சார்லஸ் டார்வின்- ஆதனூர் சோழன்


படிக்கிற வயதில் பாடங்களில் டார்வின் கவனம் செலுத்தியதில்லை. அவனுடைய ரேங்க் படுமோசமாக இருந்தது. அவனுடைய அப்பா டாக்டர் ராபர்ட் அவனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

1809ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள ஷ்ரோப்ஷயர் என்ற இடத்தில் சார்லஸ் ராபர்ட் டார்வின் பிறந்தான்.

டார்வினின் அப்பா ராபர்ட். அம்மா சுசன்னா.

இவர்களுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். டார்வின் ஐந்தாவது குழந்தை.

டார்வின், பெரும்பாலான நேரம் பள்ளியைவிட்டு வெளியில் போய் விதவிதமான பூச்சிகளை சேகரித்து வந்தான். 

மகன் டாக்டராக வேண்டும் என்று அப்பா விரும்பினார். இதையடுத்து, எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வகுப்பில் சேர்க்கப்பட்டான். 

எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தோல்பாவைக்கலை (Taxidermy) துறை பேராசிரியராக ஜான் சேர்ந்திருந்தார். தோலுக்குள் பஞ்சை வைத்து விலங்குகளின் மாதிரி பொம்மைகளை உருவாக்குவது எப்படி என்று அவர் சுவாரசியமாக பாடம் எடுப்பார். ஜானிடம் கற்ற தோல்பாவைக்கலை பிற்காலத்தில் டார்வினுக்கு மிகவும் உதவியாக இருந்தது. 

இரண்டாம் ஆண்டில், பல்கலைகழகத்தில் செயல்பட்ட அறிவியல் விவாதக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தான். 

1827 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த உயிரியலாளர் ராபர்ட் கிராண்ட் என்பவரின் நட்பு டார்வினுக்கு கிடைத்தது. அவர்தான் டார்வினின் மூளைக்குள் பரிணாம வளர்ச்சி குறித்த யோசனைகளை ராபர்ட் கிராண்ட் விதைத்தார். 

அந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவியல் விவாதக்குழு கூட்டத்தில் முதன்முறையாக டார்வின் சொற்பொழிவு ஆற்றினான். அது அவனுடைய சொந்த கண்டுபிடிப்பின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. கடல்வாழ் பிராணிகளின் முட்டையிலிருந்து வெளிப்படும் கூட்டுப்புழுவால் நீந்த முடியும் என்றான். அதுபோல, முதிர்ந்த ஈரிதழ் சிப்பிகளின் ஓட்டுக்குள் இருக்கும் கருப்பு புள்ளிகள், அட்டைப்பூச்சிகளின் முட்டைகள் என்றும் நிரூபித்தான். 

இது பூமியைப் புரட்டிப்போடும் கண்டுபிடிப்பு இல்லை, ஆனால் இதுதான் டார்வினின் தொடக்கம். 

இந்த சொற்பொழிவு நடந்த அடுத்த மாதத்தில் மருத்துவ கல்லூரியை விட்டு வெளியே வந்தான் டார்வின். 

மகன் கல்லூரியிலிருந்து விலகிய விஷயம் தந்தை ராபர்ட்டை கவலையடையச் செய்தது.  அவனை ஒரு கிறிஸ்துவ மதகுருவாக மாற்ற முடிவுசெய்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவக் கல்லூரியில் மதகுருமார்களுக்கான வகுப்பில் சேர்த்துவிட ஏற்பாடு செய்தார். 

டார்வினின் உறவுக்காரப் பையன் வில்லியம் டார்வின் ஃபாக்ஸ். 1829 ஆம் ஆண்டு அவனை ஜான் ஸ்டீவன்ஸ் ஹென்ஸ்லோ என்பவரிடம் அறிமுகம் செய்து வைத்தான். அவர்தான் டார்வினின் திசையைத் தீர்மானித்தவர். அந்த ஆண்டு வசந்த காலத்தில் இயற்கை அறிவியிலில் தனக்கு எதிர்காலம் இருப்பதாக டார்வின் நம்பத் தொடங்கினான். 

மதகுருமார்களுக்கான தேர்வை எழுதினான். தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேறினான். 

எங்காவது வெளியேறி கொஞ்சகாலமாவது வனங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று டார்வினுக்கு யோசனைக் கூறினார் ஹென்ஸ்லோ. 

ஹென்ஸ்லோவின் யோசனை டார்வினுக்கு பிடித்திருந்தது. கேனரி தீவுகளிலுள்ள டேனரிஃப்புக்கு செல்ல வேண்டும் என்று திட்டமிட்டான். இந்தப் பயணத்திற்கு டார்வினின் தந்தையும் ஒப்புக் கொண்டார். ஆனால், பயணம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் உடன் வருவதாக கூறியிருந்த நண்பன் இறந்தான். அத்துடன் டார்வின் விரக்தியில் மூழ்கினான். பயணத்திட்டத்தை கைவிட்டான். 

இருந்தாலும் அவனுக்கு வேறு ஒரு வாய்ப்பு வந்தது. அதையும் ஹென்ஸ்லோதான் ஏற்படுத்தித் தந்தார். 1831 ஆகஸ்ட் மாதம் டார்வினுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

“ராபர்ட் ஃபிட்ஸ்ராய் என்ற கப்பல் கேப்டனின் தலைமையில் எச்.எம்.எஸ்.பீகிள் என்ற கப்பல் தென் அமெரிக்காவின் கடற்கரையை  இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்யப் போகிறது. அதில் உங்கள் செலவில் பயணம் செய்யலாம்”

ஆனால், அவனுடைய தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவனுடைய மாமா சம்மதம் பெற்றுத் தந்தார்.

1831 டிசம்பர் 27 ஆம் தேதி இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து, பீகிள் புறப்பட்டது. இரண்டு ஆண்டுகள், தென்னமெரிக்கக் கடற்கரை மட்டும் என்றுதான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தக் கப்பல், ஐந்து ஆண்டுகள் பயணம் செய்தது. உலகத்தை ஒருமுறை சுற்றிவிட்டு புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

இந்தக் கப்பல் பயணம்தான் அன்றைய உலகின் சிந்தனையை புதிய திசையில் புரட்டிப்போட்டது.

மனிதகுல வரலாற்றை புதிதாக எழுதச் செய்தது. பைபிள் கதைகளை பைத்தியக்காரத்தனம் என்று பறைசாற்றியது.

அப்படி என்னதான் செய்துவிட்டார் டார்வின்?

“மனிதன் வேறு யாருமல்ல, மண்புழுதான்” என்று அடித்துக் கூறினார் டார்வின்.

குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்றுதானே டார்வின் கூறினார். இது என்ன புதுக்கதை?

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன், உலகை மாற்றிய டார்வினின் கடல் பயணத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

பிளைமவுத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டவுடனேயே டார்வினை கடல்நோய் தாக்கியது. புறப்பட்ட 10 வது நாள் டார்வினின் கனவுத் தீவான டேனரிஃப்பின் சாந்தா குரூஸ் துறைமுகத்தை அடைந்தது. ஆனால், கப்பல் குழுவினரை தரையிறங்க நகர நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இங்கிலாந்தில் காலரா பரவியிருந்ததே காரணம்.

சிலநாட்கள் தங்கியிருந்த அவர்கள் தென் அமெரிக்காவை நோக்கி புறப்பட்டார்கள். அடுத்து, கேப் வர்தே தீவின் சாண்டியாகோ துறைமுகத்தில் நின்றார்கள். அங்கு சில நாட்கள் டார்வின் ஆய்வு மேற்கொண்டார். எரிமலைப் பாறைக்கு அருகே கடல் சிப்பிகளும் கிடந்தன. கடல் மட்டத்திலிருந்து 45 அடி உயரத்தில் சிப்பிகள் எப்படி வந்தன என்று சிந்தித்தார். அப்போதுதான், காலங்காலமாக பூமி உருமாறி வந்திருப்பதாக சார்லஸ் லியெல் கூறியது உண்மை என்பதை உணர்ந்தார்.

பூமி பல அடுக்குகளாக படிந்திருக்கிறது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த மாற்றங்களால் ஏற்பட்டது என்று லியெல் கூறியிருந்தார். அவருடைய புத்தகங்களை டார்வின் படித்தார்.

நில அமைப்பு, உயிரினங்களின் வேறுபாடுகள், தாவரங்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஏராளமான ஆய்வுகளை டார்வின் நடத்தினார்.

1832 பிப்ரவரி கடைசியில் பிரேசிலின் சல்வடார் துறைமுகத்தில் வந்திறங்கினர். அங்கு கருப்பினத்தவர் அடிமைகளாக உழைத்துக் கொண்டிருந்தனர். அடிமைத்தனத்தை டார்வின் வெறுத்தார். அவருக்கும் கேப்டன் ஃபிட்ஸ்ராய்க்கும் இதுதொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் பலநாட்கள் பேசிக்கொள்ளவில்லை. கடைசியில் டார்வினிடம் ஃபிட்ஸ்ராய் மன்னிப்புக் கேட்டார்.

அதற்கு அடுத்து, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ துறைமுகத்தில் கப்பல் நின்றது. இங்கிலாந்திலிருந்து கடிதங்களையும் உணவுப் பொருட்களையும் ஏற்றிவந்த கப்பலும் வந்தது. ஃபேனிக்கும் பணக்கார அரசியல்வாதி ஒருவருக்கும் திருமணம் நடைபெற்ற செய்தி டார்வினுக்கு கிடைத்தது. அவர், பிரேசிலின் அடர்ந்த வனங்களுக்குள் ஆய்வு நடத்த சென்றார். 150 மைல்கள் உள்ளூர் நண்பர் ஒருவரின் உதவியோடு பயணித்தார். வனத்திற்குள் கருப்பர்களை கொடூரமாக வேலை வாங்கியதைக் நேரில் கண்டார்.

18 நாட்கள் கழித்து ரியோ திரும்பினர். ஆனால், பீகிள் கப்பல் சில சர்வேக்களை சரிபார்க்க சல்வடார் சென்றுவிட்டது. அது திரும்பி வரும்வரை கப்பல் உதவியாளர்கள் சிலருடன் கடற்கரை அருகில் சிறு குடில் அமைத்துத் தங்கினார் டார்வின்.  

அடுத்து, படகோனியாவில் உள்ள புன்ட்டா அல்டா என்ற துறைமுகத்தை அடைந்தனர். படகோனியா என்பது, இன்றைய அர்ஜென்டினாவும், சிலியும் அடங்கிய மிகப்பெரிய பிரதேசம். அங்கு, பிரமாண்டமான பாலூட்டி விலங்குகள் அழிந்து, அவற்றின் எலும்புகள் படிமங்களாக இருந்ததைக் கண்டார். மெகதீரியம் என்ற பிரமாண்டமான பாலூட்டியின் எலும்புக்கூடு, ஆர்மடில்லா என்ற ஆமை ஓடு போர்த்திய விலங்கின் படிமம்,  பிளாங்க்டன் என்ற மிகச்சிறிய தலையுடனும், நீண்ட உடலுடனும் கூடிய கடல்வாழ் பிராணி, வேறு சில தாவரங்கள், மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும் பேராசிரியர் ஹென்ஸ்லோவுக்கு அனுப்பி வைத்தார்.

பீகிள் கப்பலில் ஆங்கிலேய கலப்புடன் கூடிய ஃபியூஜியான்கள் மூவர் இருந்தனர். அவர்கள் டியெரா டெல் ஃபியூகோ என்ற பகுதியை சேர்ந்தவர்கள். இந்தப் பகுதி தென் அமெரிக்காவின் தென்கோடியில் பனி உறைந்த பிரதேசமாக இருந்தது. அங்கு கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. கப்பல் நின்றதும், அந்தப் பகுதியில் நாகரிக வளர்சி  இல்லாமல் குரங்கு மனிதர்களைப் போல வாழ்ந்த ஃபியூஜியான்கள் சுற்றி வளைத்தனர். கப்பல் குழுவினர் அவர்களுக்கு பளபளப்பான சிவப்பு நிற துணிகளைக் கொடுத்தனர். உடனே அவர்கள் சாந்தமடைந்து விலகிச் சென்றனர். கப்பலில் வந்த மூன்று ஃபியூஜியான்களின் உதவியோடு முகாம் அமைத்து ஆய்வுகளைத் தொடங்கினர். ஆனால், 9 நாட்கள் கழித்து திரும்பி முகாமுக்கு வந்தபோது, அந்த இடத்தை உள்ளூர் ஃபியூஜியான்கள் சூறையாடி இருந்தனர்.

இதையடுத்து, அவர்களுடன் வந்திருந்த மூன்று ஃபியூஜியான்களும் அந்த இடத்தை விட்டு வர மறுத்தனர். நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் தங்கள் இனத்தினருடனேயே தங்கியிருக்க விரும்பினர்.

தென் அமெரிக்காவின் மேற்கு கரையை ஆய்வு செய்ய பீகிள் புறப்பட்டது. மேற்கு கரையில் சிலி நாட்டின் வால்பரைஸோ, பெரு நாட்டின் தலைநகர் லிமா ஆகிய இடங்களில் டார்வின் ஆய்வுகளை மேற்கொண்டார். சிலி நாட்டை அடைந்தபோது, டார்வினுக்கு நிலநடுக்க அனுபவம் கிடைத்தது. அத்துடன், அப்போதுதான் நிலம் சற்று உயர்ந்ததற்கான அடையாளங்களையும் அவர் கண்டார். ஆண்டிஸ் மலையின் உச்சியில் கடற்சிப்பிகள் கிடைத்தன. கடற்கரையில் வளரும் மரங்கள் சிலவற்றின் படிமங்களும் ஆண்டிஸ் மலையின் மீது கிடைத்தன. நிலம் உயரும்போது தீவுகள் கடலில் மூழ்குவதையும் அவர் அறிந்தார். அப்படி மூழ்கும் தீவுகளைச் சுற்றி கடற்பாசிகள் படர்ந்து வளர்வதை கண்கூடாக பார்த்தார்.

தென் அமெரிக்காவின் வடக்கு மூலையில் எல்சால்வடாருக்கு சொந்தமான காலாபகோஸ் தீவுக்கூட்டம் இருக்கிறது. அந்த தீவுகள் டார்வினுக்கு புதிய படிமங்களையும், சிந்தனைகளையும் அளித்தன. சிலியில் பார்த்த மோக்கிங்பேர்ட் என்ற பறவைகள் இந்தத் தீவுகளில் வேறுவிதமாக இருந்தன. ஆமைகளின் ஓடுகள் கூட சற்று வித்தியாசமாக இருந்தன.

அங்கு ஏராளமான படிமங்களைச் சேகரித்தார். அங்கிருந்து, பசிபிக் பெருங்கடலின் குறுக்காக ஆஸ்திரேலியா நோக்கி பயணித்தனர். சிட்னியை அடைந்து, ஹோபர்ட் என்ற பூர்வகுடியினரின் தீவில் ஆய்வு நடத்தினார். இங்கு அவர் கங்காரு வடிவ எலியையும், ஆமை வடிவ பிளாடிபஸையும் பார்த்து வியந்தார். அங்கு வாழ்ந்த பூர்வ குடியினர், இங்கிலாந்து நாட்டவர் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்ததை விரும்பவில்லை என்பதை டார்வின் புரிந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவிலிருந்து கீலிங் தீவு, மொரீஷியஸ் தீவு ஆகியவற்றில் சில ஆய்வுகளை மேற்கொண்ட பீகிள் குழு தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனை அடைந்தது. அங்கு, டார்வினும், ஃபிட்ஸ்ராயும் ஜான் ஹெர்ஸ்செல்லை சந்தித்தனர்.

திரும்பவும் பிரேசில் சென்ற பீகிள் 1836 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி புறப்பட்ட இடத்திற்கே வந்து அடைந்தது. டார்வின் கடல்பயணத்தின் போதே இங்கிலாந்தில் பிரபலமடைந்திருந்தார். அவர் அனுப்பிய படிமங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. பேராசிரியர் ஹென்ஸ்லோ டார்வினை பிரபலப்படுத்தி இருந்தார்.

நாடு திரும்பிய டார்வின் தனது வீட்டுக்கு சென்றார். அங்கு தனது குடும்பத்தினரையும், உறவினர்களையும் பரபரப்பாக சந்தித்துவிட்டு, மீண்டும் கேம்பிரிட்ஜ் சென்றார். ஐந்து வருட கடல்பயணத்தில் தான் அனுப்பிய படிமங்களை ஒழுங்குபடுத்துவது மிகப்பெரிய வேலை என்பது அவருக்குத் தெரியும். 

விதவிதமான பூச்சிகள், விலங்குகளின் எலும்புப் படிமங்கள், வேட்டையாடப்பட்ட விலங்குகளின் தோல்கள், விதவிதமான தாவரங்கள் என டார்வின் அனுப்பியவை ஏராளம்.

தாவரவியல் தொடர்பான படிமங்களுக்கு ஹென்ஸ்லோ பொறுப்பேற்றார். உயிரியல் நிபுணர்களின் உதவி மிகவும் அவசியம். உதவக்கூடியவர்களை தேடி அலைந்தார்.

இதற்கு நிறைய செலவாகும். அந்த செலவை மகனுக்காக தந்தை ஏற்க தயாராக இருந்தார். தனது மகன் சொந்தச் செலவில் விஞ்ஞானியாக மிளிர்ந்திருப்பதைக் கண்டு அவர் பெருமை அடைந்தார். தனது கண்டுபிடிப்புகளை புத்தகங்களாகத் தொகுக்க டார்வின் கடுமையாக உழைத்தார். ஐந்து ஆண்டு கடல்பயணமும், அதைத் தொடர்ந்த கடுமையான உழைப்பும் டார்வினை வாட்டியது. அவர் நோய்வாய்ப்பட்டார். டாக்டர்கள் அவரை முழுமையாக ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் தனது தாய்வழி மாமா மகள் எம்மாவை சந்தித்தார். அவர் டார்வினை விட 9 மாதங்கள் மூத்தவர். ஆனால், புத்திசாலி. டார்வினைப் புரிந்துகொண்டவர். டார்வினுக்கு திருமணம் செய்வதா, வேண்டாமா? என்று குழப்பம் ஏற்பட்டது.

திருமணத்தின் பயனாக என்ன கிடைக்கும்? நிலையான ஒரு துணை கிடைக்கும். அது, முதுமைக் காலத்தில் நட்பாகத் தொடரும். கிட்டத்தட்ட ஒரு நாய்க்குட்டி கூடவே வருவதுபோல!

திருமணத்தால் கூடுதலாக சிறிதளவு சொத்து கிடைக்கும். புத்தகங்கள் வெளியிட தேவையான பணம் கிடைக்கும். பணத்தை தேடி அலையும் நேரம் மிச்சமாகும்.

கடைசியில் எம்மாவிடம் தனது காதலைச் சொன்னார் டார்வின். அத்துடன் தனது திட்டங்களையும் விளக்கினார். எம்மா ஒப்புக்கொண்டார். 

பிறகு இருவரும் காதல் கடிதங்களை எழுதிக் கொண்டனர். திருமணம் ஆனவுடன் தங்குவதற்காக லண்டனில் வீடு தேடினார் டார்வின். 

“நான் உன்னை கவனித்துக் கொள்ள அருகே வரும்வரை, நோயில் விழுந்துவிடாதே சார்லி” 

எம்மா, டார்வினை மிக ஆழமாக காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. டார்வினின் ஆய்வுக்கு எம்மா துணையாக இருந்தார்.

இந்தத் திருமணத்தால் எம்மா வகையிலும் தனது வகையிலும் டார்வினுக்கு 15 ஆயிரம் பவுண் அளவுக்கு பணம் கிடைத்தது. அதை பொறுப்பாக முதலீடு செய்தனர். எனவே, குடும்ப வாழ்க்கைச் செலவுக்காக பணம் தேடும் கவலை ஒழிந்தது. டார்வின் தனது ஆய்வு நூலை எழுதும் வேலையைத் தொடங்கினார்.

அது நீண்டுகொண்டே போனது. “உயிரினங்களின் மூலம்” அதாவது “தி ஆரிஜின் ஆஃப் ஸ்பெசீஸ்” என்ற நூலை முடிப்பதற்கு அவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

ஏராளமான தேடுதல்கள், விசாரணைகளுக்குப் பிறகு அந்தப் புத்தகம் முடிவடைந்தது.

இதற்குள், டார்வினுக்கு 10 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் இரண்டு குழந்தைகள் இறந்தன. லண்டனிலிருந்து கிராமப்புற வீடு ஒன்றுக்கு டார்வின் குடும்பம் மாறியது. டார்வின் அடிக்கடி நோய்வாய்ப்பட்டார். 

எல்லாவற்றையும் மீறி 1859 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி “ஆரிஜின் ஆஃப் ஸ்பெசீஸ்” நூல் விற்பனைக்கு வந்தது. முதலில் அச்சிட்ட 1250 புத்தகங்களும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. சில இடங்களில் கூடுதல் விலைக்கு புத்தகம் விற்கப்பட்டது.

ஒரே பொது உயிரினத்திலிருந்து, மரபணுச் சிதைவால்தான் எல்லா உயிரினங்களும் தோன்றின. குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன் என்று டார்வின் கூறினார். மனிதன் என்பவன் வேறு யாருமல்ல, மண்புழுதான் என்று அவர் சொன்னார்.

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. மற்ற இனத்து உயிரினங்களுடன் உணவுக்காகவும், வாழ்விடத்துக்காகவும் போட்டி நிலவுகிறது. சிங்கமும் புலியும் வனத்தில் வாழ்கின்றன. அவை ஒரே இரையை வேட்டையாடி உயிர் வாழ வேண்டும். இந்நிலையில் அவற்றுக்குள் போட்டி ஏற்படுவது இயல்பு.

அதுபோல, ஒரே இனத்துக்குள்ளும் உணவுக்காவும் துணைக்காகவும் போட்டி ஏற்படும். சிறந்த சிங்கமே, பெண் சிங்கங்களுடன் உறவு கொண்டு குட்டிகளை ஈனும். போட்டி என்பது ஒரு இயக்கம். தவிர, வறட்சி, குளிர், வெய்யில் போன்ற இயற்கை சூழல்களும் இயக்கம்தான். போட்டிகளையும், இயற்கைச் சூழல்களையும் சமாளித்து வாழும் திறன்மிக்க உயிர்கள் செழித்து வளரும். இந்த பண்புகள் அவற்றின் அடுத்த தலைமுறைக்கும் செல்லும். சமாளிக்க முடியாத உயிரினங்கள் அழிந்துபோகும்.

இதுதான் டார்வினின் கோட்பாடு.

இந்தப் புத்தகத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. சிலர் டார்வினை கிண்டல் செய்தார்கள். சிலர் பாராட்டினார்கள். தொடக்கத்தில் டார்வினை ஊக்குவித்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹென்ஸ்லோவும், பூகோளவியலை போதித்த ஸெட்ஜ்விக்கும் மனித இனத்தின் பரிணாமவளர்ச்சி தொடர்பான டார்வினின் கருத்தை ஏற்க மறுத்தனர்.

ஆனால், தேவாலயங்களில் ஒரு பிரிவினர், இந்தக் கோட்பாட்டை வேறுவிதமாக பார்த்தனர். உயிரிகளின் பரிணாம வளர்ச்சிக்கு இயற்கைத் தேர்வு என்பதுகூட, இறைவன் தேர்ந்தெடுத்த வடிவமைப்பு முறைதான் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

ஆனால், டார்வின் உயிரோடு இருக்கும்போதே, அவருடைய கோட்பாடுதான் சரி என்று பிற விஞ்ஞானிகள் அடுத்தடுத்து நிரூபித்தனர்.

அந்த நூலுக்குப் பிறகு டார்வின் இங்கிலாந்து அரசாங்கத்தால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். நோயுடனேயே அவர் தனது பணிகளையும் தொடர்ந்தார். 

1882 ஏப்ரல் 19 ஆம் தேதி டார்வின் மரணமடைந்தார். அவரை தங்களுடைய தேவாலயத்தில் அடக்கம் செய்யவே குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், அரசு மரியாதையுடன் அவருடைய உடலை அடக்கம் செய்ய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்பாடு செய்தது.

முக்கிய பிரமுகர்களை அடக்கம் செய்யும் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்ற கல்லறைத் தோட்டத்தில் டார்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரபல விஞ்ஞானி நியூட்டன் உள்ளிட்ட ஐந்து பேருக்குத்தான் அதுவரை அரசு மரியாதை அளிக்கப்பட்டிருந்தது. 

Previous Post Next Post

نموذج الاتصال