1965 இந்திய பாகிஸ்தான் போருக்கு காரணம் பாகிஸ்தான் மட்டுமே.
இந்திய சீனப் போர் நடந்து முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில், இந்தியா பலவீனமாகத்தான் இருக்கும் என்றும்,
ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் கிளர்ச்சி செய்து இந்தியாவை விட்டு பாகிஸ்தானுடன் சேருவதற்குத் துடித்துக்கொண்டிருப்பதாகவும்,
இரண்டு தவறான புரிதல்களின் அடிப்படையில் 'ஆபரேஷன் ஜிப்ரால்டர்' என்ற பெயரில் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி கிளர்ச்சியைத் தூண்ட முயன்றது பாகிஸ்தான்.
ஆனால், அவர்கள் நினைத்தபடி மக்கள் கிளர்ச்சி செய்ய முன்வரவில்லை. இந்தியா விழித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு உள்ளே புகுந்து தாக்கத் தொடங்கியது. முதலில் இந்தியாவுக்கு எளிதாக சில வெற்றிகள் கிடைத்தாலும், பாகிஸ்தான் 'ஆபரேஷன் கிராண்ட் ஸ்லாம்' என்ற பெயரில் இரண்டாவதாக ஒரு பெரிய தாக்குதலை நடத்தி இந்தியாவைத் திணறச் செய்தது.
இந்நிலையில் இந்தியா சாதுர்யமாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர், சியால்கோட் போன்ற பகுதிகளை நோக்கி சண்டையைக் கொண்டு சென்றது. இதனால், பாகிஸ்தான் முழுபலத்தையும் காஷ்மீரில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, காஷ்மீரில் இந்தியப் படையினருக்கு ஒரு ஆசுவாசம் கிடைத்தது.
அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரண்டு நாடுகளின் முனைப்பால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் போர் நிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுத்தது.
இந்நிலையில்தான் முக்கியமான ஒன்று நடந்தது.
போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதில் கொஞ்சம் தாமதம் செய்தால், போரில் இந்தியா வென்றுவிட முடியுமா என்று ராணுவத் தளபதி ஜே.என். சௌதரியை கேட்டார் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. அவர் சாதகமாக பதில் சொல்லவில்லை. இந்தியாவிடம் களமுனையில் இருந்த வெடிபொருள்கள், கணைகளில் பெருமளவும் தீர்ந்துவிட்டன, இந்தியா பெருமளவில் கவச வண்டிகளை இழந்துவிட்டது என்று அவர் கூறிவிட்டார்.
(பின்னாளில் தளபதி சௌதரியின் கணக்கு தவறு என்று கண்டறியப்பட்டது. உண்மையில் பாகிஸ்தான்தான் தனது கணைகளில் 80 சதவீதத்தை செலவிட்ட நிலையில் இருந்தது. இந்தியா வெறும் 14 சதவீத கணைகளை மட்டுமே பயன்படுத்தியிருந்தது என்று இந்திய அரசு பாதுகாப்புத் துறை 1992ல் எழுதிய 1965 சண்டை குறித்த வரலாற்றில் இடம் பெற்றிருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.)
இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மூலமாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டுவந்த புகைப்படம்
சோவியத் ஒன்றியத்தின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியா-பாகிஸ்தான் அமைதி பிரகடனம் கையெழுத்தானது. இந்தியப் பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் பிரதமர் அயூப்கானும் கையெழுத்திட்டனர்.
போருக்கு முன்பு இருந்த இடங்களுக்கே இரு நாடுகளும் திரும்பிப் போகவேண்டும் என்பது தாஷ்கண்ட் பேச்சுவார்த்தையின் நிபந்தனை. எனவே, இந்தியா பிடித்திருந்த இடங்களை திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று.
ஆனால், தாஷ்கண்டில் இருந்து திரும்புவதற்கு முன்பாக சாஸ்திரி அங்கேயே மாரடைப்பால் காலமானார்.
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கிடைக்கவில்லை. இந்தியாவுக்கு கிடைத்த ஆதாயங்களும் கைவிட்டுப் போயின. காஷ்மீர் பிரச்சனையும் தீரவில்லை.
இப்போது நிலைமை பெரிய அளவில் மாறியிருக்கிறது. பாகிஸ்தான் மட்டுமே மதவாத நாடாக இருந்த நிலைமை மாறி அந்த திசையில் இந்தியாவும் பெருமளவு 'முன்னேறி' இருக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே அணு ஆயுத வல்லமை பொருந்திய நாடுகள்.
பிற ஆயுதங்களைப் போல, போட்ட இடத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது அணு குண்டு. பக்கத்து நாடுகளையும்கூட பாதிக்கும்.
எனவே, இந்திய துணைக் கண்டத்தைப் பொருத்த வரை இரண்டு நாடுகளும் அணு ஆயுதத்தை எதிரி மீது பயன்படுத்துவது என்பது தன் தலைமீதே போட்டுக்கொள்வது போலத்தான்.
இந்தியாவுக்கு பொருளாதார பலம் இருக்கிறது. பாகிஸ்தான் சிதைந்திருக்கிறது. இந்த வேறுபாடெல்லாம் போர் தொடங்கிவிட்டால் என்ன ஆகும் என்று தெரியாது.
வறிய நாடு என்பதாலோ, சிறிய நாடு என்பதாலோ யாரையும் லேசாக கருதக்கூடாது என்பதற்கு வியட்நாம், ஆப்கானிஸ்தானில் கைவைத்த அமெரிக்காவின் நிலைமையும், குவைத்தில் கைவைத்த சதாம் உசேன் நிலைமையும், இலங்கையில் விடுதலைப் புலிகளிடம் வாலாட்டி சுட்டு்க்கொண்ட இந்திய 'அமைதி'ப் படையின் நிலைமையும் எடுத்துக்காட்டுகள். வரலாறு நடத்தும் பாடங்கள்.
முதல் உலகப் போரின்போது தேவையில்லாமல் நாட்டையும், ராணுவ வீரர்களையும் ஓயாத போரில் சிக்க வைத்த வெறுப்பில்தான் 1917 ரஷ்யப் புரட்சியே வெடித்தது.
"ரொட்டியும், அமைதியும்" கோரியே முதலில் ஜார் மன்னரின் முடியாட்சி தூக்கி எறியப்பட்டது. பிறகு, இடைக்கால அரசுக்குத் தலைமை வகித்த கெரன்ஸ்கியும் தூக்கி எறியப்பட்டார். ஒரே மூச்சில் மன்னராட்சியில் இருந்து - நாடாளுமன்றத்துக்குப் போய் - அங்கிருந்து சோஷலிசத்துக்குத் தாவியது ரஷ்யா.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பிறகும் பிரிட்டிஷாரால் சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
இரண்டாம் உலகப் போரில் உலகை கிடுகிடுக்க வைத்த ஹிட்லருக்கு பாதாள அறையும்," பாசிஸ்ட் ஜடாமுனி" முசோலினிக்கு விளக்குக் கம்பமும் காத்துக்கொண்டிருந்தன.
போர் என்பது எப்போதும் புலிவாலைப் பிடிக்கும் கதைதான்.