தேர்தல் முடிவுகளத் தீர்மானிப்பது எது?
ஆட்சியில் நடந்த தவறுகளா? கூட்டணி பலமா?
வலுவான கூட்டணியே பொதுவாக தேர்தலில் நடபெறும் தில்லுமுல்லுகளை
தடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் என்பது எனது முடிவு.
நெருக்கடி நிலை 1975 1976 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை
இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தினார்.
1971 மக்களவைத் தேர்தலில் அவருடைய வெற்றி செல்லாது என்றும்,
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு
இந்திராவை பதற்றப்பட வைத்துவிட்டது.
இத்தனைக்கும், பசுமைப் புரட்சி, பொருளாதார சீர்திருத்தம்,
வங்கிகள் தேசியமயம் என்று ஏழைகளுக்கான திட்டங்களை அவர் செம்மையாக செயல்படுத்தினார்.
அந்தத் தீர்ப்பை ஏற்று, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு,
உடனடியாக அரசைக் கலைத்து தேர்தலை சந்திக்க அவர் முடிவு செய்திருக்கலாம்…
தனக்கு எதிரான அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
அப்பீல் செய்திருக்கலாம்…
அப்படிச் செய்திருந்தால், அவருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த
எதிர்க்கட்சிகள் பதற்றமாகி இருக்கும். வலுவான கூட்டணி அமைத்திருக்க முடியாது.
தேர்தலில் போட்டியிட இந்திராவுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்,
காங்கிரஸ் வலுவான நிலையில் தேர்தலை சந்தித்து இருக்கும். அவர் தனது மகன்களில் ஒருவரையோ,
தனக்கு நம்பிக்கையான டம்மி பீஸ் ஒருவரையோ பிரதமராக தேர்வு செய்திருக்க முடியும்.
ஆனால், அவசரப்பட்டு, அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டார்.
தலைவர்களை சிறையில் அடைத்து அவர்களுடைய மனதில் வன்மத்தை வலுவாக்கிவிட்டார்.
அவர்கள் சிறையில் இருந்தபடியே தங்களுக்குள் அணியை அமைக்க
அவகாசம் அளித்துவிட்டார். கூட்டணி என்பது எடுபடாது என்பதையும், எதிர்க்கட்சிகள் ஒரே
பெயரில் இணைந்து, ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவெடுத்து விட்டனர்.
இந்திரா இதை எதிர்பார்க்கவில்லை. வெளிநாடுகள், ஐ.நா. நிர்ப்பந்தம்
காரணமாக 1977ல் எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்ததுடன் தேர்தலையும் அவசரமாக அறிவித்தார்.
தேர்தலைத் தள்ளிப் போட்டிருந்தால், எதிர்க்கட்சிகளுக்குள்
தொகுதி உடன்பாடு குறித்து சர்ச்சைகள் அதிருப்திகள் உருவாகி இருக்கும்.
மாறாக, தேர்தல் அருகில் இருந்ததால், எதிர்க்கட்சித் தலைவர்கள்
எளிதாக தொகுதி உடன்பாடு செய்துகொண்டார்கள்.
அப்படி இருந்தும், ஜனதாக் கட்சி 298 இடங்களிலும், இந்திரா
காங்கிரஸ் 154 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
அதாவது, ஜனதாக் கட்சி 41.32 சதவீதமும், இந்திரா காங்கிரஸ்
34.52 சதவீதமும்தான் வாக்குகளைப் பெற்றிருந்தன. அதாவது வெறும் 7 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்
இந்திரா காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இத்தனைக்கும் 1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ்
43 சதவீத வாக்குகளுடன் 352 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.
காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் 10.43 சதவீத வாக்குகளுடன்
16 இடங்களையும், வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனசங் 7,35 சதவீத வாக்குகளுடன் 22 இடங்களையும்
பிடித்திருந்தன. சிபிஎம் 5.12 சதவீத வாக்குகளுடன் 25 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய
க்டசியாக இருந்தது.
ஆனால், காமராஜர் இறந்துவிட்ட நிலையில் பழைய காங்கிரஸும் பாரதிய
ஜனசங்கமும், லோக்தளம் உள்ளிட்ட பல உதிரிக் கட்சிகளும் ஜனதா என்ற பெயரில் இணைந்து போட்டியிட்டு,
41 சதவீத வாக்குகளுடன் ஆட்சியைக் கைப்பற்ற இந்திராவின் பிடிவாதம் காரணமாகிவிட்டது.
அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்யாமல் ஆட்சியைக் கலைத்து
தேர்தலை நடத்தியிருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வளவு ஒற்றுமையாக இணைந்திருக்க மாட்டாது.
உச்சநீதிமன்ற அப்பீலில் சாதகமான தீர்ப்பை இந்திரா பெற்றிருக்க முடியும்.
பல்வேறு சித்தாந்தங்களை உள்ளடக்கிய ஜனதாக் கட்சி இரண்டு ஆண்டுகள்கூட
ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. பிரதமர் பதவி ஆசையும், யார் பெரியவன் என்ற போட்டியும்
அந்தக் கட்சியை சிதைத்துவிட்டன.
1980 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ், 353 இடங்களுடன்,
42.69 சதவீதம் வாக்குகளைப் பெற்று ஆட்சியை அமைத்தது.
வாக்கு வித்தியாசம் பெரிதாக வேறுபடவில்லை. எதிர்க்கட்சிகளின்
ஒற்றுமையின்மைதான் தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறது.
தமிழ்நாட்டில் இப்போது அமைந்திருக்கிற கூட்டணி கிட்டத்தட்ட
இடதுசாரி சித்தாந்தத்துக்கு நெருக்கமான கூட்டணி. இந்த அணியைச் சிதைக்க பல கட்ட சதிகள்
அரங்கேற்றப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கும் சோதனை
முயற்சியில் அண்ணாதான் முதலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இன்னும் சொல்லப்போனால், 1962லேயே கம்யூனிஸ்ட்டுகள் அண்ணா வேண்டுகோளை ஏற்று கூட்டணி அமைக்க ஒப்புக் கொண்டிருந்தால், அந்தத் தேர்தலிலேயே காமராஜ் அரசு தூக்கி வீசப்பட்டிருக்கும். அந்தத் தேர்தல் வாக்குச் சதவீதத்தை பார்த்தால் இந்த உண்மை புரியும்.