எதிர்க்கட்சியாக திமுக தொடர்ச்சியாக இருந்த நேரம் அது. முத்தமிழறிஞர் கலைஞர் இயக்கத்தைக் கட்டுக்போப்பாக வைத்திருந்தார். ஆளுங்கட்சியை இயக்கக் கூடிய கட்சியாக திமுக வலிமையுடன் இருந்தது. அதற்கு காரணம் அதன் உறுதிமிக்கத் தொண்டர்கள்.
அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த திமுக அலுவலகம் ஆட்சியாளர்களால் ஒரே நாளில் அப்புறப்படுத்தப்பட்டது. பொருட்கள் வெளியே வீசப்பட்டன. திமுகவுக்கு என தனியாக ஒரு கட்டடம் கட்டியே தீருவது என உறுதி எடுத்தார் கலைஞர். தன் தொண்டர்களைத் தான் அவர் தேடி வந்தார். மாவட்டம் தோறும் நிதி திரட்டினார். பிரம்மாண்டமாக எழுந்து நின்றது அண்ணா அறிவாலயம்.
1987 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 16ஆம் நாள் அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது. "இதில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் கழகத் தொண்டர்களின் உழைப்பு" என்று குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு நன்றி தெரிவித்தார் கலைஞர். ஆயிரம், லட்சம் என நிதியளித்த நிர்வாகிகள் உண்டு. ஐந்து, பத்து என கசங்கிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த தொண்டர்களும் உண்டு. கலைஞர் கேட்பதை தன்னால் இயன்ற அளவு தர வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் உணர்வு. அதனைத் தந்தார்கள்.
இந்தியாவின் தேசிய கட்சித் தலைவர்கள் கூட, "எங்களுக்கு இப்படி ஒரு தலைமை அலுவலகம் இல்லை" என்று சொல்லக்கூடிய வகையில் அண்ணா அறிவாலயத்தை கட்டமைத்து, அதில் கழகத்தின் தலைமை அலுவலகம், திருமண அரங்கம், பேராசிரியர் ஆய்வு நூலகம், வெற்றிச்செல்வி அன்பழகன் கண் மருத்துவமனை, கலைஞர் கருவூலம் என தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் பயன் தரும் கட்டமைப்புகளை உருவாக்கியவர் கலைஞர். திமுகவின் பலமே தலைமையின் எண்ணத்தை நிறைவேற்றக்கூடிய கொள்கை மாறாத இத்தகைய தொண்டர்கள் தான்.
திருவாரூரில் சுப்பிரமணி என்ற தி.மு.க. தொண்டர் இருந்தார். ‘தகரம்’ மணி என்று சொல்வார்கள். தகரத்தில் ட்ரம், குவளை, காடா விளக்கு போன்றவற்றை செய்து தரும் சிறு பட்டறை ஒன்றை திருவாரூர்-நாகை சாலையில் வைத்திருந்தார். உலை நெருப்பில்தான் அவருக்கு வேலை. நெருப்பை ஊதி ஊதி, செய்ய வேண்டிய கலனுக்கேற்ப, தகரத்தை வளைத்து, நெ ளித்து, தட்டி, ஒட்டி இருட்டும் வரை வேலை செய்வார். வருமானம் குறைவு.
துரு ஏறிய பழைய சைக்கிள்தான் அவரது வாகனம். அதை மிதித்துக் கொண்டு, எங்கள் வீட்டு வழியாக்ததான் தனது தொழிலகத்திற்குச் செல்வார். சைக்கிளின் முன்பக்க mudguardல் மெலிதான ஒரு கம்பி நீண்டிருக்கும். அதில் சின்னதாக தி.மு.க. கொடி பறக்கும். ஓட்டை சைக்கிளின் ஆட்டத்திற்கும்-காற்றின் வேகத்திற்கும் ஏற்ப இருவண்ணக் கொடி படபடக்கும். கொடித்துணி சாயம் மங்கிவிட்டால், உடனே புதுக் கொடி கட்டி விடுவார். சைக்கிள் மட்டும் அப்படியேதான் இருக்கும்.
‘தகரம்’ மணி தன் வேலைக்கு இடையில், பேப்பர் படிப்பார். ரேடியோ நியூஸ் கேட்பார். டீக்கடையிலோ வேறு இடங்களிலோ தி.மு.க.வைப் பற்றி யாராவது குறை சொல்லிப் பேசிவிட்டால் அவருக்கு கோபம் வந்துவிடும். “உங்களுக்கு அது என்ன விவரம்னு தெரியுமா?” எனக் கேட்டு, தனக்குத் தெரிந்த விவரங்களை வைத்து வாதம் செய்வார். கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டார். ஒரு முறை, எம்.ஜி.ஆரைப் பற்றி நான் நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்லப்போக, என்னைப் பார்த்து அப்படி முறைத்தார். அ.தி.மு.க ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டிருந்த நேரம் அது.
தன் உடம்பில் சக்தி இருந்த வரை, சைக்கிளில் புத்தம்புது தி.மு.க கொடி படபடக்க, தகரப் பட்டறை வேலையை மணி பார்த்து வந்தார். எந்த வித எதிர்பார்ப்புமில்லாத ‘மணி‘ ‘மணி’யான தொண்டர்கள் இயக்கத்தில் உண்டு. காலப் போக்கில் ‘தகரம்’ மணியின் மகனுக்கு பேங்க் வேலை கிடைத்தது. மணியின் பணி வீணாகவில்லை.
தொண்டர்களின் மனநிலைதான் ஓர் இயக்கத்தின் வேருக்கான நீர். எல்லா இயக்கங்களுக்கும் இது பொருந்தும். திராவிட இயக்கங்களில் தொண்டர்களுக்கும் தலைமைக்குமான பந்தம், குடும்ப உறவு போல வலிமையானது. ‘அண்ணா’ என்று எல்லாரும் அழைத்ததும், ‘உடன்பிறப்பே’ என்று எல்லோரையும் சொன்னதும் கொள்கைக் குருதியுடனான புதிய உறவை ஏற்படுத்தின.
அந்த உறவுதான், கட்சித் தலைமை கண்டுகொள்ளாவிட்டால் குமுறலை வெளிப்படுத்துகிறது. கொந்தளிக்கிறது. அருகில் அழைத்து ஒரு வார்த்தை பேசிவிட்டால், கோபம்-குமுறல்-கொந்தளிப்பு எல்லாம் பனி போல கரைந்துவிடும்.
மயிலாடுதுறை நகரம் மாயவரமாக இருந்த காலத்தில் அண்ணா பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் , கட்சியின் இளைஞர் ஒருவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலியில் இன்னொரு நிர்வாகி உட்கார்ந்து விடுகிறார். இடமில்லாமல் நின்றிருந்த இளைஞர் ஏதேதோ முணுமுணுப்பது, மேடையில் உட்கார்ந்திருந்த அண்ணாவின் காதுகளிலும் விழுகிறது. பொதுக்கூட்டம் முடிந்தபிறகு, கவிஞர் கருணானந்தம் வீட்டில் இரவு சாப்பாடு. அண்ணா உட்கார்ந்திருக்கிறார்.
அப்போது வெளியிலிருந்து அந்த இளைஞரின் குரல் கேட்கிறது. “பின்னே என்னங்க, தலைவர் வந்தா மட்டும் மேடையிலே உட்கார வர்றானுங்க. மத்த நாட்களில் கட்சிப் பணிக்கோ, போரட்டத்துக்கோ, நிதி வசூலுக்கோ வர்றதில்ல. இவனுங்களுக்கு ஏன் நாற்காலி?” என்று கோபமாக சொல்கிறார். அவரை உள்ளே அழைத்து சாப்பிட வைக்கச் சொல்கிறார் அண்ணா. உள்ளே வந்தவர், “அடுத்த பந்தியில் உட்கார்ந்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போய் நின்று கொள்கிறார் அந்த இளைஞர். அவரது கோபம் குறையவில்லை.
சாப்பிட்டு முடித்த அண்ணா, காரை எடுக்கச் சொல்கிறார். அவர் நினைவுகளில் அந்த இளைஞரின் முகம். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர். முனிசிபாலிட்டியில் கிடைத்த கிளார்க் வேலையை விட்டுவிட்டு, முழு நேரக் கட்சிப்பணி செய்யும் இளைஞர். அவரது கோபம். எல்லாம் அண்ணாவின் நினைவுகளில்.
மாயவரம் ரயில்வே ஜங்ஷன் ஆர்.எம்.எஸ். அலுவலகம் அருகே ஆள்நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் கார் நிற்கிறது. உடனிருந்த கருணானந்தம், வில்லாளன் ஆகியோரிடம் அண்ணா ஒரு மணி நேரம் பேசுகிறார். தி.முக. தொடங்கி சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், ஒவ்வொரு தொண்டரும் எத்தனை மதிப்பு வாய்ந்தவர்கள் என்பதையும், அவர்களை எப்படி அரவணைத்து நடத்த வேண்டும் என்பதையும் அண்ணா சொல்கிறார். பின்னர், அந்தக் கோபக்கார இளைஞரை கைக்குள் வைத்து பத்திரமாக காப்பாத்தணும். கொள்கைப் பற்றுள்ள இளைஞரை கட்சிப் பணிக்கேற்ப ஒரு ஷேப்(shape)க்கு கொண்டு வரவேண்டும் என்று கருணானந்தத்திடம் சொல்கிறார். (ஆதாரம்: அண்ணா-சில நினைவுகள். ஆசிரியர்-கவிஞர் கருணானந்தம்)
அண்ணா குறிப்பிட்டுச் சொன்ன அந்த இளைஞர், மாயவரம் கிட்டப்பா. கல்லக்குடிப் போராட்டத்தில் கலைஞரோடு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1967, 71, 77, 80 எனத் தொடர்ந்து 4 சட்டமன்றத் தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றவர் கிட்டப்பா. அவருடைய கடைசிக் காலத்தில் வீசிய அரசியல் புயலில் அவர் சாய்ந்தார். அவரது மரணத்தால் ஏற்பட்ட இடைத்தேர்தலிலும் மயிலாடுதுறை தொகுதியில் எதிர்க்கட்சியான தி.மு.க.வின் உதயசூரியனே வென்றது. ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளையும் மீறி வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவின் தொண்டர்கள்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்தக் கிளைகளின் சார்பில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அதில் சில தொண்டர்கள் வெளிப்படையாகத் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகங்களை நோக்கியும், கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை கூட்டத்தில் பங்கேற்றவர்களை நோக்கியும் கேள்வி எழுப்பினார்கள். ஊடகங்களிலும் ஒரு சில நிகழ்வுகள் வெளியாயின. இதுதான் இந்த இயக்கத்தின் பலம்.
அமெரிக்கப் பயணத்தில் இருந்த கழகத் தலைவர் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "பொது உறுப்பினர்கள் கூட்டங்களில், தொண்டர்களின் ஆழ்மனக் கருத்துகள் அடிவயிற்றிலிருந்து வெளிப்பட்டக் குரலாக ஒலித்ததையும், கழகத்தின் தலைவர் என்ற முறையில் நான் கவனிக்கத் தவறவில்லை. தொண்டர்களின் குரலில் ஒலிக்கும் நியாய உணர்வுக்கு மதிப்பளிக்கத் தலைமை தவறுவதில்லை என்ற உறுதியை உங்களில் ஒருவனாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.
தொண்டர்களை அடையாளம் காண்கின்ற இயக்கம், வெற்றி- தோல்விகளைக் கடந்து நிலைத்து நிற்கிறது. திமுகவின் 75 ஆண்டுகால பெருமைமிக்க இந்த வரலாறு இன்னும் தொடரும்.