எதற்கும் துணிந்த முதல்வர் ஸ்டாலின்! - ஆதனூர் சோழன்


எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும்.

அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்பு களுக்கு கருக்களை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.

1975 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய அளவில் இயங்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூடினார்கள். இவர்களை ஒருங்கிணைத்ததில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞருக்கு முக்கிய பங்கு இருந்தது.

ஏனென்றால், 1971 பேரவைத் தேர்தலுக்கு பின், கலைஞர் தமிழ்நாட்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்திய அளவில் பாப்புலராகி இருந்தன. 1969லேயே கலைஞர் மத்திய அரசைத் தாங்கிப்பிடித்து இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருந்தார். ஆம், இந்திராவின் புதிய சோசலிஸ கொள்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜிதேசாய், சஞ்சீவரெட்டி போன்றோர் ஆதரிக்கவில்லை. எனவே காங்கிரஸ் கட்சி உடைந்தது. இந்திராவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் அவருக்கு திமுக ஆதரவளிக்கும் என்று கலைஞர் அறிவித்தார்.

காங்கிரஸின் மூத்த தலைவர்கள், இந்திராவின் திட்டங்கள் பெருமுதலாளிகளுக்கு எதிராக இருக்கும் என்பதால் எதிர்த்தனர். அவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் உணவுப்பஞ்சம், வறுமை தலைவிரித்தாடியது. விவசாயிகள் ஏழ்மையின் பிடியில் சிக்கியிருந்தனர். வறுமையே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்த இந்திரா, அதை நிறைவேற்ற வங்கிகளை நாட்டுடமை ஆக்கவும், பசுமைப் புரட்சிக்கான அறிவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் திட்டமிட்டார். இந்தத் திட்டங்களுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்திருந்தார். தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

அதேசமயம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கை முழக்கத்தையும் கலைஞர் ஓங்கி ஒலித்தார். மாநிலத்தில் அரசுத் துறைகளிலும், தலைமைச் செயலகத்திலும் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் வாரி வழங்கப்பட்டன. உயர்பதவிகளிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, பார்ப்பனர்களின் வாய்ப்புகள் பறிபோனதாக பதறினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் இருந்த பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் கவனத்தை கவர்ந்தன. மாநிலத்துக்கு தனிக்கொடியை கலைஞர் வடிவமைத்தார். தமிழ்நாடு அரசின் முற்போக்கான, புரட்சிகரமான திட்டங்கள் பார்ப்பனர்களை அதிர்ச்சியடையச் செய்தன. அதிலும் குறிப்பாக நில உச்சவரம்புச் சட்டம், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற அறிவிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் பார்ப்பனர்களின் அடிமடியில் கைவைத்தது.

அவர்கள் கலைஞர் அரசுக்கு எதிராக அணி திரண்டனர். இந்நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் இந்திரா வெற்றிபெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திரா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நடந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநாட்டில்தான் கலைஞர் கலந்துகொண்டார்.

அந்த மாநாடுதான் இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திரா பிரகடனம் செய்ய காரணமாக அமைந்தது. தனது அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்த சதி செய்வதாகக் கூறித்தான் நெருக்கடி நிலையை அறிவித்தார். அதையடுத்து அனைத்திந்திய அளவில் முக்கியமான தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தார்.

மீண்டும் அந்தக் காலகட்டத்தை நினைவூட்டும் வகையில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஆம், முற்போக்கு முகத்துடன் சர்வாதிகாரியாக முயன்ற இந்திரா என்ற அபாயத்துக்கு நிகராக இன்றைக்கும் இந்தியாவை வர்ணாச்சிரம சர்வாதிகார அபாயம் சூழ்ந்திருக்கிறது.

எமெர்ஜென்சியை எதிர்த்து பேனாவால் களமாடிய கலைஞருக்குப் பதிலாக, வர்ணாச்சிரமத்துக்கு எதிராக பெரியாரின் தடியோடு களத்தில் நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்திராவின் சர்வாதிகாரம் சோசலிஸ முகத்தை கொண்டிருந்தது. நாட்டின் முன்னேற்றத்தை முன்மொழிந்தது. எது எப்படியோ, மதசார்பற்ற நாடு என்ற முத்திரையை அழுத்தமாக பதித்தது. இந்திராவின் மகன் சஞ்சய்காந்தி செய்த சில அட்டூழிய நடவடிக்கைகளைத் தவிர, இந்திரா அன்றைக்கு அரசியல் சட்டத்தில் மதசார்பற்ற என்ற வார்த்தையைச் சேர்த்ததை மறக்க முடியாது.

எப்படிப்பார்த்தாலும் அது ஒரு மதசார்பற்ற சர்வாதிகாரம்தான். அதற்காக அதை ஏற்கமுடியாது. அதேசமயம், பாஜக உருவாக்கி வருவது மனுவாத சர்வாதிகாரம், அல்லது பார்ப்பனீய சர்வாதிகாரம் என்றுகூட சொல்லலாம். இந்திராவின் சர்வாதிகாரம் எதிர்காலத்துக்கு இந்தியாவை கொண்டு செல்வதற் காக என்று சொல்லப்பட்டது.

ஆனால், இப்போதுள்ள பார்ப்பனீய சர்வாதிகாரமோ, நம்மை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப் பார்க்கிறது. இப்போதே அதற்கான பல நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. நீங்கள் எங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டும். நாங்கள் உங்களை கண்டுகொள்ள மாட்டோம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் கார்பரேட்டுகளுடன் கைகோர்த்து பார்ப்பனீய சர்வாதிகாரம் செயல்படுகிறது.

இத்தகைய சர்வாதிகாரத்தை எதிர்த்துதான் பெரியாரின் கைத்தடியோடு களத்தில் நிற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆம், சங்கிகளை கதறடிக்கவும், களத்தில் அடித்து வீழ்த்தவும் எந்த ஆயுதம் சரியானதோ அதை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

நீட் தேர்வு எதிர்ப்பிலிருந்து, கோவில்கள் பராமரிப்பு வரை எல்லாவற்றிலும் பார்ப்பனீய சர்வாதிகாரம் எதிர்பார்க்காத வகையில் அடித்து விளையாடுகிறார் ஸ்டாலின். வடக்கே அரசியலை இந்து முஸ்லிம் என்று இரண்டு மதங்களுக்கு இடையே சுருக்கிவிட்ட நிலையில், தெற்கே, தந்தை பெரியாரின் சமூகநீதி தடியை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்.

கலைஞரும் அவருடைய காலகட்டத்தைதச் சேர்ந்த வட இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களும் மண்டல் கமிஷன் அமைக்கவும், அந்தக் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் போராடினார்கள். மண்டல் கமிஷன் அமைப்பதற்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக இருந்தது. 1989ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அன்றைய பிரதமர் வி.பி.சிங்கை வலியுறுத்தி அவருடைய பேனாவால் ஆணை பிறப்பிக்க காரணமாக இருந்தவர் கலைஞர்தான்.

இப்போது, மண்டல் பரிந்துரைகளால் பயன் பெற்ற இந்திபேசும் மாநிலங்களை இந்துத்துவா மாநிலங்களாக மாற்றும் முயற்சியில் மோடியும் யோகியும் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மீண்டும் நீட் மற்றும் இடஒதுக்கீடு விவாதத்தை அரசியலிலும், நீதிமன்றங்களிலும் தொடங்கி அதிர வைத்திருக்கிறது.

திமுகவின் வளர்ச்சி என்பது, சமூகநீதி, நலத்திட்டம், பகுத்தறிவு ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்தது. எனவேதான், 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபிறகு, எல்லா மாநிலங்களில், மதவாத அரசியல், மனுவாத அரசியல் தலைவிரித்தாடத் தொடங்கியது. சமூகநீதி அரசியல் தனது பிரகாசத்தை இழக்கத் தொடங்கியது. ஆனால், சமூகநீதி அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்ட திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலினும் பாஜகவின் மதவாத அரசியலுக்கு சவாலாக எழுந்து நிற்கின்றனர். 

ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து பார்ப்பனீய சதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்தடுத்து அறிவிக்கிறார். அவருடைய அறிவிப்புகளும் திட்டங்களும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வட மாநிலங்களின் பார்வை தமிழகத்தின் மீது திரும்பியிருக்கிறது.

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என்று சொல்லி பதவியேற்ற நாள் முதல், மக்களுடனே நிற்கும், மக்களுடனே பயணிக்கும் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். பொறுப்பேற்ற சமயத்தில் மாநிலம் முழுவதும் கொரோனா தாக்கிய நோயாளிகளுடன் மருத்துவமனைகள் முன் ஆம்புலன்ஸுகளின் அலறல் கேட்டபடியே இருந்தது. தடுப்பூசிகள் பற்றாக்குறை இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. மத்திய அரசு தடுப்பூசிக்கு விலை வைத்திருந்தது. 

ஒரே மாதத்தில் நிலைமையை தலைகீழாக மாற்றியது ஸ்டாலின் விடுத்த அறிக்கைகள். ஆம், தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தடுப்பூசி தயாரிக்க மாநில அரசுக்கு உரிமை வேண்டும். அதற்கான தொழிற்சாலைகளை மாநில அரசுக்கு தரவேண்டும். ஆக்சிஜன் தயாரிக்க எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் தயாரிக்க உத்தரவிட்டார். ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் ஆயிரக்கணக்கில் உருவாக்கப்பட்டன. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகள், மத்திய அரசை பணியவைத்தன.  அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதுதான் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது. மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு பெற்ற முதல் வெற்றி இது. அதுவரை மத்திய அரசை நோக்கி எந்த மாநில அரசும் இப்படி எதிர்க்குரல் எழுப்பியதில்லை. 

பொறுப்பேற்றதும், குடும்ப அட்டைதாரர் களுக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்துகள் அறிவிப்பு. பால் விலை குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை என்று தொடங்கிய அரசாணைகள் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்கும் பல்வேறு திட்டங்கள் என நீடித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அறநிலையத்துறையின் சொத்துக்கள் மீட்பு, அறநிலையத்துறை சார்பில் புதிய கல்லூரிகள். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அதிகமான மாணவர்களை சேர்க்கவும் முடிவு. மாஸ்டர் ஸ்ட்ரோக்காக அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமன ஆணையுடன் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க முடிவு.

இதெல்லாம் ஸ்டாலின் சொல்லிவிட்டு செய்ததில்லை. செய்துவிட்டே சொன்னார். ஆம் கலைஞரைப்போல இல்லை ஸ்டாலின். கலைஞர் ஒரு விஷயத்தை செய்யப்போகிறார் என்றால் அதற்கான அறிவிப்புகளை முதலில் வெளியிடுவார். அதனால் ஏற்படும் பயன்களை விளக்கி அறிக்கையோ கடிதமோ எழுதுவார். பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார்.

இதையடுத்து, அந்த விஷயம் குறித்து எதிர்மறைக் கருத்துகளை பரப்பவும், அதை நிறைவேற்ற விடாமல் தடுக்க நீதிமன்றம் செல்லவும் எதிராளிகளுக்கு இடம் கொடுத்துவிடுவார். ஆனால், ஸ்டாலின் அப்படி அல்ல. ஸ்டாலின் ஒரு விஷயத்தை செய்யும்போதுதான் அதுகுறித்த விவரமே தெரியவரும்.

ஆம், ஸ்டாலின் ஒரு காரியத்தை செய்து முடித்தபிறகு அது ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தப்போகிற தாக்கம் குறித்து விரிவாக எழுதினார்கள். பேசினார்கள். அவர் பேசாமல், எழுதாமல், அவரைப்பற்றி பேசவும் எழுதவும் வைப்பது ஸ்டாலின் பாணியாகிவிட்டது.

மருத்துவக்கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக் கான 27 சதவீத இடங்களை பார்ப்பனீய மனுவாதி ள் கைப்பற்றியிருந்த கொடுமையை யாருமே கேள்வி கேட்காத நிலையில், இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்குமாக, ஸ்டாலின்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி, இன்றைக்கு இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களை ஸ்டாலின் பின் அணிவகுக்க செய்திருக்கிறது.

அனைத்திந்திய அளவில் சமூகநீதி மற்றும் கூட்டாட்சிக்கான அமைப்பை உருவாக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன் அவருக்கு ஆதரவாக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுகிற திராவிட சமூகநீதி மாடல் இந்திய அளவில் காவிகளை கதறக்கதற விரட்டியடிக்கிற மாடலாக மாறியிருக்கிறது. தமிழ்நாடு அமல்படுத்தும் பல திட்டங்களை பாஜகவே பல மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதியாக வழங்குகிறது. 

காவிகளுக்கு எதிராக ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைகளை பார்த்தால், அவர் ஒரு முடிவோடு செயல்படுவதை காணமுடியும். தமிழ்நாடு அரசின் கொள்கைக்கு மாறாக, ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் அளித்த பதில் பல மாநிங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. ஆளுநருக்கு எதிராக, எதிர்க்கட்சி ஆளும் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு தயவுதாட்சண்யம் இல்லாமல் அடித்து நொறுக்கியதில்லை.

கலைஞர் எட்டடி பாய்ந்தால், ஸ்டாலின் 16 அடி பாய்கிறார். தமிழ்நட்டு மகளிருக்கான கட்டணமில்லா பயணம், உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகைத் திட்டமும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டுக்குள் முடங்கியிருந்த பெரும்பான்மை யான கிராமப்புற, நகர்ப்புற பெண்கள் ஏதேனும் ஒரு வேலைக்கோ, வியாபாரத்துக்கோ எளிதில் வெளியே செல்ல விடியல் பயணத்திட்டம் உதவியது. அத்துடன், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகைத் திட்டம், மகளிரின் பொருளாதார நிலையை மேம்படுத்தியது.

பிளஸ் டூ முடித்த மாணவிகள் திருமணத்துக்காகவும். மாணவர்கள் ஏதெனும் வேலைக்கு செல்லவும் படிப்பை நிறுத்தும் நிலை இருந்தது. அவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதாரத் தடைதான் காரணமாக இருந்தது. அதை உடைக்கும் வகையில் பிளஸ்டூ முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறு யாருமே யோசிக்காத திட்டமாக இருக்கிறது. இதன்மூலம் அந்தக் குழந்தைகளை பராமரிப்பவர்களின் சுமையை குறைத்து, அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் திட்டமாக அமைந்தது.

குடியரசு தினவிழா கொண்டாட்டட்டத்தில், தமிழ்நாடு சார்பில் விடுதலை போரில் பங்கேற்ற வேலுநாச்சியார், வஉசி ஆகியோர் இடம்பெற்ற ஊர்தியை ஒன்றிய அரசு அனுமதிக்க மறுத்தது.

ஒன்றிய அரசு அனுமதிக்க மறுத்த அதே ஊர்தி தமிழ்நாடு அரசு நடத்திய குடியரசு விழா பேரணியில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் அந்த ஊர்தியின் ஊர்வலத்தை நடத்திக் காட்டினார்..

இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் திமுக பெற்ற வெற்றியை கொண்டாடுவதோடு, சமூகநீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை இந்திய அளவில் உருவாக்கி, சமூகநீதியை ஆதரிக்கும் தலைவர்களை ஒன்றிணைத்து குரல் எழுப்பினார்.

இந்த நடவடிக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அனைத்திந்திய முகமாக உருவாக்கியது. 

இந்த இடத்தில்தான் இதுவரை எந்த அகில இந்தியத் தலைவரும் பேசாத ஒரு உண்மையை ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசினார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசினார்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய புரிதலோடு, அவர் கொந்தளித்து பேசிய பேச்சு  உலகளாவிய அளவில் ட்ரெண்ட் ஆகியது.

“மூவாயிரம் ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட அசோகராகட்டும், மவுரியர்கள் ஆகட்டும், குப்தர்கள் ஆகட்டும் எல்லா மன்னர்களுமே, பேச்சு வார்த்தை, சமாதானம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக் கிறார்கள்.

இந்தியா என்பது மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மக்களுக்கு இருக்கிற உரிமை இந்தியா வின் அனைத்து மாநில மக்களுக்கும் இருக்கிறது. 

தமிழ்நாட்டு மக்களிடம் போய் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், அவர்களோ உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னைக் கேட்டார்கள். 

நிலைமை இதுதான். நீங்கள் எவ்வளவு பெரிய கற்பனையில் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களை உங்களால் ஆள முடியாது. 

உங்களுக்கு இந்திய மொழிகள், கலாச்சாரம், வரலாறு போன்றவை புரியவில்லை. வரலாறு குறித்த சிந்தனையே இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே புரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களுடைய மாநிலம், அவர்களுடைய மொழி குறித்த ஆழமான சிந்தனை இருக்கிறது. இதேபோல்தான் கேரளாவுக்கும், ராஜஸ்தானுக்கும், மகாராஸ்டிரா வுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இருக்கிறது. 

மன்னருக்கெல்லாம் மன்னர் என்ற நினைப்பு ஆட்சியாளர்களுக்கு வந்திருக்கிறது. இது நீண்டகாலம் நீடிக்காது. உங்கள் பிரம்பு உடைத் தெறியப்படும்.

பஞ்சாப் விவசாயிகளை கொரோனா பாதிப்பிலும் ஓராண்டுக்கும் மேலாக வெட்ட வெளியில் போராட விட்டீர்கள். உயிரிழப்புகளையும் மீறி மன்னர் கையில் எடுத்த பிரம்பை உடைத்து எறிந்தார்கள்” என்று ஆவேசமாக பேசினார்.

அவருடைய பேச்சு அடுத்தடுத்து தொடர்ந்து உண்மையாகியது. 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் உள்ள 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. 

மத்தியில் பாஜக மைனாரிட்டி ஆகியது. வாக்குத் திருட்டு மூலம்தான் மோடியே ஜெயிக்க முடிந்தது. நாடு முழுவதும் சுமார் 30 தொகுதிகளில் வாக்குத் திருட்டு மூலம்தான் பாஜக வெற்றி பெற்றதாக இப்போது ஆதாரங்களுடன் ராகுல் காந்தி பேசி வருகிறார்.

அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை மோடி தலைமையிலான பாஜக திருடி இருக்கிறது. ஆனால், ராகுல் எதிர்க்கட்சித் தலைவரானார்.

இதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கெனவே சொல்லி வருகிறார். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய எந்த எல்லைக்கும் பாஜக செல்லும் என்று அவர் திமுக தொண்டர்களையும், கூட்டணிக் கட்சித் தொண்டர்களையும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.

தங்களால் தமிழ்நாட்டை ஜெயிக்க முடியாது என்று பாஜகவுக்கு தெரியும். அவர்களுடைய எல்லாத் தந்திரங்களையும் திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையாக முறியடிக்கின்றன.

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தை வாக்காளர்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றன. திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. 

அந்த வெற்றியைப் பெறுவதற்கு திமுக தனது அமைப்பு பலத்தை திட்டமிட்டு ஒருங்கிணைத் துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 68ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச்சவாடிகளிலும் தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலலும் 100 வாக்காளருக்கு ஒருவர் என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பீஹாரைப் போல, மற்ற மாநிலங்களைப் போல, தமிழ்நாட்டில் பா.ஜ.க. விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையத்தால் செயல்பட முடியாது.

முதலமைச்சர் சொன்னதைப் போல, தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்களை நீக்கவோ, போலி வாக்காளர்களை சேர்க்கவோ எளிதில் முடியாது.

ஆனாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை கட்சிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்குரிமை கொண்ட மக்களும் விழிப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

பாஜகவிடம், அதிமுக அடகுவைத்த தமிழ்நாட்டின் உரிமைகளையும், சுயமரியாதை யையும், வளத்தையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு மீட்டுள்ளது. தமிழ்நாடு இன்றைக்கு வளப்படுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அதை, எப்படியாவது மீண்டும் கைப்பற்றி, நாசம் செய்ய பாஜக தொடர்ந்து பல தந்திரங்களை மேற்கொள்கிறது. ஆனால், அந்தக் கனவு நிறைவேற தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.

https://drive.google.com/file/d/1DMQKM-Y4Fj0h9XhqhQ7W7J2qknYnzyRJ/view?usp=sharing


Previous Post Next Post

نموذج الاتصال