வேல்கம்பு விளக்குடன் ஓடிய தபால்காரன்!

தகவல் தொடர்பு துறை இன்று அபரிதமாக வளர்ந்து விட்டது. ஒருவருக்கொருவர் தகவல்களை செய்திகளை, பரிமாறிக் கொள்ள இணையம், எஸ்.எம்.எஸ்., இ-மெயில்  வாட்ஸ்அப் என்று எத்தனையோ விஷயங்கள் இன்று வளர்ந்து விட்டது. 

அரசர்கள் தூதுவர்கள் மூலம் தூது அனுப்பி செய்திகளை பரிமாறி கொண்டதாக வரலாறு நமக்குச் சொல்கிறது. புறாக்கள் மூலம் செய்தி அனுப்பப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது. 

கவித்துவ மிகையாக இலக்கியங்கள் மேகம் விடு தூது, அன்னம் விடு தூது என்று தூது பற்றி அழகாகவும் ஏராளமாகவும் பேசியிருக்கின்றன. அனுமன் தூதும், வீரபாகு தூதும், கிருஷ்ணன் தூதும் புராணங்கள் பேசும் தூதுகள். 

தகவல் பரிமாற்றங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு மைல்கல் தான் அஞ்சல் முறை. வெள்ளை ஆட்சியாளர்களால் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் அஞ்சல்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆம் இந்திய அஞ்சல் துறைக்கு வயது 150 தாண்டி விட்ட்து. 

வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாத அந்தக் காலத்தில் தபால்களை கொண்டு செல்ல ரன்னர் என்றொரு ஊழியர் அஞ்சல் அலுவலகத்தில் இருப்பார். இவர் ஓட்டக்காரன் என்று அழைக்கப்பட்டார். 

ஒவ்வொரு ஊர்களில் இந்த ரன்னர் பற்றி ஏராளமான கதைகள் உண்டு. அவற்றில் ஒன்றிரண்டு. அவர் கையில் பெரிய வேல்கம்பு வைத்திருப்பார். அதன் கூரிய நுனியில் விஷம் தடவப்பட்டிருக்கும். மற்றொரு கையில் கடிதங்களும் பணப்பையும் இருக்கும். எப்போதும் மின்னல் போல் ஓடிக்கொண்டிருப்பார். 

அவர் செல்லும் திசையில் கையில் இருக்கும் வேல்கம்பில் கோர்க்கப்பட்டிருக்கும் மணிகளிலிருந்து மணி ஓசை கேட்கும். தெரியாமல் யாராவது எதிரில் வந்தால் வேல்கம்பால் குத்திவிடுவார். அப்புறம் மரணம் தான். 

ஏதோ சுடலைமாடன் வேட்டைக்குப் போகும் போது சொல்லப்படும் கதை போல் இருக்கிறதா? ஏறக்குறைய அப்படிதான் ஆனால் இந்த ரன்னர் என்கிற ஓட்டக்காரன் அரசாங்க ஊழியர் என்பது தான் வித்தியாசம். 

அந்தக் காலத்தில் சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. நிறைய கிராமங்களுக்கு முறையான வண்டிப்பாதை கூட இருக்காது. ஆனால் அந்த கிராமத்தினருக்கு வரும் கடிதங்களை மணியாடர் பணங்களை பட்டுவாடா செய்வது எப்படி? அதற்கு தான் இந்த ரன்னர். மணியாடர் பணம் கொண்டு செல்லும் போது இவர்கள் பாதுகாப்பிற்கு வேல் கம்பு வைத்திருப்பார்கள். 

திருடர்கள் வழிமறித்தால் அவர்களை இந்த வேல்கம்பால் ரன்னர் குத்தித் தாக்கலாம். அந்த நாளில் அரசாங்கம் ரன்னருக்கு அந்த அனுமதியை வழங்கியிருந்தது. 

பரவலாக நம்பப்பட்ட இன்னுமொரு செய்தியும் உண்டு. ரன்னர் வைத்திருக்கும் வேல்கம்பின் நுனியில் மூலிகை விஷம் தடவப்பட்டிருக்குமாம். அந்த வேல்கம்பால் குத்தப்பட்டு ஏற்படும் காயம் எளிதில் ஆறாதாம். 

ஆறாத அந்தப் புண்ணே வழிப்பறிக்காரனை எளிதில் காட்டிக் கொடுத்துவிடுமாம். இது அன்றைய நாளின் நம்பிக்கை. இன்று ரன்னரெல்லாம் ஓடி ஓடி காணாமலே போய் விட்டார்.

Previous Post Next Post

نموذج الاتصال