வரலாற்றின் காயங்களுக்கு மருந்து - கோவி.லெனின்


தஞ்சை பெரியகோயிலும் சிவன் உருவமும் அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடுகல்லாக நிறுவப்பட்டிருக்கிறது.

அது இரண்டாம் உலகப் போர்க் காலம். அப்போது, தாய்லாந்து நாட்டின் பெயர் சயாம். இன்றைய மியான்மர், அன்றைய பர்மா. இரண்டு நாடுகளுக்குமிடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது ஜப்பான். ஹிட்லரின் ஜெர்மனி, முசோலினியின் இத்தாலி ஆகிய நாடுகளுடன் ஜப்பானும் கூட்டு சேர்ந்து இங்கிலாந்து-பிரான்ஸ்-அமெரிக்கா நாடுகளைத் தாக்கி வந்தன. போரின் தொடக்கக் கட்டத்தில் ஹிட்லர் கூட்டணியின் கை ஓங்கியிருந்த நேரத்தில், அவரது கூட்டாளியான ஜப்பான் தனது படை மூலம் இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா என ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவைக் குறி வைப்பதுதான் ஜப்பானின் அடுத்த நோக்கம். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசியப் படை ஜப்பானின் ஆதரவுடன் அந்தமான் பகுதியிலும், வடகிழக்கு எல்லைப்புறமான இம்பால் பகுதியிலும் வெற்றிகரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தது.
இந்தியாவைக் குறி வைத்த ஜப்பான் தன்னுடைய படைகளையும் தளவாடங்களையும் நகர்த்துவதற்குக் கடல் வழியைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. அது மிகவும் சுற்றுப்பாதையாக இருந்ததுடன், , காலதாமதமதம் ஆனது. அதனால், மியான்மர்(பர்மா)-தாய்லாந்து(சயாம்) இடையே ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டது. 415 கி.மீ. நீளம் கொண்ட இந்த ரயில் பாதையை அமைப்பதற்கு ஜப்பான் தன்னிடம் போர்க்கைதிகளாக இருந்த ஆங்கிலேய ராணுவ வீரர்களையும், பிரான்ஸ்-அமெரிக்கா உள்ளிட்ட ராணுவ வீரர்களையும் பயன்படுத்தியது. அவர்கள் போதவில்லை என்பதால் மலேயாவிலும் பர்மாவிலும் இருந்த தமிழர்களை கூலியாட்களாகக் கொண்டு வந்தது.
ரயில் பாதை அமைக்கும் வேலைதானே என நினைத்து வந்த தமிழர்கள் போர்க்கைதிகளைவிட கொடுமையானக் கைதிகளைப் போல நடத்தப்பட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்ட இடமே சிறையைவிட மோசம். வேலை என்ற பெயரில் அவர்கள் அனுபவித்தவை அனைத்தும் சித்திரவதைதான். உணவின்றிப் பல மைல் நடந்தே செல்ல வேண்டிய நிலைமை. பசி, தொற்றுநோய், சித்திரவதைக் கொடுமை போன்றவற்றால் பல ஆயிரக்கணக்கானத் தமிழர்கள் உயிரிழந்தனர். ஜப்பானிடம் சிக்கியிருந்த பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் போர்க்கைதிகளும் மரணித்தனர். க்வாய் ஆற்றின் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலத்தின் மீது பிரிட்டன் படைகள் நடத்திய தொடர் தாக்குதலும், மரணத்தீ கணவாய் எனப் பெயர் பெற்ற பகுதியில் அமைக்கப்பட்ட ரயில் பாதையும் உயிர்க்காவுகளை சர்வசாதாரணமாக வாங்கியது. சிங்கப்பூர் செல்லும் பயணத்தின்போது, நேதாஜி இந்த ரயில் பாதையைப் பயன்படுத்தியிருக்கிறார். அவரிடம் தமிழர்கள் தாங்கள் படும் சித்ரவதைகள் பற்றி முறையிட்டுள்ளனர். எதையும் ஜப்பான் கேட்கவில்லை.
சயாம் ரயில் பாதை அமைப்பதற்காக ஏறத்தாழ 3 இலட்சம் பேர் பணியாற்றியதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். அவர்களின் உடல்களை ரயில் பாதை ஓரத்திலேயே பெரிய குழி வெட்டி மொத்தமாகப் புதைத்தனர். எங்கெங்கே கொத்து கொத்தாக செத்தார்களோ அங்கெல்லாம் மரணக்குழிகள்தான்.
இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன் (ரஷ்யா) களமிறங்கியபோது, ஹிட்லர் படை முறியடிக்கப்பட்டது. ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பான் சரணடைந்தது. சயாம் மரண ரயில்பாதை உயிர்ப்பலிகள் தொடர்பாக போர்க்குற்றத்திற்குள்ளானது ஜப்பான்.
அமெரிக்கா தன் போர்க்கைதிகள் புதைக்கப்பட்ட இடங்களைத் தோண்டி பலரது உடல்களை சொந்த நாட்டிற்கு கொண்டு சென்றது. பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஒரே குழியில் இருந்த உடல்களை தனித்தனியாக அடக்கம் செய்தன. தாய்லாந்தின் காஞ்சனாபுரி என்ற இடத்தில் நினைவுத்தூண்கள் அமைக்கப்பட்டன. உயிர்ப்பலியானத் தமிழர்களுக்கு மட்டும் எந்த அடையாளமும் அங்கே அமையவில்லை.
சயாம் ரயில் பாதை அமைக்கும் பணியில் தமிழர்களின் உயிரிழப்பு என்பது வரலாற்றின் கொடுந்துயரம். ஆறாத காயம். உயிர் ஈந்த தமிழர்களுக்கு ஒரு நடுகல் அமைக்க வேண்டும் எனத் தாய்லாந்து தமிழ் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் முயற்சி, தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் தனது முதல் தேர்தல் அறிக்கையிலேயே (1957) “பர்மா, இலங்கை உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தியிருந்தது. அண்ணா உருவாக்கிய மரபின் வழி வந்த இன்றைய கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மாநில அரசின் சார்பில், தாய்லாந்தில் நடுகல் அமைவதற்கு பத்து இலட்ச ரூபாய் நிதியளித்திருந்தார். தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் தங்கள் மரபுப்படி அவர்கள் வழிபடும் சிவன் உருவத்தையும் தமிழ்நாட்டின் பெருமைமிகு கட்டடக் கலைகளில் ஒன்றான தஞ்சை பெரிய கோவிலையும் நடுகல்லில் பொறித்தனர்.
ரயில் பாதை அமைக்கும் தொழிலாளர்களாகச் சென்று உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, மே 1- தொழிலாளர் தினத்தன்று காஞ்சனாபுரியில் நடுகல் திறந்து வைக்கப்பட்டது. தாய்லாந்து நாட்டு அதிகாரிகள், தமிழ் அமைப்பினர் ஆகியோருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக்கழகத் துறை அமைச்சர் மாண்புமிகு சிவசங்கர் சா.சி. , மாநிலங்களவை உறுப்பினர்-தி.மு.க. அயலக அணிச் செயலாளர் திரு.எம்.எம்.அப்துல்லா M.m. Abdulla எம்.பி, வெளிநாடு வாழ் தமிழர் வாரியத்தின் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.எஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
சயாம் மரண ரயில் பாதை அமைக்கும் பணியில் தங்கள் முன்னோர்களை இழந்த தமிழர்களின் குடும்பத்தினரும் இதில் பங்கேற்று தங்கள் நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்ததுடன், நடுகல் அமைவதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
வரலாற்றில் ஏற்பட்ட கொடூரக் காயத்தின் தழும்பாக நிற்கிறது தாய்லாந்து காஞ்சனாபுரியில் அமைக்கப்பட்டுள்ள நடுகல்.
Previous Post Next Post

نموذج الاتصال