திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு! - ஆதனூர் சோழன்



திமுக உதயமான சமயத்தில், தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கலைஞர் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. மற்ற தலைவர்களை விட கலைஞர் மிகவும் இளைஞராக இருந்தார். 1946 ஆம் ஆண்டுதான் பெரியாரை கலைஞர் முதன்முதலில் சந்தித்தார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அப்போது அவருடைய வயது 22 தான்.

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டுதான், அதாவது, 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி திருக்குவளை என்ற சிறிய ஊரில்தான் கலைஞர் பிறந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். பேச்சாற்றல் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்வதில் சொந்தமாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

1937 ஆம் ஆண்டு ராஜாஜி சென்னை மாகாண முதல்வராக இருந்த சமயத்தில் இந்தியை கட்டாயப் பாடமாக கொண்டு வந்தார். அதை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் சார்பில் தந்தை பெரியார் போராட்டம் அறிவித்தார். பெரியார், பன்னீர் செல்வம், அண்ணா, கி.ஆ.பெ.விசுவநாதம் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்தக் காலகட்டத்தில் பள்ளி மாணவராக இருந்த கலைஞர் சக நண்பர்களுடன் தமிழ்க் கொடி வடிவமைத்து இந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஊர்வலம் நடத்துவார்.

அவருடைய தமிழ் ஆர்வம் காரணமாக, பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினார். மாணவநேசன் என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தி எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.

தான் மட்டுமின்றி தனது நண்பர்களையும் ஊக்குவித்தார். தனது நண்பர்களை இணைத்து தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

அந்த மன்றத்தின் ஆண்டுவிழாவை 1942 ஆம் ஆண்டு நடத்தி னார். அந்த விழாவுக்கு அன்றைக்கு சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களான பேராசிரியர் க.அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து வந்து பேசச் செய்தார். அந்த விழாவுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துக் கவிதை அனுப்பி யிருந்தார். இது நடந்தபோது கலைஞருக்கு 18 வயதுதான்.

அதே ஆண்டு அறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு மூன்றாவது இதழில் கலைஞர் எழுதிய இளமைப்பலி என்ற எழுத்தோவியம் வெளியாகியது. பின்னர் திருவாரூரில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வந்த அண்ணா ‘இளமைப்பலி’ கட்டுரையை எழுதிய இளைஞரைக் காண விரும்பினார். பள்ளி மாணவனாக இருந்த கலைஞரைக் கண்டதும் வியந்தார். படிப்பில் கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறி வந்தார்.

மாணவப் பருவத்திலேயே பெரிய தலைவர்களின் அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் முரசொலி பத்திரிகையை மாத இதழாக தொடங்கினார். அந்த இதழில் சேரன் என்ற பெயரில் உணர்ச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்.

1944 ஆம் ஆண்டு திருவாரூர் நகர சுயமரியாதைச் சங்க ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள தந்தை பெரியார் வந்தார். அந்த விழாவில்தான் கலைஞரின் முரசொலி இதழைக் கண்டு பாராட்டினார். அப்போதிருந்து தந்தை பெரியாருடன் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார். 

அந்த ஆண்டுதான் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக பெயர் மாற்றப்பட்டது. கலைஞருக்கு பத்மாவதி அம்மையாருடன் சுயமரியாதை திருமணம் நடந்ததும் அந்த ஆண்டுதான்.

திராவிடர் கழக கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பேச்சாளராக எழுச்சிமிகு பேச்சாளராக வளர்ந்து வந்த நேரம். 1946 ஆம் ஆண்டு புதுவையில் திராவிடர் கழக மாநாட்டுக்குச் சென்று திரும்பியபோது, கலைஞர் காங்கிரஸார் கடுமையாக தாக்கினர். தாக்குதலில் கலைஞர் இறந்துவிட்டதாக கருதி சாக்கடையில் எறிந்துவிட்டுச் சென்றனர். வயதான பெண்மணியும் இளைஞர் ஒருவரும் கலைஞரை காப்பாற்றினர்.

அங்கிருந்து இஸ்லாமியரைப் போல வேடம் அணிந்து பெரியாரிடம் வந்தார். அன்றே கலைஞரை தன்னுடன் அழைத்து வந்த தந்தை பெரியார் குடியரசு வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.

அங்கு பணியில் இருக்கும் சமயத்தில்தான் திராவிடர் கழக கொடி வடிவமைக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கருப்பு வண்ணத்தின் நடுவே தனது விரலில் குத்தி எடுக்கப்பட்ட ரத்தத் துளியை பொட்டாக வைத்து கொடி உருவாக துணையாக இருந்தார்.

அதே ஆண்டில், கோயம்புத்தூரில் இயங்கிய ஜூபிடர் பிக்சர்ஸில் வேலை கிடைத்து, பெரியாரிடம் விடைபெற்ற கலைஞர் ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்றார். ராஜகுமாரி திரைப்படத்துக்கு வசனம் எழுதி திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். 

ராஜகுமாரி வெளிவந்த 1947 ஆம் ஆண்டிலேயே முரசொலி பத்திரிகையை வார இதழாக வெளிக் கொண்டுவந்தார். அந்த ஆண்டு இந்திய விடுதலையை துக்கதினமாக அறிவித்த பெரியாரின் அறிக்கை எதிர்த்து அண்ணா வெளியிட்ட அறிக்கையால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இருவருக்கும் இடையே சமரசம் செய்யும் வகையில் நடுநிலையாளராக கலைஞர் தனது முரசொலி பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார்.

பெரியார் மணியம்மை திருமணம் கட்சிக்குள் பூசலை ஏற்படுத்திய நிலையில் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. 

அந்த புதிய இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 110 பேரில் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், மு.கருணாநிதி, என்.வி.நடராசன், ஈ.வெ.கி.சம்பத், டி.எம்.பார்த்தசாரதி என்று பெயர் வரிசை இருந்தது.

பிரச்சாரக்குழுவில் கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி.சம்பத், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, டி.கே.சீனிவாசன், என்.வி.நடராசன், காஞ்சி கல்யாணசுந்தரம் என்று பெயர் வரிசை இருந்தது.

பெரியாருடன் அறிமுகம் ஏற்பட்ட மிகக்குறுகிய காலத்தில் கலைஞருக்கு கட்சியில் குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

கலைஞர் மாணவராக இருந்த சமயத்தில் தலைவர்களாக இருந்தவர்களுடன் மிகக்குறுகிய காலத்தில் சமமமாக பணியாற்றும் வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்தது. இதற்கு காரணம் அவருடைய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும்தான்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த இயக்கத்தை தமிழகம் முழுவதும் வளர்ப்பதற்கும், கிளைகள் அமைப்பதற்கும் திமுகவினர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். அன்றைய காங்கிரஸ் அரசு திமுக வளர்வதை தடுக்க பேச்சுரிமையை பறித்தது. எழுத்துரிமையை பறித்தது. அரசுக்கு எதிராக பேசினால் கைது. எழுதினால் கைது என்ற நிலை உருவாக்கப்பட்டது.

அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய புத்தகங்களுக்குத் தடை. பிரச்சார நாடகங்களுக்குத் தடை. பொதுக்கூட்டங்களுக்குத் தடை என்று காங்கிரஸ் அரசு அடக்குமுறை ஆயுதத்தை கையில் எடுத்தது.

பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அந்த பகுதியில் உடனே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். தடையை மீறும் திமுகவினர் கைதாவது வாடிக்கையாகிவிட்டது.

தடை செய்யப்படும் புத்தகத்தை பொது இடத்தில் வாசிப்பது என்று திமுக முடிவெடுக்கும். தடை செய்யப்பட்ட நாடகத்தை தடையை மீறி நடத்துவது என்றும், நாடகத்தின் தலைப்பை மாற்றிவிட்டு அதே நாடகத்தை நடத்துவது என்றும் திமுகவினர் தந்திரமாக அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

திமுகவுக்கு எதிராக அடக்குமுறையை பிரயோகித்தால் இளைஞர்களும் மாணவர்களும் அந்தக் கட்சியில் சேர அஞ்சுவார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக திமுகவுக்கு மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவு ஆதரவு அளித்தனர். தமிழகம் முழுவதும் கிளைகள் உருவாகின.

அண்ணாவால் ஆறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட ஆரியமாயை என்ற நூலுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கிற்காக அண்ணா திருச்சி நீதிமன்றத்துக்கு அலைக்கழிக்கப் பட்டார். முடிவாக 700 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

அண்ணா அபராதம் செலுத்த மறுத்து சிறைத்தண்டனையை ஏற்றார். அண்ணா சிறையில் அடைக்கப்பட்டவுடன் தமிழகம் கொந்தளித்தது. கண்டன பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு வெளியேறி அண்ணாவை விடுதலை செய்ய வலியுறுத்தினர். 

அண்ணாவுக்காக இவ்வளவு பெரிய போராட்டத்தை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. பத்து நாட்களில் அண்ணா விடுதலை செய்யப்பட்டார். லட்சம் பேர் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் அண்ணா கலந்துகொண்டு பேசினார். இனி கழகத்தினர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டால் தடையை மீறி பேச்சுரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று திமுக செயற்குழு முடிவெடுத்தது. இப்படி தடையுத்தரவை மீறுவதற்கு தலைமைக் கழகத்தை எதிர்பார்க்க தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

திமுகவின் பாய்ச்சல் வேகம் அரசாங்கத்தை திணறச்செய்த நிலையில், 1950 ஜனவரி 26 ஆம் தேதி இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.

Previous Post Next Post

نموذج الاتصال