குறைந்த கட்டணத்தில் முதியோர் இல்லம் அமைக்குமா தி மு க அரசு - மணவாளன் மகாலிங்கம்நான் எங்கு சென்றாலும் அருகிலிருக்கும் ஏதோ ஒரு பூங்காவிற்கு சென்று பார்ப்பதுண்டு. அங்கே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வோர் இருப்பார்கள். சில வயதானவர்கள் அரசியலை தீவிரமாக அலசிக் கொண்டிருப்பார்கள். 


மற்றொரு பக்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் பழைய பென்சன் திட்டம் அல்லது ஜேக்ட்டோ ஜியோ போராட்டம் குறித்து காரசாரமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அது எந்தக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் அதற்கு எதிராகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம் நடுத்தர வயது மாமிகள் மகளின் பெருமைகளையும் மருமகளின் குற்றம் குறைகளையும் விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள்.


அதே நேரம் ஆங்காங்கே சில முதியவர்கள் தனியாக சோகமாக அமர்ந்திருப்பார்கள். அவர்களிடம் யாரும் சென்று பேசுவதுமில்லை. அவர்களும் யாரோடும் பேச விரும்புவதுமில்லை. சில நண்பர்களிடம் இது குறித்து கேட்ட போது, அவர்கள்  தனிமையில் வெகு நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுவார்களாம். அதன் பின்னணியை விசாரித்தால் அவர்கள் அனைவருமே பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுகிறார்கள்.  


பல நேரங்களில் நான் உடன் வரும் நண்பர்களிடம், தமிழக அரசு எவ்வளவோ நல்ல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்காக மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லங்களை  ஏன் உருவாக்கக் கூடாது? ஏழைகளுக்கு இலவசமாகவும்  ஓரளவு செலவு செய்யக் கூடியவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும் முதியோர் இல்லங்கள் இருந்தால் அவர்களுக்கு இந்நிலை ஏற்படாதே என்று கூறுவேன்.


பல முதியோர் காப்பகங்களின் மாத கட்டணம்  25000 முதல் 1.5 லட்சம் வரை இருக்கிறது. அதில் பல பணக்கார பிள்ளைகளின் பெற்றோர்கள்தான்  இருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு வசதி இல்லாதவர்கள் வீட்டில் அவமானங்களையும் இழி சொற்களையும் தாங்கிக் கொண்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வாடி வதங்கி சுயமரியாதை இழந்து இருக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.


இதை தமிழக அரசு கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குறுதிகளில் இதையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். திராவிட மாடல் முதல்வர் இதையும் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.  

 

#கலைஞர்_நூற்றாண்டு_ஆதரவற்றோர்_இல்லம் 


M. K. Stalin / Chief Minister of Tamil Nadu / Udhayanidhi Stalin / Anbil Mahesh Poyyamozhi / Kanimozhi Karunanidhi / சிவசங்கர் சா.சி. / DMK Youth Wing / Trb Rajaa / Govi Lenin /

திமுக இணையதள நண்பர்கள் குழு

Previous Post Next Post

نموذج الاتصال