இலங்கை நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 3 - ராதா மனோகர்


இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? 

தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர். பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.

அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா? 

இல்லை.

அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? 

இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்.

அதெப்படி உங்களுக்கு வந்தது? 

என் தாயாரின் சீதனம். 

அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? 

மூன்று, நாங்கள் இருபத்தொன்று. தம்பையா குருக்களுக்கு உரியதொன்று. மேற்கில் உள்ளதொன்று. மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது. 50 பரப்பு கொண்டது.

நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? 

இல்லை.

பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? 

குருக்கள் வளவு.

தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? 

முடியாது.

அம்பலவாணர் சுப்பிரமணியம் என்று சொல்வது யாரை? 

ஒரு மனுஷனுடைய பெயராக இருக்கவேண்டும்.

வண்ணை வைத்தீஸ்வரர் கோயில் ஆதீனகர்த்தா ஸ்ரீ பொன்னுசாமி செட்டியார் சொன்ன சாட்சியம்.

மிஸ்டர் ஹெயில் : உங்களுடைய கோயிலும் ஒரு பிரசித்த கோயிலா? 

ஸ்ரீ பொன்னுசாமி செட்டியார் : ஆம்.

எவ்வளவு காலமாக அந்த கோயில் ஆதீனகர்த்தராக இருக்கிறீர்? 

18 வருஷ காலமாக. 

அந்த கோயில் உங்களுடைய சொந்தமா அல்லது பொதுவா? 

எங்கள் சொந்த கோயில்.

நீதிபதி : உங்கள் குடும்பத்தாருக்கு உரிய கோயிலா? 

ஆம்.

அந்த கோயில் கட்டப்பட்டு எத்தனை வருஷம் இருக்கும்? 

நூறு நூற்றைம்பது வருஷமிருக்கும்.

யாரால் கட்டப்பட்டது? 

வைத்திலிங்கம் செட்டியாரால்.

உங்கள் கோயில் உலக பிரசித்தம் என்றீரே அங்கே அதிக சனம் வருவதுண்டா? 

கொஞ்சம் வருவதுண்டு.

பெருந்தொகை சனம் வருவதில்லையா? 

இல்லை.

மற்றய கோயில்களோடு விசேஷமாக நல்லூர் கந்தசாமி கோயிலோடு ஒத்து பார்க்கின்ற பொழுது எந்த கோயிலுக்கு அதிக சனம் செல்வார்கள்? 

நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு. கோயிலுக்கு சனங்கள் அதிகம் வருதல் ஊரவர்கள் அந்த கோயிலில் பாராட்டும் பக்தியில் தங்கியிருக்கிறது.

நீதிபதி : இந்த நீதிஸ்தலத்திற்கு உங்கள் கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 

அரைமைல் தூரமிருக்கும்.

திருவிழா காலத்தில் உங்கள் கோயிலுக்கு அதிகமான சனம் வருவதுண்டா? 

200 தொடக்கம் 400 வரையில் வருவார்கள்.

இதுவரையில் எப்போதாவது ஊரவர்கள் உங்கள் கோயிற் பரிபாலன விஷயத்தில் தலையிட்டதுண்டா? 

இல்லை.

கும்பிட வருபவர்கள் மற்ற கோயில்களில் நடந்து கொள்ளும் விதமாகத்தான் உங்கள் கோயிலிலும் நடந்து கொள்வார்களா? 

ஆம். மற்ற கோயில்கள் போலவே காணிக்கைகள் கொண்டு வருவார்கள். நேர்த்தி கடனை முடித்து செல்வார்கள்.

ஊரவர்கள் அபிஷேகம் முதலியன உங்கள் கோயிலில் செய்விப்பதுண்டா? 

ஆம்.

பழ சோமசெட்டி கடையை நீர் அறிவீரா? 

ஆம்.

அவர்கள் உங்கள் கோயிலுக்கு அதிகமாக கொடுத்ததுண்டா? 

ஒரு வாகனஞ்செய்வித்து கொடுத்தார்.

எவ்வளவு காலத்திற்கு முந்தி? 

6 வருஷத்திற்கு முந்தி.

அது ஒரு விலை பெற்ற பொருளா? 

200 ரூபா வரையிலிருக்கும்.

கோயிலுக்கென்று அவர்களின் உபயமாகதான் கொடுக்கப் பட்டதா? 

ஆம். ஒரு நேர்த்திக்கடனுக்காக கொடுக்கப்பட்டது.

நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி அறிவீரா? 

ஆம்.

கந்தசாமி கோயிலதிகாரிகளுக்குக்கும் உங்களுக்கும் இடை யில் கொடுக்கல் வாங்குதல் முதலியன உண்டல்லவா? 

ஆம்.

1921 ஆம் ஆண்டு வண்ணார்பண்ணை வைத்திலிங்கம் செட்டியார், கோபால செட்டியாருக்கு நல்லூர் கந்தசாமி கோயில் அதிகாரியாகவிருந்த மாப்பாண முதலி எழுதி கொடுத்த உடன்படிக்கை ஒன்றை நீர் இங்கே காட்டுகிறீரல்லவா? 

ஆம்.

கோபால செட்டியார் உங்கள் மூதாதையில் ஒருவரா? 

ஆம்.

அந்த காலத்தில் உங்கள் கோயில் ஆதீனகர்த்தராக இருந்தவர் கோபால செட்டியாரா? 

ஆம்.

ஒரு காணியின் பொருட்டு மாப்பாணரும் அவரது சந்ததியினரும் உங்கள் சந்ததியருக்காக கோயிலில் ஏதோ விசேஷம் செய்யவேண்டும் என்பதுதானே உடன்படிக்கை? 

ஆம். எங்கள் மூதாதையர்கள் மாப்பாண முதலியாருக்கு ஒரு காணியை எழுதி கொடுத்து வருஷந்தோறும் எங்கள் உபயமாக திருவிழா செய்யவேண்டும் என பொருந்தி கொண்டார்கள்.

முந்தி எப்போதாயினும் கந்தசாமி கோயிலை கட்டுப்படுத்து வதற்கான முயற்சிகள் கூட்டங்கள் என்று இவைகளை பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கிரீரா? எழுத்தில் உம்மிடம் ஏதும் அப்படிப்பட்டதுண்டா? 

இல்லை நான் ஒருபோதும் அப்படி கேள்விப்பட்டதில்லை.

ஸ்ரீ குலசிங்கத்தின் குறுக்கு கேள்விகளும் அவற்றிக்கு விடையும்

குறித்த உறுதியிலே மாப்பாண முதலியார் தம்மை நல்லூர் கந்தசாமி கோயில் மணியக்காரர் என்றல்லவா சொல்லுகிறார்? 

ஆம்.

1876 ஆம் ஆண்டு உமக்கு என்ன வயசு ? 

நான் அப்பொழுது பிறக்கவுமில்லை.

ஆறுமுக நாவலரை உமக்கு தெரியுமா? 

தெரியாது.

சிவன் கோயிலிலே 1873 ஆம் ஆண்டு முதலாகவுள்ள சாதனங்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா? 

கோயில் தோற்றிய நாள் தொடக்கம் உள்ள சாதனங்க்ளும் உண்டு.

ஆறுமுக நாவலரை சபைத்தலைவராக கொண்டு அங்கே நடத்தப்பட்ட கூட்டத்தின் வரலாறு உம்மிடம் உண்டா? 

சில விஞ்ஞாபனங்களும் குறிப்புக்களும் பிறவும் உண்டு.

உம்முடைய கோயிலை பொதுக்கோயிலாக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் உமக்கு அது மாணவருத்தமாக இருக்குமல்லவா? 

எனக்கு மனவருத்தம் இல்லை. ஏனென்றால் எங்களுடைய கோயிலையப்படி பொதுவாக்க முடியாது.

ஆனால் சிலகாலம் உங்களுடைய கோயிலை நாட்டுக் கோட்டை செட்டிகள்தான் நடத்தினார்களாமே? அவர்களுக்கு நாங்கள்தான் தத்துவம் கொடுத்தது.

ஊரவர்கள் திருப்தி படாமையானால்தானே அப்படி கொடுத்தீர்கள்? 

ஊரவர்களுக்கும் கோயிலுக்கும் கோயிலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

அப்படியானால் ஏன் செட்டி பிள்ளைகளிடம் கொடுத்தீர்கள்? 

என் தகப்பனார் அக்காலத்தில் இந்தியாவில் இருந்தார் நானும் அங்கு விவாகம் செய்திருந்தேன். இங்கு வந்திருக்க முடியவில்லை அதனால் அவர்கட்கு கொஞ்ச காலம் பார்க்கட்டும் என்று கொடுத்திருந்தோம்.

ஊரவர்கள் ஒரு காலத்திலும் உங்கள் கோயிலுரிமை விஷயத்தில் தலையிடவில்லை என்று சொல்கிறீரா? 

ஆம்.

நீங்கள் கோயிலதிகாரியாவதற்கு நியாயஸ்தலம் மூலமாக ஏதும் தீர்வை உண்டா? 

இல்லை உள்ளுக்குள்ளேயே ஒழுங்கு செய்து கொள்வது.

ஊரவர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பும் இல்லையா? 

இல்லை.

எந்த கோயிலுக்கு சனங்கள் அதிகமாக போவது? கந்தசாமி கோயிலுக்கு எதற்காக நீங்கள் கந்தசாமி கோயிலுக்கு நிலம் கொடுத்தீர்கள்? 

கந்தசாமி கோயிலிலே உற்சவம் செய்விக்க வேண்டும் என்பது எங்கள் முன்னோர்களுடைய பிரியம் அதனால் கொடுத்தார்கள்.

இராமசாமி செட்டியாரல்லவா உங்கள் கோயிலை செட்டி பிள்ளைகள் வசம் ஒப்புவித்து? 

இல்லை என்னுடைய தகப்பனாரும் சிறிய தகப்பனார்களும்.

சிவன் கோயில் உற்சவங்கள் கோயில் பொறுப்பிலேதானா நடத்தப்படுவன? 

ஆம்.

நல்லூர் கந்தசாமி கோயிலில் அப்படி நடத்தப்படுவதில்லை? 

அவைகளை பற்றி எனக்கு தெரியாது நான் கும்பிடுவதற்காக இடையிடையே அங்கு போவது வழக்கம்.

சிவன் கோயிலுக்கு உரிய ஆதனங்கள் உட்பட உங்கள் முன்னோரால் கொடுக்கப்பட்டனவல்ல? 

முழுவதும் அவர்களாலேயே கொடுக்கப்பட்டன.

Previous Post Next Post

نموذج الاتصال