இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை சீர்குலைத்தவர் - ராதா மனோகர், கனடா



இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும்  புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா?

புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் வரதராஜ பெருமாள்!

இலங்கை இந்திய ஒப்பந்தப்படி வடகிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்டது. அதற்கு சுயாட்சியுடன் கூடிய சில அதிகாரங்களையும் தனி சட்டமன்றத்தையும் உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்தனர்.

அதாவது, தமிழர்களுக்கு தனிநாடு கொடுத்துவிட்டதாக, ஜேவிபியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்! 

காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு   நிலைமை மோசமாகி விட்டிருந்தது.

சராசரியாக  ஒரு நாளைக்கு 20 இல் இருந்து 50 பேர்வரை அந்த மாவட்டங்களில்   கொலை செய்யப்பட்டனர்.

மின்சார ஜெனெரேட்டர்கள், ரயில்வே பாலங்கள், வங்கிகள், பெரும் விற்பனை நிலையங்கள் பலவும் பெற்ரோல் குண்டுகளால்  பற்றி எரிந்து கொண்டிருந்தன..

குடிநீர்  மின்சாரம் போக்குவரத்து போன்றவற்றுக்கும் மக்கள் அல்லாடி கொண்டிருந்தனர். மளிகை கடைகள் வெறிச்சோடி கிடந்தன.

கம்புறுபிட்டியா, அக்குரச,  உருபோக்க, தேனியாய போன்ற பகுதிகள்  பாதுகாப்பு படைகள் செல்ல முடியாத பகுதிகளாகி இருந்தன!

இந்தியா தலையிட்டு ஈழத்தை பிரித்து கொடுத்து விட்டது என்று சாதாரண சிங்கள மக்கள் கருதும் அளவுக்கு இனவாதிகளின் பிரசாரம் கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாண அரசு என்பது ஒரு தனிநாடு அல்ல என்று, தென்னிலங்கை மக்களுக்கு விளக்கி, அங்கு உருவான பதட்ட நிலைமையை தணிக்க வேண்டிய நிலையில்  இலங்கை அரசு இருந்தது.

 இந்த காலக் கட்டங்களில் இலங்கை அரசு திரு வரதராஜ பெருமாளின்  உதவியை நாடியது.

நடக்க இருக்கும்  வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில்  இ.பி.ஆர்.எல்.எப்.  கட்சியோடு ஆளும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை  சந்திக்கலாம் என்ற யோசனையை ஜேயார் ஜெயவர்த்தனா வரதராஜ பெருமாளிடம் முன்வைத்தார்.

வரதராஜ பெருமாள் கேட்ட எந்த உதவியையும் உடனுக்கு உடன் நிறைவேற்றினார். வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஜேயார் ஜெயவர்த்தனாவின் தலைமயிலான ஐக்கிய தேசிய கட்சியும்  இ.பி.ஆர்.எல்.எப். கட்சியும் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தால், அது தென்னிலங்கை இனவாதிகளின்  பலத்தை முறியடித்து விடும்!

இதற்காக ஐக்கிய தேசிய கட்சி இ.பி.ஆர்.எல்.எப். கொடுக்கும் தொகுதிகளை சிக்கல் இல்லாமல் ஏற்று கொள்ளவும் தயாராகி இருந்தது .

மேலும் மாகாண அரசில் பெரிதாக அமைச்சு பதவிகளை கூட ஜேயார் அரசு  கோரவில்லை.

வடக்கு கிழக்கு மாகாண சபை அரசு ஒரு தனி நாடல்ல என்ற நம்பிக்கையை சிங்கள மக்களுக்கு கொடுத்தாலே போதும் என்ற  மனோநிலையில் இலங்கை அரசு இருந்தது.

வரதராஜ பெருமாளை ஜேயார் ஜெயவர்த்தனா, பிரேமதாசா, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி போன்ற  ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் பூரணமாக நம்பினார்கள்.

எல்லாம் சரியாக போவதாக அதுவரை இலங்கை அரசு நம்பி கொண்டிருந்தது.

இந்த ஏற்பாடு இந்திய ரா அதிகாரிகளுக்கு வேப்பங்காயாக கசந்தது.

இந்திய பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களின் நோக்கம் நேர்மையானதுதான்.

அவர் உண்மையாகவே தமிழர்களுக்கு ஒரு மாகாண அரசு உருவாக வேண்டும் என்றுதான் விரும்பினார்.

ஆனால் வழக்கம் போல இந்திய அரசுக்குள் வேரோடி போயிருந்த ரா சங்கிகள் தங்களின் அகண்ட கனவுகளுக்கு இலங்கையை பகடைக் காயாக பயன்படுத்த  தொடங்கினார்கள்!

(இப்போதும் ரா உளவு அதிகாரிகள் அந்த வேலையைதான் செய்கிறார்கள்)  

புதிதாக அமையப்போகும்  வடக்கு கிழக்கு இணைந்த மாகாண  அரசு, சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு புதிய ஒற்றுமையை  உருவாக்கி விடும் என்று  பயந்தார்கள்!

அப்படி ஒரு சுமுக சூழ்நிலை உருவானால் அதன் பின்பு இந்திய அமைதி காக்கும் படை  இலங்கையில் நிற்கவேண்டிய அவசியம் இல்லாது போய்விடும் அல்லவா ?

அப்போது புலிகள் பெரும் பலம் வாய்ந்தவர் களாக இருக்கவில்லை. ஏற்கனவே அச்சுவேலி வரை ஓடினார்கள் ஓடினார்கள், குடாநாட்டின் ஓரத்திற்கே ஓடினார்கள்.

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு அஞ்சி பின்வாங்கி புலிகள் ஓடத்தொடங்கிய நேரத்தில்தான் அவர்களைக் காப்பாற்ற  இலங்கை வந்தது இந்திய ராணுவம் - இதுதான் உண்மை!

போரிடும் இரு பகுதிகளும் மாகாண அரசை ஒற்றுமையாக நிறுவிய பின்பு இந்திய படைகள் அங்கு நிற்பதற்கு உரிய தார்மீக உரிமை இந்திய அரசுக்கு இல்லாமல் போய்விடும் அல்லவா?

இந்த நிலையில் தேர்தலுக்கு இறுதி சிலநாட்கள் வரை ஜேயார் ஜெயவர்த்தனா அரசை நம்பவைத்து இறுதி நேரத்தில் கையை விரித்தார் வரதராஜ பெருமாள்!

கூட்டணிக்கு தயார் இல்லை என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்தார்.

வரதராஜ பெருமாளை நம்பி ஜேயாரின் ஐக்கிய தேசிய கட்சியும் தனது தேர்தல் நடவடிக்கைகளை கவனிக்காமல் இருந்து விட்டது!

கிழக்கு மாகாணத்தில் இருந்த சுமார் 64 ஆயிரம் சிங்கள மக்கள் பயத்தில் வாக்கு போடவில்லை 

சுமார் ஒரு இலட்சம் சிங்கள மக்கள் அங்கு அகதி முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர்!

வரதராஜ பெருமாள் கொடுப்பதை வாங்கி கொள்ளும் முடிவோடுதான் யுஎன்பி இருந்தது. இப்போது காலம் கடந்து விட்டது 

வடக்கு கிழக்கு தேர்தலில் பங்கு பெறுவதற்கு உரிய வேட்பாளர் தேர்வு போன்ற விஷயங்களை கவனிக்காமல் இருந்தது யுஎன்பி. மறுபுறத்தில் தென்னிலங்கை தீவிரவாதிகளோ, 

“பார்த்தீர்களா  ஐக்கிய தேசிய கட்சியை வரதராஜ பெருமாள் உதறி தள்ளிவிட்டார். எனவே நாங்கள் கூறியது போல இது தனிநாடுதான்Ó என்று முன்பை விட  மோசமான  நாசகார வேலைகளை முடுக்கி விட்டனர் 

இந்த கலவரத்தில் ஒரு மாதிரியாக தேர்தலை இந்திய ராணுவம் நடத்தி முடித்தது. வரதராஜ பெருமாள் ஆட்சியை பிடித்தார் 

மறுபுறத்தில் ஜேவிபியில் இருந்த தயான் ஜெயதிலகா  என்பவர் இலங்கையில் இருந்து தப்பி தமிழகத்திற்குள் நுழைந்து இ.பி.ஆர்.எல்.எப். இன் தயவில் அவர்களோடு சுமார் ஓராண்டுக்காலம் இருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நட்புறவை உதறி தள்ளிய தயான் ஜெயதிலகாவுக்கு இ.பி.ஆர்.எல்.எப். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுத்தது, 

அதுமட்டுமின்றி, தயான் ஜெயதிலகாவை வடக்கு கிழக்கு மாகாண அரசில் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சராக்கியது.

மறுபுறத்தில் ஜேவிபியில் இருந்து விலகியதாக கருதப்பட்ட மற்றொரு தோழர் குமார் குணரத்தினம் இந்திய அமைதிப் படைக்கு எதிராக  தாக்குதல்களை மேற்கொண்டார். சில இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்தனர். 

இப்படியாக இவர்களின்  இரட்டை அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்தன.

குண்டுகளும்  துப்பாக்கி வேட்டுக்களும் தென்னிலங்கையை அதிர வைத்தது.

இந்த நிலையில் ஜேயார் ஜெயவர்த்தனாவின் அதிகாரம் திரு பிரேமதாசாவின் கைகளுக்கு வந்தது.

அவர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து  வடக்கு கிழக்கு ஆட்டத்தைத் தொடங்கினார். 

மறுபுறத்தில் ரஞ்சன் விஜயவர்தனவை பாதுகாப்பு அமைச்சராக்கி  இனவாதிகளுக்கு எதிரான  தென்னிலங்கை ஆட்டத்தையும் தொடங்கினார்.

அன்று  ஐக்கிய தேசிய கட்சியோடு வரதராஜ பெருமாள் வடக்கு கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைத்திருந்தால்  அதை இலங்கை அரசே முன்னின்று காப்பாற்றி இருக்கும்.

அதை வெற்றிகரமாக செயல்படுத்தி  தென்னிலங்கை மக்களின் சந்தேகத்தை போக்கி இருக்கும்.

இவ்வளவு நன்மைகளும் நடந்தால்  இந்திய ராணுவம் இலங்கையை விட்டு தானாகவே போயிருக்கும். 

 ஆனால் அவர்கள் இலங்கையில் நிரந்தரமாக இருக்கும் நோக்கத்தில் அல்லவா  வந்திருந்தார்கள்.

வடக்கு கிழக்கு மாகாண அரசை கருவிலேயே  கொன்று இந்திய உளவுத்துறை அதிகாரிகளை மகிழ்வித்தார்   அண்ணாமலை வரதராஜ பெருமாள். அதன் நீட்சியே பின்னர் நடந்த அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது.

https://drive.google.com/file/d/1bH05QQKKtatFbruox0s5Crz6il3hD8ec/view?usp=sharing

Previous Post Next Post

نموذج الاتصال