோ அவற்றிடமே அவன் சென்று சேர்ந்துவிட்டான்.