அண்ணாவைப் போல எளிமையானவரா காமராஜர்?

1960களில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது,

இந்திய தேசியகாங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் மற்றமாநிலங்களில் இருந்து உடனடியாக உணவு பொருட்களை தருவித்திருக்க முடியும்,

ஆனாலும் தமிழ்நாடு காங்கிரஸ் பண்ணையார்களின் உணவு பதுக்கலுக்கு உடந்தையாக மவுனமாக இருந்தார்,

மக்காசோளத்திற்கு கையேந்தி வரிசையில் நின்று செத்து மடிந்த ஏழைகளை எலிக்கறி தின்னச்சொன்னார்.

தமிழ்நாடாக இருந்தாலும், மற்ற மாநிலங்களாக இருந்தாலும், போகுமிடமெல்லாம் காங்கிரஸ் பண்ணையார்களின் பங்களாக்களிலே தங்கினார்.

காங்கிரஸ் என்பது இன்றளவும் பண்ணையார்களின் கட்சி. டிவிஎஸ் ஐயங்கார் குழுமம் பரிசளித்த மாடமாளிகையில் குடியிருந்தார்.

தனியார் நிறுவனம் பரிசளித்த இறக்குமதி செய்யப்பட்ட Chevrolet Deluxe சொகுசு காரில் வலம் வந்தார். இம்ப்போர்டட் சிகரெட்களை ஆயிரக்கணக்கில் ஊதித்தள்ளினார்.

இன்னொருபக்கம் இதற்கு நேரெதிர் துருவமாக அண்ணாவோ, கறை படிந்த வேட்டிசட்டையும், தோளில் ஒரு துண்டு சகிதமாக ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பங்கேற்றார்.

பேசிப்பேசியே காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தினார். கூட்டம் முடிந்ததும் தனது தம்பிகளின் நிலையறிந்து திண்ணைகளிலும், அரச மரத் திண்டுகளிலும், பெஞ்ச்களிலும் கொசுக்கடியில் படுத்துறங்கி, கண்விழித்தார்.

பாெதுக்கழிப்பறைகளில் குளித்து, மாநிலம் முழுக்க பயணப்பட்டார்.

பகட்டு ஆடையோ, படாடோப அறுசுவை விருந்தோ பணக்காரர்களின் பரிசளிப்பையோ விரும்பி ஏற்றவர் அல்ல.

கடைசி வரை தனது கட்சிக்காக நித்தமும் உழைத்து, ஏழைப்பங்காளனாகவே வாழ்ந்து மறைந்தார்.
எளிமை என்பது தனிமனிதக் கூறு, அதற்கும் தலைமைப் பண்புக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பதை அறிந்தே இருந்தார். தம்பிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்துகாட்டினார்.

மாபெரும் தமிழ்க்கனவை அவர்களுக்குள் கடத்தினார். கத்தியின்றி, இரத்தமின்றி ஆரியத்திற்கு எதிரான போருக்கு தம்பிகளை தளபதிகளாக தயார்படுத்தினார்.

காங்கிரஸ் மிட்டாமிராசுகள், கனவான்களுக்கு எதிராக எளியோர்களை ஏவுகனைகளாக முன்நிறுத்தினார். விவசாயக்கூலிகளை ஏமாற்றிப் பிழைத்த பெருஞ்செல்வந்தர்களுக்கு எதிராக வறிய மக்களை, இராவணனின் தம்பிகளாக மாற்றி நியாயத்திற்காக போராடச்செய்தார்.

திராவிட இயக்கக்கவிஞர் புலவர்கள் படைத்த இராவண காவியத்திற்கு மரியாதை செய்தார்.
இம்ப்போர்டட் கார், இம்ப்போர்டட் சிகரெட்களுக்காக மாதாமாதம் பலாயிரங்கள் செலவழித்தவரல்ல.

பத்து பைசா மூக்குபொடியை போட்டுக்கொண்டு மூச்சை இழுத்து பேசி மக்களை தனது பேச்சாற்றலால், அறிவாற்றலால், சதூரியத்தால், சமயோஜிதத்தால், வாதத் திறமையால் கட்டிப்போட்டார்.

ஆசிரியராக வாழ்க்கையை துவங்கியதால், ஏழைஎளியோர் எல்லோருக்கும் புரியும்படியும் பேசினார், அமெரிக்கா சென்றபோது அவர்களே அசந்துபோகும் ஆங்கிலத்திலும் உரைநிகழ்த்தினார். தனது மேதமையை தக்கண தகும் என்பதாக இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தினார்.

பேரறிஞர் என்கிற அடைமொழி அவரைத்தேடி கண்டடைந்தது.
அண்ணாவுக்கு பகட்டு பாெருட்கள் தேவையிருக்கவில்லை, சாெகுசு விஷயங்கள் தேவைப்படவில்லை.

தம்பிகள் மீது god complex கொண்டு ஆதிக்கம் செலுத்த தேவையிருக்கவில்லை. அன்பினாலே அவர்கள் அண்ணாவை தாங்கிப்பிடித்தனர். பாசிஸத்திற்கு எதிரான போரில் சோர்வடையும் போதெல்லாம் தூக்கிப்பிடித்தனர்.

மெல்லிய சிறுசங்கிலியால் கட்டுண்டு கிடக்கும் கரிய வலிய யானையைப்போல அவரது வார்த்தைக்கு கட்டுப்பட்டு குழைந்து குழந்தையாய் நின்றனர். மானசீக ஆசனாக போற்றிப் புகழ்ந்தனர். தங்களது ஆதர்ஸமாக மதித்தனர்.

அண்ணாவுக்கு ஒட்டாத புறப்பூச்சுகளோ, வலிந்து திணிக்கப்படும் ஒவ்வாத எளிமைச் சாயங்களோ, பெருமை துதிபாடல்களோ தேவைப்படவே இல்லை, அவர் அவராகவே இருந்தார்.

அவருக்கு கட்சியினரே தம்பிகளாகவும் தனயன்களாகவும் இருந்தனர். தமிழ்நாட்டின் தலைமகனாய் மறைந்தார்.

இன்றளவும் தமிழ்நாட்டின் வீதிகளெங்கும் சிலைகளாக வியாபித்திருக்கிறார். மூலைமுடுங்கெங்கும் பேருந்து நிலையங்கள், நூலகங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் பாலங்கள், பெரும்கட்டுமானங்கள் அவரது பெயரை, கொற்றத்தை, கொள்கையை தரித்து நிற்கின்றன.

TamilNadu is not TamilNadu without Perarignar Annadurai, after all he is the son who got to name his mother
Previous Post Next Post

نموذج الاتصال