கபடி வீராங்கனை கார்த்திகா பற்றி இத்தனை செய்திகளும் பரிசுப்பணமும் தரப்படுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது போதாது. இன்னும் கூட அதிகமாக கார்த்திகா கொண்டாடப்பட வேண்டும். ஒப்பீடுகள் இல்லாமல் பெரிய அளவில் இதை முன்னெடுக்க வேண்டும். இன்னும் அதிகமான பரிசுகளையும் பாராட்டுகளையும் கொடுக்கவேண்டும். அதற்கு காரணங்கள் உண்டு.
ஜூனியர் லெவலில் வெல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பெரும்பாலும் அரசு ஊடக மக்கள் தரப்புகளில் பெரிய அங்கீகாரம் கிடைக்காது. பரிசுப்பணமும் கிடைக்காது. ஜூனியர் லெவலில் ஒவ்வொரு போட்டியிலும் தட்டுதாடுமாறி தன் சொந்த முயற்சியில் செலவில் மேலே ஏறிவந்து சீனியர் லெவலில் பெரிய அளவில் அதுவும் சர்வதேச அளவில் சாதித்தால்தான் பெரும்பாலும் பெரிய பரிசுத்தொகையும் பாராட்டும் கிடைக்கும். ஜூனியர் லெவலில் வெளிநாட்டு போட்டிகளுக்கு ஸ்பான்சர் கிடைக்காது, உபகரணங்கள் பயிற்சிகளுக்கு பணமிருக்காது சப்போர்ட் இருக்காது. தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டால் பஞ்சாப், ஜார்கண்ட், கேரளா லாபிகளை கடந்து தேசிய அணிக்கு தேர்வாவது அவ்வளவு எளிதில்லை. இதனாலேயே பலரும் என்னதான் தன் குழந்தைக்கு திறமை இருந்தாலும் பள்ளி லெவலுக்கு மேல் அவர்களை வளர்த்தெடுக்க மாட்டார்கள். ஒரு ஸ்போர்ட்ஸ் கோட்டோவோடு விளையாட்டுக்கு குட்பைதான்!
ஜூனியர் லெவலில் பல பெரிய சாதனைகள் செய்து, அடுத்தடுத்து முன்னேற வழியில்லாமல் ஸ்பான்சர்கள் சப்போர்ட் கிடைக்காமல் விளையாட்டினை கைவிட்ட ஒரு நூறு பேரை அறிவேன். இதை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் உண்டு. அது ஆடுகிற விளையாட்டு சார்ந்த பாகுபாடு.
விளையாட்டுகளில் நம் கண்ணுக்கு தெரியாத வர்க்க வேறுபாடு உண்டு. ஸ்குவாஷ், படகுசவாரி, ஆர்ச்செரி, ரைபிள், கோல்ஃப் மாதிரி அதிகமாக யாரும் கலந்துகொள்ளாத செலவு வைக்கிற போட்டிகளில் பெரிய பணக்கார குழந்தைகள்தான் ஈடுபடுவார்கள். பணக்காரர்கள் ஆடினாலும் அவர்களோடு மிடில்கிளாஸும் ஆடுவது கிரிக்கெட், செஸ் போன்றவை. அதிகமும் வலியை தரக்கூடிய அடிபடக்கூடிய மிகுந்த உழைப்பை கோரும் ஆட்டங்களில் ஆடுகிறவர்களில் பெரும்பான்மை லோயர் மிடில்கிளாஸ்களாக ஏழைகளாக சேரிப்பகுதிகளில் வாழ்கிறவர்களாக விளிம்பு நிலை மனிதர்களாகவே இருப்பார்கள்,
தடகளம், குத்துச்சண்டை, கபடி, மல்யுத்தம், கால்பந்தாட்டம், ஹாக்கி மாதிரிஞ் இது எல்லாமே மிகவும் கடினமான பயிற்சிகளை கோரக்கூடியவை. ரத்தம் சிந்தி ஆடக்கூடியவை. வலிதான் அங்கே பிரதானம். ஒவ்வொரு நாளும் வலிதான். எலும்புகளை உடையும். தசைகள் கிழியும். ஆனால் அந்த வலிகளுக்கு பலன் மிகவும் குறைவாகவே இருக்கும்.
தேசிய அளவில் வென்றால் அதிகபட்சம் ஒரு கவர்மென்ட் வேலை அல்லது காவல்துறை வேலை கிடைக்கும். சர்வதேச அளவில் வென்றால் ஒரு பயிற்சியாளர் ஆகலாம். நமக்கு மிகசாதாரணமாக இருக்கிற இந்த பரிசுகள்தான் அவர்களுக்கான மீட்சி. அவர்களுக்கான விடுதலை.
பத்து பன்னிரெண்டு ஆண்டுகள் இருக்கும். அப்போது இதுமாதிரியான விளையாட்டு வீரர்களைத் தேடித்தேடி பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நேரம். ஜூனியர் லெவலில் சாதித்துக்கொண்டிருந்த ஒரு 300 பேரை பேட்டி எடுத்து பதிவு செய்திருப்பேன். அவர்களில் ஒரு பத்து பேர்தான் சீனியர் லெவலுக்கே வந்து சேர்ந்திருப்பார்கள். நான் பேட்டி எடுத்த பலரும் வடசென்னையை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அல்லது ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் படிக்கிற கிராமத்து ஏழை மாணவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் ஜூனியர் லெவலில் வென்று கல்லூரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம்பிடித்து அப்படியே படிப்பில் கவனம் செலுத்தி விளையாட்டை கைவிட்டு காணாமல் போயிருக்கிறார்கள்.
சில பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகி விளையாட்டை கைவிட்டிருக்கிறார்கள். சிலருக்கு தொடர்ந்து விளையாட பணமின்றிஞ் சிலருக்கும் ஸ்பான்சர் கிடைக்காமல். சிலருக்கு இந்த சிஸ்டத்தின் மீது வெறுப்பு வந்து என விளையாட்டை கைவிட்டவர்கள் ஏராளம்.
கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சூழல் அப்படியேதான் இருக்கிறது. இன்னமும் ஜூனியர் லெவல் தாண்டுவதில் சிக்கல்தான். இத்தகையை சூழலில்தான் கார்த்திகாவின் வெற்றியும் அதைத்தொடர்ந்து அவருக்கு கிடைத்திருக்கிற இந்த வரவேற்பும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால் கார்த்திகா வெறும் கார்த்திகா இல்லை அவர் கண்ணகி நகர் கார்த்திகா!
கண்ணகி நகர் பகுதி உருவான வரலாறும், அங்கே வசிப்பவர்கள் யார் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கும். சென்னையின் மையப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி அது. அங்கே குழந்தைகள் வாழ்வதற்கான சிறப்பான சூழல் இன்றுவரை இல்லை. 2004 சுனாமிக்கு பிறகு சென்னையிலிருந்து படிப்படியாக குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்பட்டு சென்னைக்கு வெளியே பல கிலோமீட்டர் தொலைவில் கண்ணகி நகரில் குடியமர்த்தப்பட்டனர். கிட்டத்தட்ட இப்போது 25ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். எல்லோருமே உடல் உழைப்பு தொழிலாளர்கள்தான்.
இவர்கள் எல்லாம் சென்னையின் மையப்பகுதியில் பல்வேறு உடல்உழைப்பு வேலைகள் பார்த்துவந்தவர்கள். அந்த தொழிலை கைவிடமுடியாமல் ஒவ்வொரு நாளும் பலமணிநேரம் பயணம் செய்து சென்னைக்கு வந்து வேலை செய்துவிட்டு ஊர் திரும்புவார்கள். அல்லது இங்கேயே தங்கிவிடுவார்கள். இதனால் இவர்களுடைய குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பும், வழிகாட்டுதலும் இல்லாமல் கல்வி இடைநிற்றல் மிக அதிகமாக இருந்தது. குழந்தை திருமணங்களும் அதிகம். பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள முடியாத பெற்றோர்கள் பத்தாம்வகுப்பு படிக்கும்போதே திருமணம் முடித்துவிடுவார்கள்.
2021ல் VHS எடுத்த ஒரு சர்வே படி 71% பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதையும், 53% பெண் குழந்தைகளுக்கு குழந்தைதிருமணம் நடந்ததையும் கண்டறிந்தனர்.
இக்காரணங்களால் இங்கே குழந்தைகள் கல்வி கற்க முடியாத, குறிப்பாக பெண் குழந்தைகள் படிப்பை தொடர முடியாத நிலையே இருந்து வருகிறது. இங்கே இடைநிற்றல் விகிதம் 40% என்கிற அளவுக்கு இருக்கிறது. இதில் 67% பையன்கள்! பையன்கள் போதை பழக்கங்களுக்கும் அடிமையாவது அதிகம்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம், இங்கே போதிய பள்ளிகள் கிடையாது. அரசு கல்லூரிகள் கிடையாது. மருத்துவமனை வசதிகள் கிடையாது. சுகாதாரம் கிடையாது. குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் கிடையாது. என பல கிடையாதுகள் உண்டு. குழந்தைகள் சிறுவயதிலேயே வேலைக்கு செல்லவேண்டிய நிர்பந்தங்களும் உண்டு.
இத்தகைய சூழலில் இருந்துதான் கார்த்திகா போல ஒரு பெண் மேலே ஏறிவந்து சாதித்திருக்கிறாள். கார்த்திகாவின் வெற்றி சாதாரணமான ஒன்றல்லஞ் கார்த்திகாவின் வெற்றி கண்ணகி நகரின் பல பெண்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய வெற்றியாக இருக்கும். இது அவர்களுக்கான நம்பிக்கையாக இருக்கும். அடுத்தடுத்து இன்னும் பல கார்த்திகாகள் உருவாகி வரவும் வெல்லவும் முன்னேறவும் வழிவகுக்கும்.
அதனாலேயே கார்த்திகாவை இன்னும் இன்னும் அதிகமாக நாம் கொண்டாட வேண்டும். ‘’வெற்றி’’ என்பது எப்படிப்பட்டது அதை அடைந்தால் நமக்கு என்ன ஆகும் எப்படி நம் வாழ்வு மாறும் என்பதை கண்ணகி நகர் குழந்தைகள் காணும்படி கொண்டாடவேண்டும். பிரமாண்டமான கொண்டாட்டமாக அது இருக்க வேண்டும். அது கார்த்திகாவுக்கு மட்டுமல்ல அங்கிருக்கிற ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஒரு புதிய வெளிச்சத்தை நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கும். ஏனெனில் கார்த்திகா போன்றவர்கள் விளையாடுவது வெறும் பரிசுக்காக மட்டுமல்ல மரியாதைக்காக... சமூக அந்தஸ்துக்காக... சமூக நீதிக்காக.
புதியதலைமுறைக்காக வடசென்னை பகுதியில் ஒரு சிறிய கால்பந்தாட்ட பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவரை பேட்டி எடுப்பதற்காக சென்று இருந்தேன். அந்த குழுவில் இருந்த மாணவர்கள் எல்லோரும் துப்புறவு பணி செய்கிற, சாலையோரம் வாழ்கிற விளிம்புநிலை மனிதர்களின் பிள்ளைகள். எப்படியாவது விளையாட்டில் சாதித்து மேலே ஏறி வந்துவிடவேண்டும் என்பதுதான் ஒரே இலக்காக இருந்தது.
அந்த பேட்டியின் போது அந்த பயிற்சியாளர் ஒரு விஷயம் சொன்னார். ‘’இவங்களுக்கெல்லாம் விளையாட்டுங்கறது வெறும் விளையாட்டு இல்ல விடுதலைஞ்’’ என்றுஞ் என் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத ஒரு வாக்கியம் அது. ‘’இங்கே ஒரு ஆள் ஜெயிச்சா கூடவே பத்து பேரை இன்ஸ்பையர் பண்ணுவான்ஞ் அவனை பார்த்து பத்து பேர் ஓடுவான்ஞ் பத்து பேர் கிரவுண்டுக்கு ஒழுக்கமா வருவான் அதிகமா பயிற்சி பண்ணுவான்... அந்த ஒருவெற்றி ரொம்ப முக்கியம் சார்’’ என்றார்.
கார்த்திகாவின் வெற்றி அந்த ஒருவனுடைய வெற்றி. இன்னும் பத்து பேரை கிரவுண்டை நோக்கி வரவழைக்கிற வெற்றி! கண்ணகி நகரை மாற்றுகிற வெற்றி! இந்த ‘’கார்த்திகா எக்ஸ்பிரஸ்’’ இன்னும் நிறைய ஓடவேண்டும்... நிற்காமல் ஓட வேண்டும். வெற்றிகளை குவிக்கவேண்டும்!
(கட்டுரையாளர் சினிமா திரைக்கதாசிரியர்)
கட்டுரையையும் காகித ஆயுதம் இதழையும் புத்தக வடிவில் வாசிக்க கீழே உள்ள லிங்க்கைச் சொடுக்கவும்...
https://drive.google.com/file/d/1bH05QQKKtatFbruox0s5Crz6il3hD8ec/view?usp=sharing

