அலெக்ஸாண்டரின் நிஜ முகம்
ஜனவரி 24, 1931
மகா அலெக்சாண்டரை பற்றிக் கூறுவதாக கடந்த கடிதத்திலும் அதற்கு முன்பும் கூறியிருக்கிறேன். கிரேக்க நாட்டைச் சேர்ந்தவன் என்று கூறியதாக நினைவு. ஆனால், அது சரியல்ல. அவன் கிரீஸுக்கு வடக்கே உள்ள மாசிடோனியா என்ற நாட்டைச் சேர்ந்தவன்.
மாசிடோனியர்கள் கிரேக்கர்களைப் போல இருந்ததால் அவர்களை கிரேக்கர்களுக்கு சகோதரர்கள் எனலாம். அலெக்சாண்ட ரின் தந்தை பிலிப் மாசிடோனியாவின் அரசனாக இருந்தான். அலெக்சாண்டர் உலகை வென்று மகா அலெக்ஸாண்டர் என்று அழைக்கப்படுகிறான். ஆனால் அவனுடைய புகழுக்கு அவன் தந்தை போட்ட அடித்தளமே காரணம்.
அலெக்சாண்டர் உண்மையில் புகழுக்குரிய பெரியவனா? நான் அவனைப் பெரியவனாகக் கருதுவதில்லை. ஆனால் குறுகிய காலத்தில் இரண்டு கண்டங்களில் தன் பெயரை நிலைநாட்டினான். உலகத்தை வென்றவர்களில் முதலானவன் என்கிறார்கள். மத்திய ஆசியாவில் அவனை இன்றும் மறவாமல் ‘சிகந்தர்’ என்று அழைக்கிறார்கள்.
நிஜத்தில் அவன் யாரோ... சரித்திரத்தில் அவன் பெயர் குறிக்கப்பட்டு விட்டது. அவன் பெயரில் பல நகரங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது எகிப்திலுள்ள அலெக்சாண்டிரியா நகரம்.
அலெக்சாண்டர் இருபது வயதில் அரசன் ஆனான். அவன் தன் தந்தையின் சிறந்த சேனையைத் திரட்டி பழைய விரோதியான பாரசீகத்தை ஜெயிக்க விரும்பினான். கிரேக்கர்கள் பிலிப்பையோ அலெக்சாண்டரையோ விரும்பாவிட்டாலும், அவர்களுக்கு அஞ்சி அடங்கினார்கள். பாரசீகத்தைத் தாக்கப் போகும் படைக்கு தலைவனாக பிலிப்பையும் அவன் மகன் அலெக்ஸாண்டரையும் ஏற்றார்கள்.
தீப்ஸ் என்ற கிரேக்க நகரம் அலெக்சாண்டரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தது. அவன் அதை கொடூரமாக தாக்கி அழித்தான். கட்டடங்களை நாசம் செய்தான். பலரைக் கொன்றான். பல்லாயிரக் கணக்கான மக்களை அடிமைகளாக விற்றுவிட்டான். இத்தகைய கொடிய செயல்களால் கிரீஸை நடுங்கவைத்தான். இவை போன்ற செயல்கள் அவனை நாம் வெறுக்கும்படியே செய்கின்றன.
ஸெர்க்ஸிஸ் என்பவனுக்குப் மூன்றாவது டேரியஸ் என்ற பாரசீக அரசனை அலெக்சாண்டர் போரில் ஜெயித்தான். அதையடுத்து பாரசீக மன்னனின் ஆளுகையில் இருந்த எகிப்தும் அலெக்சாண்டர் வசமாயிற்று. பிறகு மீண்டும் பாரசீகத்தின்மீது போர்தொடுத்து டேரியஸை இரண்டாம் முறை தோற்கடித்தான். டேரியஸின் பெரிய அரண்மனையை நாசம் செய்தான்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரசீகத்தில் பிர்தாஸி என்கிற கவி ஒருவர் வாழ்ந்தார். அலெக்சாண்டருக்கும் டேரியஸுக்கும் நடந்த போர்களைக் கற்பனை நயத்துடன் அவர் வருணித்திருக்கிறார். தோற்ற பிறகு டேரியஸ் இந்தியாவிடம் உதவி கோரினான். அதற்காக வடமேற்கு இந்தியாவில் அரசாண்ட போரஸ் என்ற புருஷோத்தமனுக்கு ‘வாயு வேகத்தில் செல்லக்கூடிய ஓர் ஒட்டகத்தை அனுப்பினான்’ என்று கவிஞர் சொல்லியிருக்கிறார். ஆனால் புருஷோத்தமன் உதவி செய்ய முடியவில்லை. அந்த புருஷோத்தமனையே அலெஸ்ஸாண்டர் தாக்கும் காலம் வந்தது.
ஷாநாமா என்ற இந்த நூலில் பாரசீக மன்னனும் அவனுடைய பிரபுக்களும் இந்தியப் பட்டாக்கத்திகளையும் குத்துவாள்களையும் உபயோ கித்ததாகப் பல குறிப்புகள் உள்ளன. அலெக்சாண்டர் காலத்திலேயே இந்தியாவில் நல்ல எஃகு கத்திகள் தயார் ஆனது தெரிகிறது.
பாரசீகத்திலிருந்து தொடர்ந்து பயணித்த காபூல், சாமர்கந்த் ஆகிய நகரங்கள் வழியே சிந்து நதியின் கரையை அடைந்தான். அங்கேதான் தன்னை எதிர்த்த முதல் இந்திய அரசனைக் கண்டான். போரஸ் என்ற அந்த மன்னன் தீரத்துடன் போர் புரிந்தான் என்றும், அலெக்சாண்டர் அவனது துணிவையும் வீரத்தையும் மெச்சி அவனைப் போரில் வென்ற பிறகும் அவன் நாட்டை அவனுக்கே கொடுத்துவிட்டான். ஆனால் போரஸ் கிரேக்கர்களுக்கு அடங்கிய ‘கவர்னரா’க இருந்தான்.
அலெக்சாண்டர் இந்தியாவின் மத்திய பகுதிகள் மீது படையெடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். அவன் வெற்றி தொடர்ந்திருக்குமா? இந்திய சேனைகள் இவனை வென்றிருக்குமா? எல்லைப் புறத்தில் போரஸ் என்ற ஒரு சிறிய அரசனை வெல்வதற்குள் திணறிய இவனை மத்திய இந்தியாவில் இருந்த பெரிய அரசர்கள் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
அவனுடைய போர்வீரர்கள் பல ஆண்டுகளாக அலைந்து களைத்துப் போயிருந்தார்கள். அத்துடன் ஒருவேளை இந்தியர்களின் போர்த் திறமையைக் கண்டு இவர்களிடம் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்றும் அவர்கள் அஞ்சியிருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், தனது வீரர்கள் சொன்னதை ஒப்புக்கொள்வதைத் தவிர அலெக்ஸாண்டருக்கு வேறு வழியில்லை. திரும்பிப் போகும்போது உணவும் தண்ணீரும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டார்கள். கி.மு. 323ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பாபிலோனில் இறந்துபோனான்.
பாரசீகத்தை ஜெயிக்கப் போனவன் தன் தாய் நாடாகிய மாசிடோனியாவைப் பார்க்காமலேயே இறந்தான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பத்து மூன்று. தனது கொஞ்சகால வாழ்க்கையில் இவன் சாதித்தது என்ன? சில போர்களை வென்று புகழ்பெற்றான். அவன் பெரிய படைத்தளபதி என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அவன் வீண் பெருமையும் அகங்காரமும் கொண்டவனாகவும் எவ்விதக் கொடிய செயலுக்கும் அஞ்சாதவனாக இருந்தான். தன்னை தெய்வத்துக்குச் சமமாக எண்ணியிருந்தான். அவன் கோபம் கொண்டபோது தன்னுடைய சிறந்த நண்பர்களில் சிலரைக் கொன்று, பெரிய பட்டணங்களையும் அவற்றில் வாழும் மக்களையும் அழித்திருக்கிறான். வானத்தில் தோன்றும் எரி நட்சத்திரம்போல அவன் தோன்றி மறைந்தான். அவனுடைய சாம்ராஜ்யமும் சீர்குலைந்து சிதறிப்போயிற்று. ‘உலகத்தை வென்றவன்’ என்று அலெக்சாந்தரை அழைக்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய பகுதியைத் தவிர இந்தியாவை அவன் ஜெயிக்கவில்லை. சீனாவுக்கு அருகில்கூடச் செல்லவில்லை.
அவனுக்குப் பிறகு அவனுடைய தளபதிகள் அவனுடைய பேரரசை பங்கு போட்டுக் கொண்டார்கள். தாலமி என்பவன் பங்குக்கு எகிப்து கிடைத்தது. அலெக்சாண்டிரியா நகரை தலைநகராகக் கொண்டு, எகிப்து ஒரு வல்லரசாக விளங்கியது. அலெக்சாண்டிரியா நகரம் கலைக்கும் கல்விக்கும் தத்துவ ஞானத்துக்கும் புகழ்பெற்று இருந்தது.
பாரசீகமும், மெசபொடேமியாவும், ஆசியா மைனரில் ஒரு பகுதியும், செலூகஸ் (Seleucus) என்ற படைத் தலைவனுக்குக் கிடைத்தது. அலெக்சாண்டர் வென்ற இந்தியாவின் வடமேற்குப் பகுதியும் இவனுக்கே கிடைத்தது. ஆனால் அலெக்சாண்டர் இறந்தவுடன் கிரேக்கப் படை இந்தியாவிலிருந்து துரத்துப்பட்டது.
கி.மு. 326ல் அலெக்சாந்தர் இந்தியாவுக்கு வந்தான். அலெக்சாண்டரின் படையெடுப்பால் இந்தியர்களுக்கும் கிரேக்கர் களுக்கும் இடையே தொடர்பு உண்டானதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அவன் காலத்துக்கு முன்பே இந்தியாவுக்கும் பாரசீகம், கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும் இடைவிடாத உறவு இருந்து வந்திருக்கிறது.
அலெக்சாண்டரின் படையெடுப்பும் அவனுடைய மரணமும் இந்தியாவில் மௌரிய சாம்ராஜ்யம் என்று ஒரு பெரிய சாம்ராஜ்யம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இந்திய சரித்திரத்தில் சிறப்பான காலப் பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆகவே, இதை நாம் சற்று விரிவாகக் பார்ப்போம்.