'மாம்பழ மங்கையும் மயக்கும் கட்சிகளும்!' - கலைஞர் கடிதம்


உடன் பிறப்பே,


அழகின் சிரிப்பாய் முகமும் - அருவியின் கீதமாய்ப் பேச்சும் 'அங்கமோ தங்கம்' எனும் விதத்தில் நிறமும் கொண்ட பாவை ஒருத்தியைப் பாட்டெழுதும் புலவர்கள் 'மாம்பழ மங்கை' என வர்ணிக்கத் தவறமாட்டார்கள்!

‘எலுமிச்சம் பழம் போல் இருக்கிறாள்' எனச் சிறப்பித்துக் கூறும்போது, அவள் நிறம் மட்டுமே நினைவில் வரும்!

‘செந்தாமரையைப் போன்றாள்' எனக் கவிச்சரம் தொடுக்கும் போது, அவளுடைய எழில்மிகு மென்மையான வண்ண முகமே எதிர் நிற்கும்!

'மயிலனையாள்' என்றாலோ, சாயல்தான் மனவிழி முன் தோன்றி மறையும்!

‘மலர்க் கொடியாள்' என்று கூறும் போழ்து, உடலின் வனப்பே உள்ளத்தில் நிழலாடும்!

இத்தனைக்கும் மேலாக, 'மாம்பழ மங்கை' என்றுகூறி விட்டாலோ - அவள் வண்ணம், வளம், சுவை அனைத்துமே நெஞ்சில் பதிந்து விடுகிறது!

மங்கை, 'மாம்பழம் போல் இருக்கிறாள்' என்று திரும்பத் திரும்பக் கவி எழுதித் தெவிட்டிப் போனவர்களுக்கு இதோ ஒரு புதிய 'பொருள்' கிடைத்திருக்கிறது!

மங்கை -மாம்பழம் போல் இல்லை; அதற்குப் பதிலாக, மாம்பழம் - மங்கை போல் இருக்கிறது!

"வெறும் மாம்பழத்தையே வண்டு துளைத்திடும் காட்சியைக் காண்கிறோம். மங்கை போல் இருக்கும் மாம்பழத்தை வண்டுகள் சும்மா விடுமா?” என்று கேள்வி கேட்பதே-கவிஞர்களுக்கு-ஒரு காவியத்திற்கான 'மூலப்பொருள்' கிடைத்தது போலத்தானே!

மகேசன் அருளால் மாயமாய் மாம்பழத்தை வரவழைத்துக் கொடுத்து-மணாளனைத் திகைக்க வைத்த காரைக்கால் அம்மையாரைத்தான், "மாம்பழ மங்கை" என்பர்!

"இதோ... மங்கையே மாம்பழமாக மாறி மரக்கிளையில் ஊஞ்சலாடுகிறாள் பாருங்கள்" என்று-கதாகாலட்சேப் பாகவதர்கள், நீட்டி முழக்கிப் பாடத் தொடங்கினாலும் வியப்பில்லை!

என்ன-மாம்பழம்-மங்கை என்றெல்லாம் ஏதேதோ கூறுகிறாய்! என்ன சொல்ல இந்தப் பீடிகை எல்லாம்?" என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா உனக்கு?

உடன்பிறப்பே! ஏடுகளில் பரபரப்புடன் வந்துள்ள செய்திகளை நீ படிக்கவில்லையா?

“இராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் உள்ள ஒரு மாந்தோப்பில் ஒரு மாம்பழம், ஒரு பெண்ணைப் போலவே தோற்றமளிக்கிறது. ஏறக்குறைய ஏழு அங்குல நீளம்- நாலு அங்குல அகலமுள்ளதாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது; இரு கைகளைத் தவிர, மற்ற எல்லா உருவத் தோற்றமும் அப்படியே காட்சி அளிக்கிறது. 

அந்த அதிசய மங்கையைக் காண ஏராளமான மக்கள் வருகிறார்கள். மாந்தோப்பு எந்த நேரமும் விழாக்கோலம் கொண்டிருக்கிறது. இந்த மாங்கனி மங்கைக்குப் பெண்கள் தேங்காய் -பழம், சூடம் சாம்பிராணி தூபதீபம் காட்டி வழிபடுகிறார்கள். இதற்கு ஒரு கோயில் கட்டி வழிபட மாமரத்தின் அடியில் ஒரு உண்டியலும் வைக்கப்பட்டு அதில் பணமும் குவிகிறது."

இப்படிச் செய்திகள் ஏடுகளில்! ஆண்டுக்கு ஒருமுறை இதுபோன்ற அதிசயங்கள் பரவுவதும், அதனை வேடிக்கை பார்க்க மக்கள் திரளுவதும் நம் நாட்டு வாடிக்கை!

“பரங்கிப் பூ ஒன்று பத்துத் தலை நாகம் போல் படமெடுத் தாடுகிறது; பக்தர்கள் கூட்டம் தாங்கவில்லை!" இப்படிச் சில நாட்கள் செய்திவரும்; பின்னர் மறையும்!

"ஊமைகளைப் பேச வைக்கும் சாமியார் ஒருவர் ஓட்டலில் தங்கியிருக்கிறார்" என்று இரண்டு நாட்கள். இதழ்களில் விளம்பரங்கள் மின்னும், பின்னர் 'அவர் ஓடிவிட்டார்' என்று தகவல் கிடைக்கும்!

சித்துக்கள் புரிகிறார். செத்தவரைப் பிழைக்க வைக்கிறார். செம்பொன்னா - மணியா - மரகதமா - மழலைச் செல்வமா எது கேட்டாலும் தருகிறார். ஆரணங்குகள் அவரைத் தனியேதான் சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டாலும் 'அப்படியே ஆகட்டும்' என்று அவர்தம் அருள் பெறப் பத்தினியை அனுப்பி வைக்கும் பக்திமிகு ஆடவர்களும் இன்னும் இருக்கிறார்கள்!

பத்து நாட்களில் சித்து விளையாடிய சாமியார், கள்ளநோட்டு வழக்கில் கைதாகிறார்; அல்லது கொலை வழக்கில் குற்றவாளியாகிறார்; அல்லது 'தப்பிக்க முடியாது' என அறிந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இத்தனை அனுபவங்களுக்குப் பிறகும் ஏமாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ஏமாற்றும் எத்தர்கள் 'புத்தர்'களைப்போல் வேடமிட்டுப் பொல்லாத் தொழிலை நடத்திக் களிக்கிறார்கள்!

என்ன செய்வது! காஞ்சிபுரம் யானைக்கு என்ன நாமம் போடுவது, வடகலையா? தென்கலையா? என்ற போராட்டம் இன்னும் ஓயவில்லையே! அர்த்தமுள்ள இந்து மதத்தின் மகிமையல்லவா இது!

உண்மை, ஆழ்ந்த பற்று, இலட்சியப் பிடிப்பு இவைகளுக்கு மேலாகச் சில நேரங்களில் அதிசயக் கவர்ச்சிகள் மக்களை ஏமாளிகளாக்கி விடுகின்றன என்பதற்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டுகள் அன்றோ!

மாம்பழம் மங்கை வடிவு கொண்டதாக விளங்குகிறது; வியப்புக்குரிய ஒன்றுதான்! வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.

அதற்காக அதனையே ‘அப்சரஸ்' என வர்ணித்து, ஆகாய லோகத்திலிருந்து நூலேணி வழியாக வந்திறங்கிப் பாலாற்றங்கரை மாந்தோப்பில் ஊஞ்சலாடும் ஊர்வசி, ரம்பை, மேனகை என நம்பி அதற்குக் கோயில் கட்டத் திட்டமிடுவானேன்? அதற்கென உண்டியலில் பணம் போடுவானேன்?

அதுவோ மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மாங்கனி! வடிவம்-மாங்கனி போன்றது! கவர்ச்சியாகத்தான் இருக்கும்! சில புதிய கட்சிகளைப்போல!

அந்த மாம்பழ மங்கைக்குக் கைகள் இல்லையாம் - சில கவர்ச்சிக் கட்சிகளுக்குக் கொள்கைகள் இல்லாததைப்போல!

மாம்பழ மங்கை மரத்தில் தொங்கும் வரையில் கூட்டம் இருக்கத்தான் செய்யும்; கீழே விழுந்தபிறகும் சில நாட்கள் வேடிக்கை பார்க்கலாம்; என்னதான் 'பதம்' செய்து பாதுகாத்தாலும் நாளடைவில் தோல் சுருங்கும்; மேனி வதங்கும்; வற்றலாகக் காட்சி அளிக்கும்.

அதற்குள் வடஆற்காடு மாவட்டத்திலேயே வேறு ஒரு அதிசயம் கிளம்பும். 'பூசணிப் பூவில் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் தெரிகிறான்' என்று ஒரு வதந்தி பரவும்! பிறகு அந்தப் பூசணிக் கொல்லை விழாக் கோலம் காணும்!

என்ன செய்வது-இப்படியே பழகி விட்டார்கள் நமது மக்களில் ஒரு பகுதியினர்!

"பகுத்தறிவுவாதிகளின் பணி முழுமை பெறவில்லை” என்பதற்கு அடையாளந்தான் இவைகள் எல்லாம்!

உடன்பிறப்பே! ஓயாத உன் கட்சிப் பணியில் ஒரு பகுதிதான் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பதையும் மறந்து விடாதே!

அன்புள்ள,

மு.க. 
11-08-1974
Previous Post Next Post

نموذج الاتصال