ஒரு முழுப் பகலையும்

இந்தக் கோடை

ஒரு முழுப் பகலை

சுடச்சுட பொறித்து முன்னே வைக்கிறது

பிட்டுத் தின்னும் ஆசையில் கைவைத்துவிடாதீர்

அது ஆறுவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது!

இந்தக் கோடை 

வழிப்பறிக் கொள்ளைக்காரனைப் போல வந்தது

என்றான் அவன்

போதாதற்கு

நதி கொள்ளை போனதெப்படியென

அபிநயம் பிடித்துவேறு காட்டுகிறான்

இல்லையில்லை

பசித்த புலியைப் போல வந்ததெனச் சொல்லி

கிணறுகளையும் ஊற்றுகளையும்

கழுத்தில் கவ்வி வெயில் இழுத்துச்சென்றதை

கால்நடுங்க விவரிக்கிறான் வேறாருவன்

ஏளனச் சிரிப்புடன் மறுக்கும் முதியவர்

பொழுதுபோக்க வந்த உல்லாசக்காரன்போல்

நாளுக்கொரு ஏரி குளமென

தூண்டில்கொண்டு பிடித்துப் போனதே

சத்தியமென சாதிக்கிறார்

கண்கொண்டு பார்த்திருக்கவே

கையிலிருந்த குவளைநீரில்

பாதி ஆவியானதாக புலம்புகிறார் 

கோடை யொரு மாயாவி கட்சிக்காரர்

நான் பார்த்த கோடையோ

உவர்க்கிறது என அரற்றியபடியே

கடல்நீரை பருகிக் கொண்டிருக்கிறது 

பரிதாபமாக… 

Previous Post Next Post

نموذج الاتصال