நலம் நலமறிய ஆவல் - சுமதி விஜயகுமார்

 


யுடியூப்பில் விரும்பிப் பார்க்கும் பாடல்களில் ஒன்று காதல் கோட்டையில் வரும் நலம் நலமறிய ஆவல். 

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று பார்த்த பொழுது, இன்லேண்ட் லெட்டரை தேவயானி கைகளில் ஏந்தி அதற்கு முத்தமிட்ட பொழுது நினைவுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்று விட்டது. ஈமெயில், அலைபேசி மட்டுமில்லை, தொலைபேசி கூட எல்லோர் வீட்டிலும் இல்லாத காலத்தில் inland லெட்டர் தான் அனைத்துமாக இருந்தது. 

எங்கள் வீட்டிற்கு வரும் inland லெட்டரின் எண்ணிக்கை அதிகம். போஸ்ட்மேன் பணியிடமாற்றம் பெற்றால் எங்கள் வீட்டிற்கு தெரியும் அளவிற்கு. Inland லெட்டர் என்றதும் முதலில் நினைவிற்கு வருவது தாத்தா தான். அவர்தான் அடிக்கடி கடிதம் எழுதுவார். குழந்தையாய் இருந்ததினால் சரியாக எத்தனை நாட்களுக்கு ஒருமுறை என்பது நினைவில் இல்லை. என்னை பற்றி தாத்தா எழுதி இருக்கும் வரிகளை மட்டும் அம்மா படித்துக் காட்டுவார். அம்மா, தாத்தா ஊருக்கு செல்ல வேணுடுமென்றால் முதல் வாரமே என்று போகப்போகிறோம் என்று கடிதத்தில் தெரிவித்து விடுவார். 

அடுத்ததாக நினைவிற்கு வருவது பெரியப்பா. அவர் மட்டும் தான், தாத்தா எங்கள் வீட்டிற்கு வைத்த சுமதி இல்லம் என்று பெயரை, விலாசத்தில் குறிப்பிட்டு எழுதுவார். அதனாலேயே அந்த கடிதத்தின் மீது ஆவல் பிறக்கும். கூடவே, அண்ணா, அக்காக்கள் எல்லாம் விடுமுறையில் எப்போது தாத்தா வீட்டிற்கு போக போகிறார்கள் என்ற செய்தியும் வரும். தேதி தெரிந்ததும், பரீட்சை எப்போது முடியும் ஊருக்கு எப்போது செல்வோம் என்ற பரபரப்பும் தொற்றிக் கொள்ளும். மற்ற விவரங்கள் பற்றி அதிக கவனம் செலுத்தியது இல்லை என்ற பொழுதிலும், தாத்தாவின் கடிதத்தில் இருப்பது தான் இதிலும் இருக்கும். 

எல்லா கடிதங்களும் 'நலம், நலமறிய ஆவல்' என்று தான் துவங்கும். இதை தவிர அவ்வப்போது கடிதங்கள் வரும் என்றாலும் இந்த இருவரின் கடிதங்கள் தான் நினைவில் உள்ளது.

இவை இல்லாமல், ஒரு பை நிறைய கடிதங்களை அம்மா சேமித்து வைத்திருந்தார். அவற்றில் ஒன்றையாவது படித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தாலும், ஒருமுறை கூட அவற்றை படிக்கும் தைரியம் இருந்ததில்லை. கொஞ்சம் கூச்சமும் சேர்ந்திருந்ததால் ஒன்றை கூட படிக்க தைரியம் வந்ததில்லை. அனைத்தும் காதல் கடிதங்கள். அப்பா அனுப்பிய அனைத்து கடிதங்களையும் அம்மா சேமித்து வைத்திருந்தார். அப்பாவின் கடிதங்கள் எப்போதும் envelopeல் தான் வரும். பக்கம் பக்கமாக. அம்மாவிற்கு என்ன எழுதி இருப்பார் என்ற ஆர்வம் சிறு வயதில் வந்ததில்லை. பல ஆண்டுகள் கழித்து அம்மாவிடம் சொல்லியதுண்டு ஒரு கடிதத்தையாவது படித்து விட வேண்டும் என்று. 'ஆமா, அதுல என்ன இருக்கு. ஒன்னும் இருக்காது' என்ற பதில் மட்டும் வரும். ஒரு போதும் எடுத்து படி என்று சொல்லியதும் இல்லை, அம்மா அப்பாவின் காதல் என்பதால் அதை ஒருமுறையாவது படித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்த பொழுதும், தயக்கம் இருந்ததால் படித்ததுமில்லை.

அவையெல்லாம் இப்பொழுது இருக்கின்றனவா, செல்லரித்து போய்விட்டதா என்று கூட தெரியவில்லை. நான் கொஞ்சம் பெரிய பெண் ஆன பிறகு அப்பா அனுப்பிய கடிதங்களில் எனக்கு ஒரு பக்கம் இருக்கும். பெரும்பாலும் படிப்பை பற்றியதாக தான் இருக்கும். 

அவைகளை தவிர நண்பர்கள் எழுதும் கடிதங்கள் மற்றும் க்ரீட்டிங் கார்டுகள் ஒரு பெட்டி நிறைய இருக்கிறது. அடுத்த முறை ஊருக்கு சென்று எடுத்து பார்க்க வேண்டும். ஒரு சில கடிதங்களின் சாரம் கூட இன்னும் நினைவில் இருக்கிறது. நெருங்கிய ஒருவர் தன் கைப்பட எழுதிய கடிதம் கடைசியாக எப்போது படித்தேன் என்பது கூட நினைவில் இல்லை.

காதலித்து கொண்டிருக்கும் பொழுது, இணையர் 60 பக்க நோட்டில் காதல் கடிதம் (நூல்?) எழுதி கொடுத்தார். அது மட்டும் மிக பத்திரமாக இருக்கிறது. அதனை தொடர்ந்து நான் நான்கு பக்கங்களில் எழுதி கொடுத்த காதல் கடிதத்தை படித்துவிட்டு தொலைத்து விட்டேன் என்று சொன்ன பொழுது, கொஞ்சம் வருத்தம் எட்டிப்பார்த்தது. அவர் முதன்முதலில் கொடுத்த கிரீட்டிங் கார்டை வீட்டில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க நண்பரிடம் கொடுத்து வைக்க, அதை பிறகு பார்க்கவேயில்லை. அதுவும் தொலைந்து போனது. 

இரண்டாக மடிக்கும் inland லெட்டரில் தான் அத்தனை நினைவுகளும். அதன் பிறகு கொஞ்சம் விலையேறிய, மூன்றாக மடிக்கும் inland letter அறிமுகமான பொழுது, அதன் அமைப்பு எனக்கு பிடிக்கவில்லை. அப்போதே கடிதங்கள் வருவதும் குறைந்து போய் தான் இருந்தது. தாத்தா இறந்து போய்விட்டார். அநேக வீடுகளில் தொலைபேசி வந்திருந்தது. 

தாத்தா, பெரியப்பா, அப்பா எழுதிய கடிதங்களில் இருந்த கையெழுத்து கொடுத்த உணர்வை, பின்பதட்டச்சு செய்து வந்த ஈமெயில்கள் கொடுக்கவில்லை. Inland லெட்டரை வாங்கி வந்து கைப்பட எழுதி, அதை பசையால்  ஒட்டி (அதற்கென வீட்டில் பெரிய பசை டப்பா இருக்கும்), போஸ்ட் பாக்ஸில் போடுவதற்கெல்லாம் நிறைய நேரம் இருந்தது. இப்பொழுதெல்லாம் நீண்ட ஈமெயில் எழுதுவது கூட இல்லை. அனைத்தும் அலைபேசியில் குறுந்செய்தி அனுப்புவதில் சுருங்கி விட்டது.

இந்த முறை ஊருக்கு சென்று அந்த பெட்டியை திறந்து பார்க்க வேண்டும். பல வருட நினைவுகளை மீட்டெடுத்து சோகம் கலந்த ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பது நிச்சயம்.

அப்பாவும் தாத்தாவும் பெரியப்பாவும் , தொலைந்து போன, மறந்து போன நண்பர்களும் இருப்பார்கள்.

Previous Post Next Post

نموذج الاتصال