வாழ்வியல் சிந்தனைகள் 19 – ராதா மனோகர்


சந்தேகம் கொள்.. கேள்வி கேள்.. சிக்னல்களை சரியாக புரிந்து கொள்..

அழகை ரசிக்கும் ஆற்றல் எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது.

இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது? பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும் இன்றைய வாழ்வு அமைந்துள்ளது.

எமது தேவைகள் என்று எமக்கு தேவையே இல்லாத பல விருப்பங்களை எமது தலைமீது சுமத்தி எம்மை ஒரு பொதி சுமக்கும் கழுதைகளாக உருமாற்றி இருக்கிறது.

எமது உண்மையான தேவைகளை நோக்கி எம் உள்ளுணர்வுகள் ஓயாது குரல் கொடுத்து கொண்டு இருக்கையில், அதற்கு நேர் எதிர்மாறாக எமது தலையில் சுமத்தப்பட்ட விருப்பங்களை நோக்கி நாம் மனத்தால் ஓடுகிறோம். விளைவு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப்பட்டு அவதிபடுகிறோம்.

எமது உள்ளுணர்வுக்கு நாம் ஒருபோதும் உண்மையாக இருந்ததே இல்லை. எனவே எமது உள்ளுணர்வுகளுக்கு இந்த வாழ்க்கை உகந்ததாகவே இல்லை.

பாரம்பரியம் அல்லது அனாதிகாலமாக உருவான சனாதன தர்மம், புத்தரின் தம்மபதம், பழைய புதிய ஏற்பாடுகள் மேலும் அதிகம் போனால் இன்று வழக்கத்தில் இல்லாது போய்விட்ட புராதன காலத்து சமய நம்பிக்கைகளாக இருந்தாலும் சரி இவை எல்லாமே அதிகம் மிஞ்சி மிஞ்சி போனால் ஆறாயிரம் வருஷங்களுக்கு பின்னே வந்தவைதான்.

இத்தனை கோடானு கோடி வருஷங்களாக உருவான இந்த உலகம் எவ்வளவு புத்திசாலித்தனமானது, எவ்வளவு அழகானது, எவ்வளவு கருணை நிறைந்தது என்று ஒரு கணம் சிந்தித்து பார்த்தால் நாம் எவ்வளவு தூரம் பாமரத்தனமான கோட்பாடுகளை கட்டிக்கொண்டு வாழத்தெரியாமல் வாழ்ந்திருக்கிறோம் என்று புரியும்.

கண்ணுக்கு தெரியாத, நிதர்சனமாக காட்ட முடியாத மேல்லோகம் கீழ் உலகம் பாவம், புண்ணியம், கடவுள் அருள் போன்ற எத்தனையோ சமாசாரங்களை அவைகள் போதித்தாலும் அடிப்படையில் சமயங்கள் எல்லாமே மனிதர்களை குழுக்கள் அல்லது சமூகங்களாக கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கும் காரியத்தையே முதன்மை கடைமையாக கொண்டிருந்தன.

உண்மையில் மதம், கலாச்சாரம், அரசியல் இவையெல்லாம் ஒரே நோக்கத்தை கொண்டுதான் இந்த உலகில் இயங்கி வந்துள்ளன. மதங்களை பெரிய அரசியல் கட்சிகள் என்றும் கூறலாம். அதேபோல அரசியல் கட்சிகளை சிறிய மதங்கள் என்றும் கூறலாம். அதனால்தான் மத நம்பிக்கை அதீதமாக இருக்கும் மக்கள் கூட்டத்தினர் மத்தியில் தீவிரவாத அரசியல் இயக்கங்கள் உருவாவது சுலபம்.

சமயங்களின் வரலாறுகள் என்று பார்த்தால் அவை எல்லாமே யுத்தவரலாறுகள் என்பதுதான் வேதனையான விசயம். சுயமாக சிந்திக்க மறந்த கூட்டம் பயம் காரணமாக ஏதாவது ஒன்றை நம்பியே காலத்தை ஓட்டும். இவர்களிடம் கொஞ்சம் பலத்தை காண்பித்தவன் ஹீரோவாக அல்லது சர்வாதிகாரியாக உருவெடுப்பான்.

அவனுக்கு பின்னால் அணிவகுத்த பாமர மனிதர்கள் தங்கள் சகோதர்களை யுத்தங்கள் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வதுதான் பெரும்பாலும் சமய வரலாறுகளாக இருக்கிறது. இந்த மனித குலம் சரியாக வாழதெரிந்து இருந்தால் ஏன் வரலாறு இவ்வளவு யுத்தங்களையும், அழிவுகளையும், கொடுமைகளையும் சந்தித்து இருக்கிறது?

எனவே மனிதர்களுக்கு வாழ்க்கையை பற்றியா புரிந்துணர்வில் எங்கேயோ ஒரு தவறு நேர்ந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் நாம் வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

வாழ்க்கை என்றால் என்ன என்று முதலில் நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்றால் என்னவென்று இதுவரை புத்தகத்தில் படித்ததை விட்டு விட்டு உங்கள் நெஞ்சை கொஞ்சம் திறந்த மனதோடு கேட்டு பார்க்க வேண்டும்.

இது உங்களால் நிச்சயம் முடியவே முடியாது. உங்கள் மனம் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக மூடப்பட்டே இருக்கிறது. நீங்கள் உங்கள் மனதை தொலைத்தே விட்டீர்கள். அதை தேடிப்பிடிக்க நிச்சயம் உங்களுக்கு பல தூரம் செல்லவேண்டி உள்ளது.

முதலில் மனம் என்றால் என்னவென்று உங்களை நீங்களே கேட்டு பாருங்கள். எவ்வளவு போலியான ஒரு செய்திகளின் மூட்டையைதான் இதுவரை காலமும் நீங்கள் உங்கள் மனம் என்று நம்பிக்கொண்டு இருந்திருப்பதை காணுவீர்கள்.

உங்கள் மனம் என்ற மாளிகை உங்களுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத விதத்தில் அதுவும் விருப்பமே இல்லாத விதத்தில் கட்டப்பட்டு இருப்பதை அனேகமாக காண நேரிடும். உங்களுக்கு விருப்பமான விசயங்கள் எல்லாமே உங்களுக்கு வெகு தூரத்தில்தான் இருப்பது ஏன்?

இதுதான் தலைவிதியா? இல்லை நிச்சயம் இல்லை. அப்படியாயின் ஏன் எனது வாழ்வு நான் விரும்பும் விதத்தில் அமையவில்லை? உங்களுக்கு விருப்பம் என்று ஏதாவது ஒன்று உண்டா? இல்லை இல்லை இல்லவே இல்லை.

நீங்கள் முற்று முழுதாக இருட்டில் அல்லவா இருக்கின்றீர்கள்? இரட்டை வாழ்க்கை அல்லவா வாழ்கிறீர்கள? விதிவிலக்காக சிலர் தாங்கள் விரும்பும் தங்களது சுய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

மனிதரை தவிர்ந்த இதர ஜீவராசிகள் எல்லாமே ஏறக்குறைய தாங்கள் விரும்பும் வாழ்க்கையைத்தான் வாழ்கின்றன. வாழ்க்கை இயங்கும் முறையில் ஒரு கணிதம் போன்ற ஒழுங்கு முறை ஒன்று இருக்கிறது. அதை நாம் கணக்கு வழக்கு இல்லாமல் குழப்பி வைத்திருக்கிறோம். அதனால் வாழ்க்கையும் குழப்பமாக இருக்கிறது.

நாம் பயணிக்க வேண்டிய பாதையை மாற்றி தவறான பாதையை காட்டிய வழிகாட்டி படம் (விணீஜீ) எது? எமது வாழ்வுக்குரிய கணிதத்தை நாம் புரிந்து கொள்வதற்கு முதலில் இந்த இயற்கை விதிகள் என்பதை பற்றி கொஞ்சம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

நாம் இயற்கை விதிகளை காணமுடியாதவாறு எமது சமயங்களும் சம்பிரதாயங்களும் சமுகம் என்ற போர்வையில் பெரும் இரும்பு திரையாக மறைத்து நிற்கிறது.

திரைகளை விலக்கி நாம் நிஜத்தை காண எமக்கு துணிவு இருப்பதில்லை. திரைகளின் இருட்டு சுகத்தில் நீண்ட நாளாக தூங்கி விட்டோம். நீண்டநாள் தூக்கம் எமக்கு வாழ்வை தரவிட்டாலும் பயத்தின் காரணமாக வெளிச்சத்தை பார்க்க மறுக்கிறோம். எமக்கு எது வேண்டுமோ அதை நோக்கி தான் நாம் நகரவேண்டும்.

உண்மையில் நமக்கு எது வேண்டும்? இறைவனின் அருள் என்று உடனே சொல்லிவிடுவோம். இங்கேதான் மிகபெரும் தவறு இருக்கிறது. இறைவனின் அருள் அல்லது கருணை என்று நாம் எண்ணுவது உண்மையில் ஒரு வகையான லஞ்ச லாபம் போன்ற விடயம்தான்.

நாம் விரும்பும் விடயத்தை நமக்கு தந்துள்ளது நாம் வாழும் இந்த அகண்ட ஆழ்ந்த புத்திசாலியான அழகான பிரபஞ்சம். இந்த பிரபஞ்சம் நாம் விரும்பும் விடயத்தை நாம் எப்படி பெறமுடியும் எப்படி அடைய முடியும் என்றெல்லாம் எமக்கு தெளிவாகவே காட்டுகிறது.

ஆனால் நாம் எங்கிருந்தோ இறக்குமதியான பழைய குப்பைகளை எல்லாம் மனனம் செய்து கண் முன்னே தெரியும் காட்சியை பார்க்க மறுக்கிறோம். சரியான இயங்கியல் தத்துவம் தான் உண்மையை காட்டும், இந்த விடயம் பற்றி நான் இன்னும் எவ்வளவோ எழுத உள்ளேன்.

மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள். ஒன்றையும் நம்பாதீர்கள்..

நம்பினால் தொலைந்தீர்கள். நம்புவது சுலபம், ஆனால் அது ஒரு தற்காலிக மாத்திரைதான். அது ஒருபோதும் சரியான தீர்வாக இருக்காது. நம்பிகை அடிப்படையில் பலதூரம் சென்றபின் அந்த நம்பிக்கை வீண் என்று தெரிந்த பின் அதை விட்டு வெளியேற அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை வேண்டும். அது இலகுவான காரியம் அல்ல. நம்புவது உங்கள் ஆழ்மனதில் என்ன என்ன ஆசைகள் இருக்கின்றதோ அவைதான் உங்களை நோக்கி வரும்.

ஆனால் வாழ்வை பற்றிய புரிந்துணர்வு இல்லாமையால் சதா சம்பந்தம் இல்லாத விடயங்களை எல்லாம் ஆழ்மனதிற்குள் புகுத்தி தேவைபடாத விடயங்களை எல்லாம் உங்களை நோக்கி ஈர்த்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த விருப்பம் இல்லாத சுழற்சியில் இருந்து விடுபடவேன்டாமா? முதலில் உங்கள் விருப்பத்தை கண்டு பிடியுங்கள். உங்களுக்கு முற்று முழுதாக நீங்கள்தான் பாஸ்.

Previous Post Next Post

نموذج الاتصال