உள்ளதை உள்ளபடி ஆவணப்படுத்துவதும் புரிந்ததையும் புரியாதவற்றையும் அறிவு நேர்மையுடன் சோர்வின்றி விளக்கிச் சொல்வதும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து.
அந்த வகையில் ‘பெரியய்யா’ என்று பயிற்சி மாணாக்கர் அனைவராலும் அழைக்கப்பட்ட குமரேச ஸ்தபதியாரின் மாணவர் ஜெயராமனின் குறிப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்ரமணியன் ஸ்தபதி ஆகிய இருவரும் இந்த நூலை உருவாக்கி உள்ளனர். இவர்களது முயற்சிக்கு இரண்டு பெரிய சிற்பிகளான பாஸ்கரன், இராசேந்திரன் ஆகியோர் துணையாக இருந்துள்ளனர்.
பல அரிய செய்திகளையும் குறிப்புகளையும் தாங்கி வெளிவருகிறது இந்த அரிய நூல்.
இந்த நூலில், மாமல்லபுரம் சிற்ப மற்றும் கட்டிடக்கலைப் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கோயில் கட்டிடக்கலையை விவரிக்கும் பல்வேறு சமஸ்கிருத இலக்கண நூல்களில் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை தமிழில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டும் இல்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட நூல்களோடு ஒப்பிட்டு பட்டியல் மூலமாகவும் தேவையான இடங்களில் வரைபடங்கள் மூலமாகவும் விளக்கியிருப்பது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகக் கோயில் கட்டிடக்கலைப் பற்றி நுட்பமாய் தெரிந்துகொள்ள விரும்பும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயனுடையதாய் இருக்கும்.
இந்த நூலை கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் சந்திரமோகன் ஐஏஎஸ் வெளியிட்டார். அன்று அவர் அறநிலையத்துறையையும் கவனித்து வந்தார்.
இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள், திரு.அ.ச.கணேஷ் ஸ்தபதி, வை.பாலசுப்பிரமணியன் ஸ்தபதி, கலைச்செம்மல் த.பாஸ்கரன் மற்றும் மாமல்லபுரம் சிற்ப மற்றும் கட்டிடக்கலைக் கல்லூரி விரிவுரையாளர் முனைவர். கி.ராஜேந்திரன் ஆகியோர் தமது பணியினை மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.
இந்த நூல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அறநிலையத்துறை பணியிடங்களுக்கான வினாக்களுக்கும், உதவி ஸ்தபதிகள், மண்டல ஸ்தபதிகளுக்கான பணியிடங்களுக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.