இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 4 - ராதா மனோகர்


 ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம்

மிஸ்டர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? 

ஆம்.

கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 

100 யார்டு இருக்கும்.

அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 

27 வருட காலம்.

நீர் கந்தசாமி கோயிலுக்குள் அடிக்கடி போவீரா? 

ஆம்.

எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 

32 வருட காலமாக.

கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.

உமது தகப்பனார் அங்கே இருந்தவரா? 

மண்டைதீவில் இருந்தவர்.

உம்முடைய மனைவி பகுதியார் அடிக்கடி கோயிலுக்கு போகிறவரல்லவா?  

ஆம்.  மாமனாரும் (பெண் தந்த) ஒரு பிரசித்த நொத்தாரிசாக இருந்தவர். சங்கரப்பிள்ளை அவர் மூலமாகவே பல உறுதியை முடிப்பித்து இருக்கிறார்.

சங்கரப்பிள்ளையை உமக்கு நேரே தெரியுமா? 

ஆம்.

இந்த மாப்பாணர் குடும்பத்தில் உம்முடைய காலத்திலுள்ள வர்களை உமக்கு தெரியுமா? 

ஆம்.

சாட்சியாகிய ஸ்ரீ ராமநாதன் பின்னரும் சொல்லியது.

ஊரவர்கள் கோயில் பரிபாலன விஷயத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை. ஆறு வருஷங்களுக்கு முந்தி பிராமணர்கள் ஒருங்கு சேர்ந்து பூசை செய்யாமல் விட்டதை நானறிவேன்.

செவ்வந்தி பிள்ளை என்பவரும் இன்னொருவரும் அச்சமயத்தில் நல்லூர் கந்தசாமி கோயிலை பொதுவாக்க வேண்டும் என்று ஒரு மநுப்பத்திரம் எழுதி கொண்டு என்னையும் என்னுடைய மைத்துனனையும் கையெழுத்திடும்படி கேட்டார்கள்.

ஆனால் நாங்கள் இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை.

தியாகராச குருக்களும் செவ்வந்தி பிள்ளையும் என்னுடைய சிநேகிதர்.

கணபதிப்பிள்ளை என்பவருடைய சொல்கேட்டே செவ்வந்தி பிள்ளையென்பவர் என்னிடத்தில் என் மைத்துனனிடத்திலும் வந்தார். குறித்த பத்திரம் கையெழுத்திற்காக நல்லூர் முழுவதும் கொண்டு திரியப்பட்டது.

நான் ஊரவனாய் இருந்தாலும் கோயிலில் உரிமை உண்டென்று நான் சொல்லவில்லை.

ஸ்ரீ குலசிங்கத்தின் குறுக்கு கேள்விகளுக்கு விடை

 நான் கும்பிடுவதற்குதான் கோயிலுக்கு போவது. கோயில் அதிகாரிகள் ஆறுமுக சாமியை விற்றால் எனக்கு அது பிரியமாக இராது.

ஆனால் நான் அதற்காக வழக்கிற்கு போகமாட்டேன். ஏனென்றால் மாப்பாண முதலியார் குடும்பத்திற்கு கோயில் இருக்கின்றபொழுது எனக்கு வழக்கு வைக்க என்ன உரிமை  இருக்கிறது?

மனுபத்திரத்தில் கையெழுத்திட்டவர்கள் எல்லாம் தியாகராச சொன்னபடி செய்கிறவர்கள்.

முதல் முதல் இந்த மநுப்பத்திரத்தை எழுதியவர் நகர சங்க அங்கத்தவரில் ஒருவரான திரு வை.சி.சி.குமாரசாமியல்லவா? அவரும் குருக்கள் சொன்னபடி செய்வாரா? பரமேஸ்வர கல்லூரியில் இரண்டவது ஆசிரியராக இருந்த ஜி சரவணமுத்து. பிராக்டர் றி.ரி.சோமசுந்தரம் ஆகிய இவர்களும் குறித்த குருக்கள் சொன்னபடி செய்வார்களா?

பிராமணரை கோயில் பூசையில் இருந்து விலக்கியபின்பு தியாகராச குருக்களுடைய  வேண்டுகோளுக்கு  இயைந்து குறித்த மனுபத்திரத்திற்கு இவர்கள் எல்லோரும் கையெழுத்திட்டார்கள்.

மநுப்பத்திரத்தில் கையெழுத்திட்டவர்கள் எல்லோரும் மதிப்புள்ளவர்கள் அல்லவா? 

நல்லூரில் அவர்களுக்கு மதிப்பில்லை.

 இவ்வழக்கின் தீர்ப்பு இற்றை பிரசுரத்தை பிறிதோர் இடத்தில வெளியிடபட்டிருக்கிறது.

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - தீர்ப்பு

இன்று காலை மேற்படி கோயில் பொதுவாக உரிய தரும சொத்தாகுமென அதை பற்றி நடந்த வழக்கில் தீர்ப்பு செய்யப் பட்டது.

இதுவே அவ்வழக்கில் உள்ள பிரதான விஷயமாகும். மற்றய விஷயங்கள் பின்னர் விளங்கப்படும்  வழக்கு செலவு மாத்திரம் வழக்காளிகளுக்கு எதிராளிகள் கொடுக்கும்படி தீர்வையிற் கூறப்பட்டது.

Previous Post Next Post

نموذج الاتصال