1000 சமணர்கள் கழுவேற்றம்

8000 சமணர்களின் கழுவேற்றம் பற்றிய தகவல்களை நம்மில் பலரும் அறிந்துள்ளோம்.ஆனால், சோழர்களின் பழைய தலைநகராக விளங்கிய பழையாறையில் சமணர்களின் பொதுப்பள்ளிக் கூடத்திலிருந்த 1000 சமணர்களை திருநாவுக்கரசர் வேண்டியபடி பல்லவ மன்னன் வேரோடு அழித்த செய்தியை அறிந்தவர்கள் மிகக் குறைவே.


1000 சமணர்கள் அழிவின் பிண்ணனி:

திருமறைக்காட்டுத்(வேதாரண்யம்) தலத்தில் ஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் இருந்தபோது, பாண்டிய நாட்டிலிருந்து ஞானசம்பந்தருக்கு அழைப்பு வந்தது. ஞானசம்பந்தர் பாண்டிய நாடு செல்ல முடிவு செய்தார்,நாவுக்கரசுப் பெருமான் தானும் அவருடன் வருவதாக கூறினார். ஆனால் ஞானசம்பந்தர், அவ்வாறு திருநாவுக்கரசர் பாண்டிய நாட்டிற்கு அவருடன் வருவதைத் தவிர்த்து, அவரை சோழ நாட்டில் இருக்குமாறு வேண்டினார். அதற்கு இணங்கிய நாவுக்கரசர், மறைக்காடு தலத்தை விட்டு நீங்கி, நாகைக் காரோணம் வீழிமிழலை, ஆவடுதுறை தலங்கள் வழியாக பழையாறை வந்து சேர்ந்தார். பழையாறை நகரின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த கோயில் வடதளி என்றும், மேற்கு பகுதியில் அமைந்திருந்த கோயில் மேற்றளி என்றும் அழைக்கப்படுகின்றது.

பழையாறை வடதளி என்ற தலத்திற்கு அப்பர் பிரான் சென்றபோது, அந்த பகுதியில் அமைந்திருந்த சிவபிரானின் கோயிலை மறைத்து, வஞ்சனையாக தங்களது பள்ளியாக சமணர்கள் மாற்றிக் கொண்டதை அங்கிருந்தோர் சொல்லக் கேட்டறிந்தார். கண்ணுக்குத் தெரிந்த திருக்கோயில் விமானத்தை, சிவபிரானாகவே நினைத்து வணங்கிய அப்பர் பிரான், சிவபிரானின் சன்னதியை நேரில் கண்டு வணங்க முடியாத நிலையினைக் கண்டு மனம் புழுங்கினார்.


திருக்கோயில் விமானத்தின் அருகே சென்று, அப்பர் பிரான், சிவபெருமானை மனதினில் நினைத்து, சமணர்களின் வஞ்சனையை நீக்கி அனைவருக்கு காட்சி தருமாறும், சமணர்களின் வல்லமையை அழிக்குமாறும் இறைவனிடம் வேண்டினார். மேலும் மறைக்கப்பட்டு இருந்த சிவபிரானை நேரில் கண்டாலன்றி, அந்த இடத்தை விட்டு அகலமாட்டேன் என்ற முடிவுக்கு வந்த அப்பர் பிரான், தனது எண்ணம் ஈடேறும் வரை உணவு ஏதும் உட்கொள்ளமாட்டேன் என்று உண்ணாவிரத நோன்பினையும் கடைப்பிடித்தார்.


அன்றிரவில் சிவபிரான் பல்லவ மன்னனின் கனவில் தோன்றி, சமணர்கள் தனது சன்னதியை மறைத்த நிலையினையும், தனது சன்னதியை நேரில் காண்பதற்காக அப்பர் பிரான் உண்ணாவிரதம் மேற்கொண்ட செய்தியையும், தெரிவித்தார். மேலும் கோயில் இருந்த இடத்தினை அடையாளமும் காட்டி, சமணர்களை அங்கிருந்து அகலுமாறு செய்ய வேண்டும் என்றும் மன்னனைப் பணித்தார். காலையில் எழுந்த மன்னன், தான் கண்ட கனவினை நினைத்து மிகவும் வியப்புற்று, தனது அமைச்சர்களுக்குச் சொல்லி, அவர்களுடன் சிவபெருமான் உரைத்த அடையாளங்களைக் கொண்டு பழையாறை வடதளி கோயிலை அடைந்தான். அங்கிருந்த நாவுக்கரசர் பெருமானை வணங்கிய மன்னன், அங்கிருந்த ஆயிரம் சமணர்களை அழித்தான் என்று திருநாவுக்கரசர் தேவாரமும்,சேக்கிழார் பெரியபுராணமும் கூறுகின்றன. 


இதையே, யானையால் மிதிக்கப்படும் சிறிய புதர் அடையாளம் தெரியாதவாறு அழிக்கப்படுவது போன்று, பழையாறையில் இருந்த சமணப்பள்ளியில் வசித்து வந்த ஆயிரம் சமணர்களும், மன்னனின் பணியாளர்களால் அழிக்கப்பட்டனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். பின்னர் சமணர்கள் மறைத்திருந்த விமானத்தினை அனைவரும் காணுமாறுச் செய்த மன்னன், சிவபெருமானை வழிபாடு செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். பின்னர் அப்பர் பிரானை மன்னன் சென்று வணங்கவே, அப்பர் பிரானும் மன்னனுடன் கோயிலுள் புகுந்து இறைவனைத் தொழுதுப் போற்றினார். 


வேதபாடசாலையோ,திண்ணைப்பள்ளியோ,

குருகுலக் கல்வியோ அல்லாமல் பொதுக்கல்வி முறையில் நடந்து வந்த சமணப் பள்ளியில் ஆயிரம் சமணர்களை தூரறுருத்த(வேரோடு அழித்தல்) வன்மம் மிகுந்த செயலினை திருநாவுக்கரசரின் தேவரம்- ஐந்தாம் திருமுறையும் சேக்கிழாரின் பெரியபுராணமும்(பன்னிரண்டாம் திருமுறை) பதிவு செய்கிறது.அவற்றைக் கீழே தருகிறேன்.


சேக்கிழார் பெரியபுராணம் (பன்னிரண்டாம் திருமுறை) -21 திருநாவுக்கரசர் புராணம் -உரை:முனைவர் கு.சுந்தர மூர்த்தி அவர்கள்


பாடல் எண் : 294

செய்ய சடையார் பழையாறை 

எய்த அதனில் செல்பொழுதின் 

மையல் அமணர் மறைத்தவட

தளியின் மன்னுஞ் சிவனாரைக்

கைகள் கூப்பித் தொழுதருளக்

கண்ட வாற்றால் அமணர்கள்தம்

பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்

பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.

பொழிப்புரை :

அங்ஙனம் செல்பவரான நாவரசர், சிவந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தருளிய பழையாறை என் னும் பதியைச் சேரச் செல்லும் பொழுது, மயக்கமுடைய சமணர்கள் மறைத்த பழையாறை வடதளிக் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவ பெருமானை, நாவரசர் கைகூப்பித் தொழுத அளவில், திருவருட் குறிப்பால் திருவுள்ளத்துள் உணர்ந்த உணர்வுமீதூர, அது சமணர்கள் வஞ்சனையால் செய்த விமானம் என்று அங்குள்ளவரிடம் கேட்டுப், பொறுக்க இயலாத திருவுள்ளத்தில் புழுக்கம் அடைந்து.


பாடல் எண் : 295

அந்த விமானந் தனக்கருகா

ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்

கந்த மலருங் கடிக்கொன்றை

முடியார் செய்ய கழலுன்னி

மந்த அமணர் வஞ்சனையால்

மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்

பந்தங் கொண்ட குண்டர்திறம்

பாற்றும் என்று பணிந்திருப்பார்.

பொழிப்புரை :

அங்ஙனம் அறிந்த அளவில், பொய்மை கொண்ட விமானத்தின் அண்மையில், ஆங்கு ஓரிடத்தின் அருகாகச் சேர்ந்து, நறுமணமுடைய இதழ்கள் விரிந்த கொன்றை மாலையைச் சூடிய முடியையுடைய சிவபெருமானின் திருவடிவை நினைந்து, `அறிவற்ற சமணர்கள் வஞ்சனையால் மறைத்த வஞ்சகத்தை ஒழித்து, உலகியல் வழிக்கட்டுண்டு கிடக்கும் அச்சமணர்களின் திறத்தை அழிப்பீராக!` என வேண்டி வணங்கியிருப்பவர்,


பாடல் எண் : 296

வண்ணங் கண்டு நான்உம்மை

வணங்கி யன்றிப் போகேனென்

றெண்ண முடிக்கும் வாகீசர்

இருந்தார் அமுது செய்யாதே

அண்ண லாரும் அதுவுணர்ந்தங்

கரசு தம்மைப் பணிவதற்குத்

திண்ண மாக மன்னனுக்குக்

கனவில் அருளிச் செய்கின்றார்.

பொழிப்புரை :

`நான் உம் திருமேனியினைக் கண்ணால் கண்டால் அன்றி அப்பால் செல்ல மாட்டேன்` என்று முறையிட்டு, உறுதி கொண்டு, தம் நினைவை எண்ணியபடி முடிக்கும் நாவரசர் உணவு கொள்ளாமல் இருப்ப, இறைவரும் அதனைத் தம் திருவுள்ளத்துள் கொண்டு, அத்திருப்பதியில் நாவரசர் வணங்குவ தற்காக, மன்னனுக்குக் கனவில் தோன்றி உறுதிபெற அருள் செய் கின்றவராய்,


பாடல் எண் : 297

அறிவில் அமணர் நமைமறைப்ப

இருந்தோம் என்றங் கடையாளக்

குறிகள் அறியச் செய்தருளி

நம்மை அரசு கும்பிடுவான்

நெறியில் அமணர் தமையழித்து

நீக்கிப் போக்கென் றருள்புரியச்

செறிவில் அறிவுற் றெழுந்தவனுஞ்

செங்கை தலைமேற் குவித்திறைஞ்சி.

பொழிப்புரை :

‘அறிவற்ற சமணர்கள் நம் கோயிலை மறைக்க நாம் அதனுள்ளே இருந்தோம்` என்றருளி, அவ்விடத்தைக் காணக் கூடிய அடையாளக் குறிகளையும் அருள் செய்து, `நம்மை நாவரசு வணங்குவதற்காக, நன்னெறியில் ஒழுகாத சமணர்களை அழித்து, அங்கிருந்து அகலச் செய்வாயாக!` என்று அருள் செய்தார். துயில் நீங்கி எழுந்த அரசனும் அதனை உளங்கொண்ட அளவில் தன் செங் கையைத் தலைமீது கூப்பி வணங்கிப் பின்.


பாடல் எண் : 298

கண்ட வியப்பு மந்திரிகட்

கியம்பிக் கூடக் கடிதெய்தி

அண்டர் பெருமான் அருள்செய்த

அடையா ளத்தின் வழிகண்டு

குண்டர் செய்த வஞ்சனையைக்

குறித்து வேந்தன் குலவுபெருந்

தொண்டர் தம்மை அடிவணங்கித்

தொக்க அமணர் தூர்அறுத்தான்.

பொழிப்புரை :

தான் கனவில் கண்ட வியப்பான காட்சியை அமைச்சர்களுக்குச் சொல்லி, அவர்களுடன் தானும் விரைவாய் அவ் விடத்திற்குச் சென்றவன், கனவில் பெருமான் அருளிய அடையாளங்களின் வழியே சென்று, அங்குச் சிவ வடிவத்தைப் பார்த்தான்; சமண ராகிய கீழானவர்கள் செய்த வஞ்சனையை வெளிப்படச் செய்த நாவரசரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்த சமணர்களான தூருகளை அழித்தான்.


பாடல் எண் : 299

ஆனை இனத்தில் துகைப்புண்ட

அமணா யிரமும் மாய்ந்ததற்பின்

மேன்மை அரசன் ஈசர்க்கு

விமான மாக்கி விளக்கியபின்

ஆன வழிபாட் டர்ச்சனைக்கு

நிபந்தம் எல்லாம் அமைத்திறைஞ்ச

ஞான அரசும் புக்கிறைஞ்சி

நாதர் முன்பு போற்றுவார்.

பொழிப்புரை :

யானையினால் அழிக்கப்பட்ட சிறிய புதர்போல் மன்னனின் பணியாளர்களினால் அழிக்கப்பட்ட அச்சமணர் பள்ளியில் தங்கிய ஆயிரம் சமணர்களும் அழிந்த பின்பு, மன்னன் சிவபெருமானுக்கு உரிய விமானத்தையும் ஆக்கி உரியவாறு விளங்கச் செய்து, சிவாகமத்தில் விதித்த முறைப்படி வழிபடுதற்கான பூசனைக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் அறக்கட்டளைகளாக வகுத்து அமைத்துப் பின் நாவரசரை வணங்கினான். ஞான வள்ளலான நாவரசரும் அக் கோயிலுக்குள் சென்று இறைவரின் திருமுன்பு நின்று போற்றுவாராய்,


பாடல் எண் : 300

தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்

சாதி அமணர் மறைத்தாலும்

நிலையி லாதார் நிலைமையினால்

மறைக்க ஒண்ணு மோஎன்னும்

விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்

விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே

இலைகொள் சூலப் படையார்சேர்

இடங்கள் பிறவுந் தொழஅணைவார்.

பொழிப்புரை :

`தம் தலை மயிரைப் பறித்தலும், நின்று உண்ணும் இயல்பும் கொண்ட கூட்டத்தவரான சமணர்கள் மறைத்தாலும், மெய்ம்மையுணராத அவர்கள் தம் சிற்றறிவினால் மறைத்து வைத்திட முடியுமோ!` என்னும் கருத்துக் கொண்ட விலை மதிப்பதற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகையைப் பாடியருளினார். பின்பு அங்குத் தங்கியிருந்த நாவரசரும் மூவிலை வடிவான சூலப்படை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் வணங்கச் செல்லலானார்.


பழையாறையில் சமணர்களை அழித்த விடயம் பற்றிய தேவாரப் பால்களைக் கீழே தருகிறேன்,


ஐந்தாம் திருமுறை - திருநாவுக்கரசர் தேவாரம் -குறிப்புரை : சைவ சித்தாந்தக் கலைச்செல்வர் க.வச்சிரவேல் முதலியார்-பொழிப்புரை: வித்துவான் வி.சா.குருசாமி தேசிகர்


058 திருப்பழையாறைவடதளி


பாடல் எண் : 1

தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்

நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே

அலையி னார்பொழி லாறை வடதளி

நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே.


பொழிப்புரை :

தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக .


பாடல் எண் : 2

மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை

தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்

காக்கி னானணி யாறை வடதளி

நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே.

பொழிப்புரை :

மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி , அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை .


பாடல் எண் : 3

குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்

மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை

அண்ட ரைப்பழை யாறை வடதளிக்

கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.

பொழிப்புரை :

குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன .


பாடல் எண் : 4

முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்

கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்

படைய ரைப்பழை யாறை வடதளி

உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே.

பொழிப்புரை :

முடைநாற்றம் உடையோரும் , தலையை மழித்த மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது .


பாடல் எண் : 5

ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்

கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை

அள்ள லம்புன லாறை வடதளி

வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.

பொழிப்புரை :

ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் .


பாடல் எண் : 6

நீதி யைக்கெட நின்றம ணேயுணும்

சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்

ஆதி யைப்பழை யாறை வடதளிச்

சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.

பொழிப்புரை :

முறைமை கெட நின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் .


பாடல் எண் : 7

திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்

பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை

அருட்டி றத்தணி யாறை வடதளித்

தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.

பொழிப்புரை :

திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் .


பாடல் எண் : 8

ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண்

வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை

பாத னைப்பழை யாறை வடதளி

நாத னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் .


பாடல் எண் : 9

வாயி ருந்தமி ழேபடித் தாளுறா

ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான்

பாயி ரும்புன லாறை வடதளி

மேய வன்னென வல்வினை வீடுமே.

பொழிப்புரை :

மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும் , பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு மளவிலேயே வல்வினைகள் கெடும் .


பாடல் எண் : 10

செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்

எருத்தி றவிர லாலிறை யூன்றிய

அருத்த னைப்பழை யாறை வடதளித்

திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.

பொழிப்புரை :

போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் , பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள் வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும்.

Previous Post Next Post

نموذج الاتصال