சுயமரியாதைக்கும் ஒரு விலை
தானா, அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது.
கூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச் செய்து விட்டதோ என்று தன் மேலேயே கோபமாகவும் கழிவிரக்கமாகவும் இருந்தது அவனுக்கு.
சுகமான ஏர்க்கண்டிஷன் அறையின் குளுமை, கட்டிலில் புரளுவதற்கு இதமாக இருந்த டன்லப் பில்லோ மெத்தை எதுவும் அவன் மனத்தை மகிழ்விக்கவில்லை. உடம்பைச் சுகப்படுத்தவில்லை, உணர்வைக் குளிர வைக்கவில்லை.
“காபி, ஓவல் எதினாச்சும் வேணுமா?”
என்று சமையற்காரன் வந்து கேட்ட போது அவனுடைய அந்தக் கேள்வியைப் பொருட்படுத்திப் பதில் சொல்வதே கேவலம் என்பது போல் பேசாமல் இருந்தான் இவன். வறுமையையும் மீறி இவனுடைய அறிவுத் திமிர் இருந்தது தான் காரணம்.
எழுத்தாளன் சங்கர் வறுமையில் வாடலாம். பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு பணத்துக்குச் சிரமப்படலாம். ஆனால் தன்னையே விலைக்கு விற்கலாமா?
இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனத்துள் சுழன்றது; கலக்கியது; குடைந்தது.
மடியில் வெண் பஞ்சுப் பொம்மை போன்ற பொமரேனியன் நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு ஒயிலாக சோபாவில் சாய்ந்தபடி தன்னிடம் நடிகை ஜெயசரோஜா தெலுங்கின் ஒலிச் சாயலுடன் கூடிய மழலைத் தமிழில் காலையில் செல்லமாகப் போட்ட உத்தரவு அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவனைத் தான் விலைக்கோ வாடகைக்கோ வாங்கியிருக்கிறோம் என்ற தொனி அவளது அந்த உத்தரவில் இருந்தது.
வெறும் ஐந்து நாள் வாடகைக்கோ கூலிக்கோ தன்னை விற்றுக் கொள்ளும் அளவுக்கு அவன் வறுமைப் பட்டுத்தான் போயிருந்தான். வறுமை வேறு, சுயமரியாதை வேறு என்பதும் அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. ‘வறுமைக்காக நேர்மையை விற்கலாமா? வறுமைக்காகச் சுயமரியாதையை விற்கலாமா? வறுமைக்காக மானரோஷத்தை விற்கலாமா?’ என்பதெல்லாம் வறுமை என்ன வென்று தெரியாதவர்கள் மேடைகளிலும் தலையங்கங் களிலும் கேட்கக் கூடிய நாசூக்கான கேள்விகள். வறுமை என்னவென்று அறிந்து உணர்ந்து அனுபவிப்பவனுக்குக் கேள்விகள் கேட்கவும் ஆராயவும் கூடத் திராணி இராது. வறுமையே அவனைக் கொன்றுவிடப் போதுமானதாக இருக்கும்.
இங்கே ஏழ்மையையும் வறுமையையும் பற்றி உருகிப் போய் உரத்த குரலில் பேசுவதற்குக் கூட ஓரளவு வசதி வேண்டும். வசதியில்லாத வெங்கம் பயல் ஏழ்மையையும் வறுமையையும், பசியையும், பட்டினியையும் பற்றிப் பேசினால் கூட அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். வறுமையைப் பற்றிப் பேசப் போதுமான வசதியும், வசதியை விமர்சித்துப் பேசப் போதுமான வறுமையும் வேண்டுமென்று இந்நாட்டு அரசியல் கட்சிகள் தான் ஒரு நிலையான மாமூலை இங்கே ஏற்படுத்தி வைத்திருக்கின்றனவே!
சங்கர் அரசியல் கட்சிகள் எதிலுமே இல்லை. ஆனாலோ அல்லது அதனாலோ வறுமை அவனிடம் நீக்கமற நிறைந்திருந்தது. வறுமை மட்டுமில்லை, வறுமையும் திறமையும் சேர்ந்தே நிறைந்திருந்தன.
‘பூங்கொத்து’ பத்திரிகை ஆசிரியரை அவன் சந்திக்கப் போயிருந்தபோது தான் முதன் முதலாக இந்த நூதன யோசனையை அவர் அவனிடம் தெரிவித்திருந்தார்.
சங்கரன் அந்த வாரத்து வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டுமே என்ற வேதனையில் ஓர் அருமையான குறு நாவலுடன் பூங்கொத்து ஆசிரியரைச் சந்திக்கப் போயிருந்தான்.
பூங்கொத்து ஆசிரியர் சினிமா உலகில் உதவி டைரக்டராகப் பலகாலம் இருந்து சலித்துப் போய்ப் பத்திரிகைத் துறைக்கு வந்திருந்தவர். பத்திரிகைத் துறைக்கு சினிமாவும் பயன்பட வேண்டுமென்பதை விடச் சினிமாத் துறைக்குப் பத்திரிகையை அதிகமாகப் பயன்படுத்தினால் பாமரர்கள் ஏமாறுவார்கள் என்று நம்புபவர். எதை விற்றும் எப்படி விற்றும் பணம் பண்ணுவது பாவமில்லை என்று எண்ணிச் செயல்படுபவர்.
“இந்தா பாருங்க சங்கர்! குறுநாவல் தொடர்கதை அது இதுன்னு நீங்களே எழுதிச் சிரமப்படறதை விட இன்னும் சுலபமா ஒரே வாரத்திலே நாலாயிரம் ஐயாயிரம் சம்பாதிக்க வழிபாருங்க... எத்தினி நாள் தான் இப்பிடிக் கஷ்டப்பட்டுக்கிட்டுத் தெருத் தெருவா அலையப் போறீங்க...?”
“இப்ப நீங்க சொல்றது புரியலே சார்!”
“அறிவுள்ளவங்களா யிருக்கிறவங்க பிரபலமாறதை விட ஏதோ காரணத்தாலே ஏற்கெனவே பிரபலமாகி இருக்கிறவங்களையே அறிவுள்ளவங்கன்னு ஜனங்களை நாம நம்ப வச்சா ஒரு ‘த்ரில்’ இருக்கும்.”
“நீங்க என்ன சொல்றீங்கன்னு இன்னும் எனக்குப் புரியலே சார்!”
“புரியும் படியாச் சொல்றேன் கேளுங்க... கோடிக்கணக்கான சினிமா விசிறிங்களை எங்க பத்திரிகைப் பக்கம் கவனத்தைத் திருப்பறதுக்காக ஒரு திட்டம் போட்டிருக்கோம்! பிரபல நடிகைங்களைத் தொடர்கதை எழுத வைக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...”
“அதெப்பிடி சார் முடியும்? இங்கே முக்கால்வாசி ஸ்டார்ஸுங்களுக்குத் தமிழே தெரியாதே? ... தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ தானே அவங்க தாய் மொழி?...”
“தமிழ்லே எழுதறதுக்குத் தமிழ் தெரிஞ்சாகணும்னு உமக்கு எந்தக் கபோதி சொன்னான்?”
“இதெல்லாம் தெரியறத்துக்குக்கூட ஒருத்தர் வந்து சொல்லிக் கொடுக்கணுமா என்ன?”
“வீண் வாதம் வேணாம்... இப்ப ஃபீல்டிலே இருக்கறதிலேயே டாப் ஹீரோயினான ‘குமாரி ஜெய சரோஜா’ நம்ம மேகஸின்லே ஒரு தொடர்கதை எழுதறதா ஒப்புத்துக்கிட்டிருக்காங்க...”
“ஜெயசரோஜாவை ‘டாப்’ ஹீரோயின்னீங்களா? ‘டாப் லெஸ்’ ஹீரோயின்னீங்களா? என் காதிலே சரியா விழலே...?”
இதைக் கேட்டு பூங்கொத்து ஆசிரியர் சிரித்துக் கொண்டார்.
“சரி! சரி! இந்தக் குத்தல் கிண்டல் எல்லாம் வேணாம். அப்பர் கூனூர்லே அவுங்களுக்கு அருமையான பங்களா இருக்கு. அவுங்க கூடப்போயி நாலு நாளு அங்கே தங்கி அவுங்க பேரிலே அந்த நாவலை எழுதிக் குடுத்தா நாலாயிரமோ ஐயாயிரமோ கிடைக்கும். நாய் வித்த காசு ஒண்ணும் குரைக்கப் போறதில்லே...?”
“அதாவது பச்சையாகச் சொல்லணும்னா உடம்பை வித்த காசை அறிவை வித்து வாங்கணுமாக்கும்...?”
“இந்த விதண்டாவாதம்லாம் வேண்டாம். உமக்குப் பெரிய குடும்பம். மனைவி நிரந்தர நோயாளி, ஏழெட்டுக் குழந்தைகள், ஐந்து பெண், ரெண்டு பையன்கள், செலவும், சிரமங்களும் நிறைய இருக்கும். உம்ம கஷ்டத்துக்குப் பணம் நிறையத் தேவை. அது எப்படி வந்தால் என்ன?”
“ஒரு சத்தியவாதிக்குப் புகழும், பணமும் வர வேண்டும் தான். ஆனால் அவை வருகின்றன என்பதை விட எப்படி எங்கிருந்து வருகின்றன என்பதுதான் மிக மிக முக்கியம்.”
“நீர் உருப்படப் போறதில்லே. வாதப் பிரதிவாதங்களிலேயே சாகப்போகிறீர்...”
“வாதப் பிரதிவாதங்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு உரம்...”
“இப்ப நான் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறேன்.”
“அறிவுக்கும் பொருளுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறீர்களா?”
“நான் எதுவும் சொல்லப் போறதில்லே. உங்க இஷ்டம்... பணம் அவசியம்னு தோணித்துன்னா மறுபடி என்னை வந்து பாரும்...”
சாகக் கிடக்கும் மனைவி, தாங்க முடியாத வைத்தியச் செலவுகள், குழந்தைகளின் காலேஜ் ஃபீஸ், பள்ளிக்கூடச் சம்பளங்கள், வீட்டுச் சாமான்களின் செலவுகள், எல்லாமாகக் கிடுக்குப்பிடி போட்டு இறுக்கியதால் இரண்டு நாள் கழித்துச் சங்கரே ஒரு விரக்தியில் மனம் மாறி மறுபடி பூங்கொத்து ஆசிரியரைப் போய்ப் பார்த்துத் தெலுங்கு நடிகை ஜெய சரோஜாவின் பெயரில் தமிழ்ப் பத்திரிகை ‘பூங்கொத்தில்’ தொடர் கதை எழுத ஒப்புக் கொண்டு விட நேர்ந்தது. ஆனால் சங்கர் கூனூர் போகமட்டும் இசையவில்லை. சென்னையிலேயே அடையாறில் இருந்த அந்த நடிகையின் பங்களாவில் ஓர் ஏ.சி. அறையில் தங்கி அதை எழுத ஒப்புக் கொண்டிருந்தான். நோயாளி மனைவியையும் அன்றாடம் காய்ச்சிக் குடும்பத்தையும் விட்டுவிட்டுக் கூனூர் போக அவன் விரும்பவில்லை.
அங்கே அவனுக்கு ராஜோபசாரம் நடந்தது. நடிகை பெயரில் அவன் எழுதிய நாவலின் பெயர் ‘கசங்காத ரோஜா’.
ஏறக்குறைய நாவல் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. ‘ஃபினிஷிங் டச்‘ கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.
நாளை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டு விடலாம். அதற்குள் எழுத்தாளன் சங்கருக்கு ஓர் ஆசை எழுந்தது. தனது எழுத்துக்களை எல்லாம் வழக்கமாக அச்சுக்கு அனுப்பு முன் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும் ஓர் ஆத்ம சிநேகிதனிடம் இதையும் படித்துப் பார்க்கச் சொல்லி அபிப்பிராயம் கேட்கலாமா என்று தோன்றியது. ‘யார் பேரிலோ வெளிவரப்போகிற ஓர் எழுத்தைப் பற்றி இத்தனை அக்கறை தேவைதானா?’ - என்றும் தயக்கமாகவும் இருந்தது. முடிவில் ஆசை தான் வென்றது.
அன்றாட வழக்கம் போல் மாலையில் நடிகையின் பங்களாவிலிருந்து வெளியேறி, வீட்டுக்குப் போய் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டிவிட்டுத் திரும்பக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டுத் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு மாடியில் தனிக்கட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த தனது அந்த நண்பனிடம் தன் புதிய கையெழுத்துப் பிரதியோடு போனான் சங்கர்.
சங்கர் நண்பனின் அறைக்குப் போனபோது மாலை ஏழு மணி. நண்பன் சங்கரின் புதிய நாவலைப் படித்து முடித்த போது இரவு பதினொன்றரை. நண்பன் உணர்ச்சிவசப்பட்டு சங்கரைப் பாராட்டினான்:-
“இத உன் ‘மாஸ்டர் பீஸ்’ என்று நான் துணிந்து சொல்வேன். நாவல் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த நாவலிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் ஆரம்பமாகும். இது வெளிவந்தால் பரிசும், பாராட்டும், புகழும் உன்னைத் தேடி வரும்“ - அது எதற்காக யார் பெயரில் வெளியிடுவதற்காக எழுதப்பட்டது என்பதை நண்பனிடம் வெளியிடத் தயக்கமாக இருந்தது சங்கருக்கு. யோசித்தான்; தயங்கினான். மனம் குழம்பினான். தெளிவு பிறக்கச் சிறிது நேரம் பிடித்தது. பின்பு நிதானமாக நண்பனைக் கேட்டான். இப்போது சங்கரின் குரலில் குழப்பமில்லை.
“ரூம் செர்வீஸ், உணவு வசதி இவற்றோடு ஒரு முதல் தர ஹோட்டல்ல ஏ.ஸி. ரூமுக்கு ஐந்து நாளைக்கு என்ன சார்ஜ் செய்வார்கள் சொல்ல முடியுமா?”
“ஏன்? அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது?”
“இல்லை! உடனே அது எனக்குத் தெரிந்தாக வேண்டும்.”
சங்கரிடம் சில விவரங்களை விசாரித்த பின் ஏதோ ஒரு கணக்குப் போட்டு ஐந்து நாளைக்கு ரூ. 525 செலவாகும் என்று தெரிவித்தான் நண்பன்.
“உன்னிடம் இப்போது அவ்வளவு பணம் இருக்குமா?”
“ரொக்கமாக இல்லை. பேங்கில் இருக்கிறது. காலையில் எடுக்கலாம்.”
“இப்போதே செக் தரமுடியுமா?”
“அவசியமானால் தருகிறேன்.”
“உடனே நடிகை ஜெயசரோஜா பெயருக்கு ரூ. 525-க்கு ஒரு செக் எழுது.”
நண்பன் செக் புத்தகத்தை எடுத்து எழுதிச் செக் லீஃபைக் கிழித்துச் சங்கரிடம் நீட்டினான்.
“சகோதரி ஜெயசரோஜாவுக்கு,
ஐந்து நாட்களாக நான் எழுத இடம் கொடுத்து, உணவு உறையுள் அளித்ததற்கு நன்றி. அதற்கான செலவுகளை ஈடு செய்வதற்காக இதனுடன் உங்கள் பெயருக்கு ஒரு செக் இணைத்துள்ளேன். செக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”
என்று பொருள்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துடன் அந்த செக்கையும் இணைத்து நண்பனிடம் ஒரு தபால் கவரும் ஸ்டாம்பும் வாங்கி உடனே ஒட்டிப் போஸ்ட் செய்து விட்டான் சங்கர்.
இருவருமாக நடந்தே போய் மவுண்ட் ரோட் போஸ்ட் ஆபீஸில் அதைச் சேர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது ஸ்டார் டாக்கீஸிலும் பாரகனிலும் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டுவிட்டார்கள்.
தெரு தற்காலிகமாகக் குரல்களாலும், ஜனங்களா லும் கலகலப்படைந்திருந்தது. நண்பன் சங்கரைக் கேட்டான்:-
“இதெல்லாம் என்னப்பா கூத்து?”
“பின்னால் எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். இப்போது நான் சொல்வது புரிந்தாலும் புரியாவிட்டா லும் கேட்டுக் கொள்.”
“சொல்லு...”
“இந்த ஐநூத்தி இருபத்தஞ்சு ரூபாயைப் பற்றி உன் டைரியிலே எழுதறப்போ... ‘நண்பன் சங்கரின் சுயமரியாதை அவசர அவசரமாக விலைபோக இருந்தபோது தக்க சமயத்தில் அதைத் தடுக்கக் கொடுத்து உதவிய கடன்’ என்று மட்டும் சுருக்கமாக எழுதிக் கொள். பின்னால் முடிகிற போது நான் உனக்கு இதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்!... உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா இன்னொரு நானூறு ரூபாய்க்கு என் பெயருக்கு ஒரு செக் கடனாகக் கொடு. அதையும் முடிகிற போது திருப்பித் தந்து விடுகிறேன். என்னைப் போல் ஒரு அறிவாளி கடனாளியாயிருக்கலாம். ஆனால் ஏமாளியகவோ கோமாளியாகவோ ஆகிவிடக் கூடாது. அப்படி ஆகாமல் தக்க சமயத்தில் நீதான் என்னைத் தடுத்தாய். உனக்கு நன்றி.”
தனக்காக தன் நண்பன் சங்கரால் மனம் திறந்து கூறப்பட்ட நன்றியின் காரணம் அவ்வளவு தெளிவாகவும் உடனடியாகவும் விளங்கவில்லை என்றாலும், மேலும் நானூறு ரூபாய்க்குச் செக் தர அவன் உடனே இணங்கினான்.
தெருக்களில் தியேட்டர்கள் வெளித்தள்ளிய ஜனக் கூட்டம், அதன் குரல்கள்; சலசலப்புக்கள் எல்லாம் குறைந்து மௌனமும் சலனமற்ற சந்தடியற்ற - நடமாட்டமற்ற நள்ளிரவின் சுகமான அமைதியும் மீண்டும் திரும்பி வந்திருந்தன.