சாதிப்புத்தி எப்போ வெளிப்படும்? - சுமதி விஜயகுமார்

 


இணைய தளத்தில், தலித்துகள் தனியாக வினையாற்ற வேண்டும் என்ற சர்ச்சைகள் அடங்கிய நேரம், வீட்டில் தலித்துகள் குறித்த பேச்சு எழுந்தது. 'எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க' என்று தலித்துகளை குறித்து பேசிய  நண்பர், தான் ஒரு  ஒரு ஜாதி இந்து என வெளிப்படையாக காட்டிக் கொள்பவர். 'எப்படி இருந்தாலும் புத்திய காட்டிடுவாங்க' என்ற சொற்றொடரைஇதற்கு முன் பலமுறை கேட்டும், சிலமுறை நானும் பயன்படுத்தியுள்ளேன். அவை எல்லாம் பார்ப்பனர்களை குறித்து. 

இப்போது யோசித்தால், பார்ப்பனர்கள் மற்றும் தலித்துகளுக்கு மட்டும் தான் ஜாதி புத்தி இருக்கிறதா என்று பார்த்தால், பார்ப்பனர்களிடம் அடங்கியும், தலித்துகளிடம் ஒடுக்குமுறையும் மேற்கொள்ளும் ஜாதி ஹிந்துக்களுக்கு ஜாதி புத்தி இருக்கத்தான் செய்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள நண்பர் அந்த வகையை சேர்ந்தவர்.  தாத்தா வயதில், வயலில் வேலை செய்யும் ஒருவரை, அப்பாவும் அம்மாவும்  'நீ, வா, போ' என்று தான் அழைப்பார்கள். அந்த ஜாதி புத்தியை எங்களுக்கு கடத்தவில்லை. அவரை மரியாதையாக அழைக்க கத்துக் கொடுத்திருந்தார்கள். நான் பின்பற்றும் ஜாதி புத்தியை என் குழந்தைகளுக்கு கடத்தாமல் இருப்பதில் மிக கவனமாக இருக்கிறேன். அவ்வப்போது , ஜாதி நுணுக்கங்களை விளக்கி சொல்லி வளர்க்க வேண்டுமோ என்ற குழப்பமும் வரும். 


படிநிலையில் இருக்கும் ஜாதியில் , ஒவ்வொரு ஜாதிக்கும் அதற்கேற்றார் போல ஜாதி புத்தி இருப்பதில் வியப்பில்லை. ஆனால் அடிக்குபவனின் ஜாதி புத்தியை, அந்த அடக்குமுறையில் இருந்து திமிறி எழுபனின் ஜாதி புத்தியுடன் (?) ஒப்பிடுவது சரியானதாக இருக்க முடியுமா. நேற்று வரைக்கும் கை கட்டி நின்றவர்கள், திடீரென கைகளை இயல்பாய் வைப்பதை கூட 'ஜாதி புத்திய காட்றான் பாரு' என்று சொல்லிவிட முடியும். உயர் ஜாதி மற்றும் நடுநிலை ஜாதி என்று தங்களை கருதி கொள்பவர்களுக்கு மட்டுமே ஜாதி புத்தி இருக்கும். 

நண்பர் ஒருவர் வீட்டு வேலைக்கு ஒரு தலித் பெண்ணை பணியமர்த்தி விட்டு சொன்னது 'அவங்களுக்கு எல்லாம் சுத்தம் பத்தவே பத்தாது'. முதன்முறை நான் knife &fork உபயோகிக்கும் பொழுது இருந்த சிரமம் நினைவிற்கு வந்தது. நன்றாக உபயோகிக்க தெரிந்தவர்கள் என்னை பார்த்து நினைத்திருப்பார்கள் 'இவங்களுக்கு எல்லாம் etiquette எப்போதும் வராது' என்று. பழக்க வழக்கங்களை ஜாதியுடன் இணைந்து பார்ப்பது விந்தையிலும் விந்தை. அருகில் சென்றாலே துர்நாற்றம் அடிக்கும் பார்ப்பன பெண்ணையும் பார்த்திருக்கிறேன், குறுகிய வீட்டை சுத்தமாக வைத்துள்ள தலித் பெண்ணையும் பார்த்திருக்கிறேன். இதில் ஜாதி புத்தி பிறழ்ந்து விட்டது போலும்.

மேற் சொன்னவை எல்லாம், ஜாதிய அரசியல் பற்றி சரியான புரிதல் இல்லாத பொது மக்கள். ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் பேசும் ஜாதி புத்தியின் அரசியல் தான் மிக ஸ்வாரஸ்யமானது. மிக ஆபத்தானதும் கூட. அரசியல் புரிதல் உள்ளவர்கள் 'ஜாதி புத்தி' என்ற வார்த்தையை மட்டும் தான் உபயோகிக்க மாட்டார்களே தவிர, அவர்களின் வாதம், ஜாதி புத்தி பற்றி பேசும் சாதாரண பொது மக்களுக்கு ஒரு போதும் சளைத்ததாய் இருக்காது.

அவர்களின் அரசியல் எல்லாம் தூய்மை வாதம் மட்டுமே. ஜாதி ஒழிப்பு போர்வையில் ஒளிந்து கொண்டு, தங்கள் ஜாதியை (!) சேர்ந்த தலைவர்களின் சறுக்கல்களை ஒதுக்கி வைத்து கொண்டாடும் அதே வேளையில், மற்ற ஜாதி ஒழிப்பு தலைவர்களின் அரசியலை குறைகூறிக்  கொண்டிருப்பார்கள். இது போன்ற ஆட்கள் அனைத்து இடது சாரி அரசியல் இயக்கங்களிலும் இருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கர், மார்ஸ் எங்கு தவற விட்டார்கள், இதில் சிறந்து இருந்தார்கள் என்ற வாதத்தினை விடுத்து, அவர்களையும் அவர்களின் கோட்பாடுகளையும் பகடை செய்பவர்களிடம் ஒதுங்கி இருப்பதே சமூகத்திற்கு நல்லது. தூய்மைவாத அரசியலை போல ஒரு கேடு வேறு எதுவும் இல்லை.

மனிதனால் படைக்கப்பட்ட கடவுள்களிலேயே தூய்மையான கடவுள் என்று ஒன்றில்லை. உண்மையில் தூய்மை என்று ஒன்று இல்லவேயில்லை. அனைத்தும் கலப்பது தானே இயற்கை. சக இயக்கத்தவர்களுடன் எங்கே உடன்பட வேண்டும் எங்கு மாறுபட வேண்டும் என்று தெரியாதவர்கள், அல்லது தெரிந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் பேசும் அரசியல், வலது சாரி இயக்கத்தவர்களின் அரசியலுக்கு இணையாக தான் இருக்கிறது. ஜாதி ஒழிப்பு பேசும் மக்களிடமே இவ்வளவு குறைகள் இருக்கும் பொழுது, ஜாதி பெருமை பேசும் பொது சமூகத்திடம் என்ன விதமான மாற்றத்தை எதிர்பார்த்து விட முடியும் என்று தெரியவில்லை. 

எல்லா ஜாதியிலும் தேவை இல்லாத மயிர்கள் இருக்கத்தான் செய்கிறது.

Previous Post Next Post

نموذج الاتصال