காகித ஆயுதம் முதல் இதழ் - ஆதனூர் சோழன்


பெண்ணை, ஆணுக்கு நிகர் என்பதே அநீதி!

தோழர் கே.பாலபாரதியுடன் ஓர் நேர்காணல்

மறைந்த கவிஞர் நந்தலாலா ஒருமுறை என்னிடம் பேசும்போது தோழர் பாலபாரதியைப் பற்றி ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.

ஒரு விசேஷ வீட்டுப் பந்தியில் தோழர் பாலபாரதிக்கு அருகில் அமர்ந்து நந்தலாலாவும் உணவருந்துகிறார். அசைவ உணவு பறிமாறுகிறார்கள். பாலபாரதி விரும்பிச் சாப்பிடுகிறார். நந்தலாலா அவரிடம் மெதுவாக பேசுகிறார்...

“தோழர் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு சில வகை உணவுகளை குறைச்சுக்கனும்Ó என்கிறார். அதற்கு பாலபாரதி...

“அட நீங்க வேற தோழர். நமக்கெல்லாம் இப்படிச் சாப்பாடு எப்பவோ ஒருமுறைதானே தோழர்Ó என்கிறார். 

தோழரின் பதில் தன்னை சற்று நேரம் உறைய வைத்ததாக நந்தலாலா கூறினார்.

அவர் சொல்லி பல ஆண்டுகள் இருக்கும். ஆனால், அந்த வார்த்தைகள் இன்னும் எனது செவிகளுக்குள் தேங்கி நிற்கின்றன.

அதன் பிறகு ஒருநாள், திண்டுக்கல்லில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒரு சின்ன டப்பாவில் தயிர் சோறு சாப்பிடும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தேன்.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த தோழரின் வாழ்க்கை முறையை விவரிக்க இதுவே போதுமானது என நினைக்கிறேன். காகித ஆயுதம் இதழின் முதல் இதழில் தோழரைப் பற்றி எழுத வேண்டும் என்று விரும்பினேன். 

அவருடைய வாழ்க்கை பெண்ணுரிமைப் போராட்டக் களத்திலும், பொதுவுடமை இயக்கத்தின் போராட்டக் களத்திலும் முக்கியமானது ஆகும்.

அவருடைய நேர்காணலை காகித ஆயுதம் இதழின் முதல இதழில் வெளியிட விரும்பினேன். அதையடுத்து தோழர் இலமு, இந்த நேர்காணலை எடுத்து அனுப்பினார். 

இதோ அவருடைய நேர்காணலின் முக்கிய அம்சங்கள்...

தமிழகத்தில் பெண் அரசியலின் முகவரியாக முதல்வரியாக அடையாளமாய் திகழ்பவர் தோழர் கே.பாலபாரதி. 

3 முறை திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். சட்டமன்றத்தில் எளிய மக்களின் குரலாய் எதிரொலித்த அவரது குரல் இப்போதும் ஆவணமாக உள்ளது. 

சத்துணவு ஊழியராக வாழ்கையைத் தொடங்கி, மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராக மத்தியக் குழு உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறார். 

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் மக்கள் பிரச்சனை எதுவானாலும் இவரது கால்கள் அந்த மக்களைத் தேடி ஓடும். தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்படும் மக்களின் குரலாய் இவருடைய குரல் இன்றைக்கும் ஓங்கி ஒலிக்கிறது.  

இலக்கியத்தில்  கவிஞராக அறிமுகமாகி  அவர்களும், அவர்களும், சில உண்மைகளையும், சில பொய்களையும் தந்தவர். மார்க்சிய பெண் ஆளுமையாக விளங்கிய பாப்பா உமாநாத்தை பற்றி லட்சிய நதியாய்..! என்ற நூலையும், தோழர் என்.வரதராஜன் வாழ்கை வரலாற்றையும்  நூலாக எழுதி இருக்கிறார். 

அரசியல் நையாண்டிகளை நறுக் கவிதைகளாக எழுதக்கூடியவர். உரைவீச்சிலும் மக்கள் தன்பால் ஈர்ப்பவர். 

ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த அரசியல் செயல்பாட்டாளர் என்ற விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். 

அவருடைய நேர்காணலை பதிவு செய்வதில் காகித ஆயுதம் பெருமிதம் கொள்கிறது..

பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிற நிகழ்வுகளை தடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் அரசுகள் இல்லை என்பதே நிஜம். பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியான நாடாக இந்தியா இல்லை என்பதை பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சமீபத்தில் பாண்டிச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஒரு குப்பைத் தொட்டியில் வீசி சென்றுள்ளனர். ஆனால், பொதுவெளியில் இந்தக் கொடுமை இயல்பான நிகழ்வாக மாற்றப்படுகிறது. 

எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டுக்கு ஓடி வரும் தேசிய மகளிர் ஆணையம் பாண்டிச்சேரிக்கு வருவதில்லை. அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசாங்கத்திற்கு கெட்டபெயர் வந்துவிடுமோ என்ற குறுகிய நோக்கம்தான் காரணம். தங்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிக்கொள்கிற ஒருதலைப் பட்சமான போக்குதான் தேசிய மகளிர் ஆணையத்திடம் உள்ளது. ஆணையத்தின் மேம்போக்கான இந்த பார்வை கண்டனத்துக்கு உரியது. பெண் குழந்தைகளுக்கு நாடு முழுவதும் இழைக்கப்படும் கொடுமைகளுக்கு யார் பொறுப்பேற்பது. அந்த குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. பாண்டிச்சேரியில் மட்டுமா இது நடக்கிறது. நாடு முழுவதும் இந்தக் கொலைகள் தொடர்கிறது. குற்றாவாளிகளைப் பாதுகாக்கிற அரசாக பாஜக இருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். 

மாறாக, ஒரு படுகொலைக்கு பின் மக்கள் அதை மறந்துவிடுகிறார்கள். ஒரு பறவையின் மரணம் ஒரு விலங்கின் மரணத்தைப் போல குழந்தைகள் மீது நடத்தப்படுகிற பாலியல் தாக்குதலும், மரணமும் மாறிவருகிறது. இந்தப் போக்கு சமூகத்திற்கு நல்லதல்ல. 

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தான் பெண் உரிமை பேசப்படுகிறது. 1990களுக்கு பிறகு தான் தலித் குழந்தைகள் படிக்கச் சென்றார்கள். எனவே பெண்ணுரிமையும், பெண் கல்வியும் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டதாக கருதமுடியாது. இப்போதும் 10ஆம் வகுப்பு படித்து முடித்த பிறகு பெண்கள் திருமணத்தை நோக்கித் தான் தள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய உயர்கல்விக்கு குடும்பத்தினரே ஒத்துழைப்பதில்லை. அரசு வேலைக்குச் செல்கிற பெண்களின் சதவீதம் ஒட்டுமொத்த பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே, சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் முன்னேறியிருப்பதாக சொல்ல முடியாது, 

இந்தச் சமூக அமைப்பு நில உடமை சமூக அமைப்பாகவும், முதலாளித்துவ அமைப்பாகவும் உள்ளது. முதலாளித்துவ சமூகம் பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதிக்கிறது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு பெண்ணை அடக்கி ஒடுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. 

அரசியல் என்பது ஒரு கட்சி சார்ந்தது அல்ல, கொடி சார்ந்தது அல்ல. இந்த சமூகம் எப்படி இயங்க வேண்டும் என்று சிந்திப்பதுதான் உண்மையான அரசியல் என்று நான் பார்க்கிறேன். 

இருளாக இருக்கும் சமுதாயத்தை மின்சாரத்தால் மாற்ற முடியும். பழைமைச் சிந்தனைகளை விலக்கி வெளிச்சத்தை உருவாக்க வேண்டும் என்றால், சமூக அறிவியல் தான் தேவைப்படுகிறது. அரசியல் என்பது சமூக அறிவியல் தான். 

முதலில் ஒரு குடும்பம் ஜனநாயகப் பூர்வமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள பெண்களை மதிப்பதும், சக மனுஷியாக பார்ப்பதும் ஒரு குடும்பத்தின் ஜனநாயகப் பண்பாக வளர்க்கப்பட வேண்டும். 

1996ஆம் ஆண்டு மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடைபெற்ற போது மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா அறிமுகம் செய்தபோது அது தோல்வியடைந்தது. 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமரான பிறகு இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. மோடி ஆட்சியின் போதும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. 

சிறுபான்மை பெண்கள், பட்டியலினப் பெண்களுக்கான உரிமை இதில் இருக்காது என்ற வாதம் இருந்து வருகிறது. எல்லா நிலைகளிலும் உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்களே ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்ற அச்சமும் வாதமும்  இருக்கிறது. இது போன்ற வாதங்கள் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 2010ல் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலில் ஆண் வாக்காளர்களில் விட பெண்கள் தான் அதிகமாக வாக்களிக்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்குரிய இட ஒதுக்கீடுக்கு இன்னும் முடிவு கிடைக்கவில்லை. இதுதான் எதார்த்த நிலை. 

நான் மக்களோடு பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு பொருத்தமான கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. அதனால் தான் அந்த கட்சியை தேர்வுசெய்து அதில் பயணிக்கிறேன். ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். 

எனது சாதனை எதுவென்று கேட்கிறீர்கள்? பெண்ணாக இருப்பதே ஒரு சாதனைதான். நாங்கள் பிறக்கிறபோதே, கருக் கொலை, சிசுக்கொலை செய்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு அப்போதும், பாதுகாப்பு இல்லை. இப்போதும் பாதுகாப்பு இல்லை. 

ஒரு பெண் ஒரு ஆணைப் பிடிக்கவில்லை என்று மறுத்தால் அமில வீச்சுக்கு ஆளாகிறாள். சாதி மறுத்து தனக்கு பிடித்த இளைஞனை விரும்பக்கூட அவளுக்கு உரிமையில்லை. பெற்றோரே ஆணவக் கொலை செய்கிறார்கள்.  வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் இருக்கிறது. ஆனாலும் ஸ்டவ் வெடித்துச் சாகிறாள்.  இத்தனை தடைகளையும் மீறி ஒரு பெண் மேடையில் அமர்வதே பெரிய சாதனையாகும். 

மேடையில் அரசியல் பேசுவதற்கு பதிலாக பெண்ணியம் பற்றியே பேசுகிறீர்கள் என்கிறார்கள். இன்னமும் கூட பெண்கள் பற்றி பேசுவதை புரிந்து கொள்ளாத சமூகமாகவே நமது சமூகம் இருக்கிறது. 

தந்தை பெரியார், பிரடெரிக் ஏங்கெல்ஸ் போன்றவர்கள் பெண் குறித்து தீர்க்கமான ஆய்வுகளை செய்திருக்கிறார்கள். பெண் ஏன் அடிமையானாள்? இன்றைக்கு நாகரீக வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது, அந்த உயரமான இடத்தில் இருந்து நாம் பார்த்தால் கூட பெண் என்பவள் அதளபாதாளத்தில் தான் இருக்கிறாள். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு இருக்கிறாள். பெண் அடிமைத்தனம் என்பது மிக நுட்பமாக தொடர்கிறது. 4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து  மூக்கில் மின்சார வயரைச் செலுத்தி கொலை செய்கிறார்கள். இந்தச் செய்திகளை படிக்கும்போது நாம் நாகரீகச் சமூகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. தடை செய்யப்பட்ட குழந்தை திருமணங்களும் தலைகாட்டாமல் இல்லை. இன்றைக்கும் சில மாவட்டங்களில்  பெண் சிசுக்கொலை, கருக்கொலை தொடர்கிறது. 

பெண்கள் குழந்தைகள் மீதான தாக்குதலை தடுப்பதற்கான எழுத்துக்களை தீவிரமாக கொடுக்க வேண்டியுள்ளது. அதுபோன்ற புத்தகங்கள் காணக்கிடைக்கவில்லை. 

எல்லா அரசியல் கட்சியிலும் பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் ஒரு கட்டுக்குள் தான் இருப்பார்கள். ஆணாதிக்க சிந்தாந்தம் தான் எல்லா காலங்களிலும் மேலோங்கி நிற்கிறது. மானுட சமூகத்தின் வளர்ச்சியில் மகப்பேறு ஆற்றல் கொண்ட இயற்கையான  சக்தியும், திறனும்,  பெண்களுக்கு இருக்கிறது. 

உலகளவில் எந்தப் பிரசவத்திலும் ஆண் மரணிப்பதில்லை. பெண்தான் மரணிக்கிறாள். ஆகவே பெண்ணை ஆணுக்கு நிகராக கூறுவதே அநீதி என்று தோன்றுகிறது. இருப்பினும் ஆண் பெண் இருபாலினத்தவரும் சமம் என்பதையாவது இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சமூக உற்பத்தியில் எதிர்கால சமூக அமைப்பின் முன்னோக்கிய மாற்றங்களில் பாலின சமத்துவம் தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

-இலமு

முழுக்கட்டுரையுடன், காகித ஆயுதம் இதழை புத்தகமாக வாசிக்க கீழே உள்ள லிங்க்கைச் சொடுக்கவும்

https://drive.google.com/file/d/1bH05QQKKtatFbruox0s5Crz6il3hD8ec/view?usp=sharing

Previous Post Next Post

نموذج الاتصال